கண்டனூர் நாகலிங்கய்யா – வேதாந்தக் கவிஞர்

கண்டனூர் நாகலிங்கய்யா வேதாந்தத் தத்துவங்களை அழகாக எளிய தமிழில், அனைத்து வகை மக்களுக்கும் புரியும் வண்ணம் எழுதி உள்ளார்.

வேதாந்த நூல்கள் வாழ்வின் அர்த்தங்களையும் பாதைகளையும் மக்களுக்குப் புரிய வைப்பவை. ஞானம் எனும் அறிவு முதிர்ச்சி, வேறு கோணத்தில் உலகைப் பார்த்தல் மற்றும் காரணக் காரியங்களை அறிதல் என்பவையே அவை.

இத்துறை சார்ந்த நூல்களைக் கோவிலூர் மடம் நிறையவே வெளியிட்டது. ஸ்ரீஆண்டவர் சுவாமிகள் அதற்கான பாதையை முன்னெடுத்தார்.

அவரின் சீடரான கண்டனூர் நாகலிங்கய்யா, கோவிலூர் மடத்தில் இருந்து கொண்டு, பல அரிய நூல்களை எழுதியும் அவற்றைப் பதிப்பிக்கவும் செய்தார். அவை காலத்தால் அழிக்க முடியாத ஞானப் புதையல்கள் ஆகும்.

வடமொழியில் எழுதப்பட்ட மாபெரும் வேதாந்த நூல்களைத் தமிழ் மரபுக்கு ஏற்ப மாற்றித் தமிழில் எழுதியுள்ளார்.

கோவிலூர் மடத்தில் இவரோடு தங்கி இருந்த பல சாதுக்கள் எழுதிய வேதாந்த நூல்களைப் பதிப்புக்குக் கொண்டு சென்று, அழகிய பக்க வடிவமைப்புக்களுடன் வெளியிட உதவியவராகவும் நாகலிங்கய்யா இருக்கின்றார்.

தமிழ்ப் பணியும் ஆன்மீகப் பணியும் ஆற்றிய இவரின் வாழ்க்கை வரலாறு தமிழ் இலக்கிய வரலாற்றில் இன்றுவரை பெரிதாகப் பேசப்படவில்லை.

இவரின் தமிழ்ப் புலமையையும், கற்றறிந்த ஞானத்தையும், இவரின் பாடல்களின் சொல் வீரியத்தையும், எடுத்துக்காட்டாய் கூறிய வாழ்வின் சித்திரங்களையும், உண்மைகளையும், விரிந்த எண்ணப் போக்குகளையும் எதிர்காலச் சமூகம் அறிந்து கொள்ள வேண்டும்.

நாகலிங்கய்யாவின் வாழ்வு

அருணாச்சலக் கவிராயர், திருநெல்வேலி வாணிவிலாசம் பிரஸ் மூலமாக, 1898-ஆம் ஆண்டு நாற்பத்தி ஆறு பக்கங்களுடன், ”நாகலிங்க தேசிகர் பிள்ளைத் தமிழ்” என்னும் அரிய நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ஸ்ரீலஸ்ரீ நாகலிங்கய்யாவின் வாழ்வும் பணியும் பாடல் அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

காரைக்குடி அருகாமையில் உள்ள கண்டனூர் என்னும் ஊரில், பெரியகருப்பன் செட்டியாருக்கும் சொர்ணவல்லி என்ற பொற்கொடியாள் அவர்களுக்கும் மூன்றாவது மகனாக நாகலிங்கம் அவர்கள் பிறந்தார்.

ஊரில் பெரிய தனவைசியக் குடும்பத்தைச் சார்ந்தவர். சூரக்குடிக் கோயிலைக் குலக் கோயிலாகக் கொண்டவர்.

திருநெல்வேலியில் அச்சகம் வைத்துத் தொழில் செய்து பணம் ஈட்டி வந்த நிலையில், திருமணம் ஆகிக் குழந்தைகள் இருக்கும் நிலையில், மனம் துறவு வாழ்க்கையின் மேல் பற்றுக் கொண்டு கோவிலூர் மடத்தில் துறவு பூண்டார்.

தன் அண்ணன் சின்னத்துறவு ஆண்டவர் மற்றும் சாதுக்கள் உடன் இணைந்து கோவிலூர் ஆண்டவரிடம் சென்று, வேதாந்தப் பாடம் கற்று அதன்பின் துறவு பூண்டு, கண்டனூர் வேதாந்த மடத்தை நிறுவிச் சாதுக்கள் நிறையப் பேர்களுக்கு வேதாந்தப் பாடங்களை நடத்தி இருக்கிறார்.

சாதுக்களுடன் இணைந்து பல்வேறு நூல்களை உருவாக்கியும் புதுப்பித்தும் தமிழ்ப் பணி செய்திருக்கிறார்.

பல ஊர்களில் உள்ள வேதாந்த மடங்களுக்குச் சென்று அங்குள்ள திருக்கோயில்களில் வழிபாடு செய்து, மடத்திலுள்ள செயல்பாடுகளைச் செம்மைப்படுத்தி, சில திருக்கோயில்களில் திருப்பணிகள் செய்தும் ஆன்மீகப் பணி செய்திருக்கிறார்.

நாகலிங்கய்யாவின் சீடர்களாகப் பலர் இருந்துள்ளனர்.

அதில் அவரது மகனார் முத்துராமலிங்கய்யா, பழனியப்பச் செட்டியார், வீரப்பச் செட்டியார், சிவ சாமிநாத பிள்ளை, கண்டனூர் சின்னத்துரை சுவாமிகள் போன்றோர் இருந்திருக்கின்றனர்.

அதேபோல், அவருக்குக் குருவாக வேதாந்த பாடம் கற்றுத்தரும் ஆன்மீகக் குருவாகக் கோவிலூர் ஸ்ரீஆண்டவர் அவர்களையும், திருப்புவனம் வேதாந்த மட ஸ்ரீ காசிகாநந்த ஞானாச்சாரியார், பெரியதுறவு ஆண்டவர் மற்றும் அருணாச்சலம் எனும் சின்னத்துறவு ஆண்டவர் ஆகியோர்களை ஏற்றுக் கொண்டார்.

சூரக்குடி நகரச் சிவன் கோயிலின் அற்புதமான நிலைக்குக் காரணம் ஐயாவின் மனமே ஆகும். அய்யா அவர்கள் மிகப் பெரும்பொருளால் உதவி செய்ததே காரணம் ஆகும். பல திருப்பணிகளை இக்கோயிலுக்குச் செய்துள்ளார்.

இராமேஸ்வரம் நகரத்தார் விடுதி இவரால் கட்டப்பட்டதாகும். இவரே நிலம் வாங்கி அதில் மிகப்பெரிய அளவிற்குச் செலவு செய்து, விடுதியும் கட்டித் தந்தார்.

இராமேஸ்வரம் கோயிலில் ஒரு திருச்சுற்று மண்டபத்தைக் கட்டித் தந்துள்ளார்.

தான தர்மங்கள் செய்யும் கொடை வள்ளலாகத் திகழ்ந்த நாகலிங்கய்யா, தமிழ் நூல்கள் வெளிவருவதற்கும் பல்வேறு வகைகளில் தமது செல்வத்தை வாரி வழங்கி இருக்கின்றார்.

நாகலிங்கய்யா எழுதிய‌ நூல்கள்

இராமலிங்க சுவாமிகள் பாசுரம்

நால்வர் துதி

ஆத்மா நாமம்

எது சொரூபம் காரியம்

ஞான அந்தாதி

பஞ்சகோசம்

பஞ்ச தசப் பிரகரணம் (மொழி பெயர்ப்பு நூல்)

வாசுதேவமனனம் (மொழி பெயர்ப்பு நூல்)

ஜீவன் முக்திப் பிரகரணம் (மொழி பெயர்ப்பு நூல்)

நாகலிங்க ஐயாவின் தமிழ்ப்பணி வரலாற்றில் குறிப்பிடத்தக்கதாகும்.

வடமொழியிலிருந்து மூன்று நூல்களைத் தமிழ்ப்படுத்தி எழுதி போது, வட சொற்களைக் கூடுமானவரைத் தவிர்த்துத் தூய தமிழில் பாடல்கள் புனைந்த புலவராகத் திகழ்கிறார்.

’யோகி’ எனும் பட்டமும், ’ஐயா’ எனும் பட்டமும் பக்தர்களால் இவருக்கு வழங்கப்பட்டது எனும் செய்தி வேதாந்த பாடல்கள் மூலம் அறிகிறோம்.

நாகலிங்கய்யாவின் முக்தி

இவர் முக்தி அடைந்ததும், கண்டனூர் வேதாந்த மடத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார். கண்டனூரில் உள்ள அந்த இடத்தில் தற்பொழுது புதிதான கோவில் கட்டப்பட்டுள்ளது.

கண்டனூர் நாகலிங்கய்யா கோவில்
கண்டனூர் நாகலிங்கய்யா கோவில்

அக்கோயிலில் இன்றும் சித்ரா பௌர்ணமி அன்று நாகாலிங்கய்யா குருபூஜை நடைபெறுகிறது. பக்தர்கள் இன்றும் இத்திருக்கோயிலுக்கு வந்து அருளுடன் ஆசிகளையும் பெற்றுக் கல்வியறிவையும் ஞானத்தையும் பெற்றுச் செல்கின்றனர்.

இவரின் சீடர்களும் அளப்பரிய தமிழ்ப்பணியைச் செய்துள்ளனர். வேதாந்த நூல்கள் வரிசையில், கண்டனூர் வேதாந்த மடம் சார்பான நூல்கள் அதிகளவில் வந்துள்ளன என்பது பெருமையான செய்தியாகும்.

வேதாந்தத் துறையில் தமிழை வளர்த்த நாகலிங்க ஐயா, காலத்தால் பதிவு செய்யப்பட வேண்டியவர் என்பதை மறந்து விடக்கூடாது.

இவ்வாறு தமிழ்ப்பணி செய்த நாகலிங்க ஐயா மட்டுமல்ல, அவரது மகனார் மற்றும் சீடருமான முத்துராமலிங்கய்யாவின் வாழ்க்கையும் தமிழ்ப்பணி நிறைந்ததாகும்.

அவர் செய்த தமிழ்ப் பணிகளும் தமிழ் இலக்கிய வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும் . அவர் எழுதியுள்ள நூல்களாக நாம் அறிவது:

கும்பாபிடேகக் கவித்திரட்டு

சூரக்குடி- கும்பாபிடேகக் கவிதை

சற்குரு விளக்கம்

சிவாலய சீரணோத்தாரண விதி

வேதாந்தக் கும்மி

புதுவயல் சுந்தரராசப் பெருமாள் கும்மி

கப்பற்சிந்து

சுவானுபவத் திருவாக்கியங்கள்

சுவானுபவத் திருவாக்கு

சொரூபாநு சந்தான நாமங்கள்

முழுட்சுலட்சண சாரம்

இவ்வாறு தமிழ்ப்பணி செய்த கண்டனூர் முத்துராமலிங்கய்யா தமது தந்தையாரைப் போல் ஆன்மீகப் பணியையும் அதாவது, வேதாந்தப் பிரச்சாரத்தை மேற்கொண்டுத் தமிழகத்திலுள்ள பல திருத்தலங்களுக்குச் சென்று வந்தார் என்பதையும் அறிகின்றோம்.

பிறரையும் தன்னைப்போலவே கருதிக் கேட்டவைகள் அனைத்தையும் வாரி வழங்கிய பெருந்தகையாக இவரும் இருந்துள்ளார் என்பதை இவர் மேல் பிறர் பாடியுள்ள பாடல்கள் வழி அறிகின்றோம்.

கேட்பதற்கும் வாழ்க்கை நெறியாய் கடைபிடிப்பதற்கும் மேன்மக்கள் என்றும் மேன்மக்களே.

தமிழ் வரலாற்றில் இடம் பெற வேண்டிய சிறப்பிற்குரிய இஸ்லாமியப் பெண் ஒருவரின் தமிழ்ப்பணி குறித்துக் காண அடுத்தவாரம் வரைக் காத்திருப்போம்.

புதையல் தேடுவோம்…

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com

அடுத்தது

முந்தையது

2 Replies to “கண்டனூர் நாகலிங்கய்யா – வேதாந்தக் கவிஞர்”

  1. வேதாந்தக் கவிஞர் கண்டனூர் நாகலிங்கய்யா பற்றி இன்று நான் இந்த உரையின் வாயிலாக அறிந்து கொண்டேன்.

    மகத்தான அவர் தமிழ்ப் பணி ஈடு இணையற்றவை.

    அவரது மகனார் மற்றும் சீடருமான முத்துராமலிங்கய்யாவின் வாழ்க்கையும் தமிழ்ப் பணி நிறைந்ததாகும் என்ற ஓர் அற்புதமான செய்தி சொல்லி இருக்கிறீர்கள். அதேபோல் தாங்களின் தமிழ்ப் பணியும் மெச்சத் தகுந்தது.

  2. இந்த வாரம் கண்டனூர் நாகலிங்கய்யா வேதாந்தத் தத்துவங்களை பற்றிய கட்டுரை, முந்தைய வாரத்தின் வேதாந்த மடங்கள் பற்றிய தொகுப்பின் தொடர்ச்சி.

    வேதாந்த நூல்கள் வாழ்வின் அர்த்தங்களையும் பாதைகளையும் மக்களுக்குப் புரிய வைப்பவை. அதை கண்டனூர் நாகலிங்கய்யா தன் வாழ் நாள் லட்சியமாக கொண்டிருந்திருக்கிறார். எப்போதும் போல தமிழ்ப் பணியும் ஆன்மீகப் பணியும் ஆற்றிய இவரின் வாழ்க்கை வரலாறு தமிழ் இலக்கிய வரலாற்றில் பெரிதாகப் பேசப்படவில்லை என்பது உண்மை .

    நாகலிங்கய்யா அப்போதே வடமொழியில் எழுதப்பட்ட மாபெரும் வேதாந்த நூல்களைத் தமிழ் மரபுக்கு ஏற்ப மாற்றித் தமிழில் எழுதியுள்ளார்.

    கவிஞர் நாகலிங்கய்யாவின் தமிழ்ப் புலமையையும், கற்றறிந்த ஞானத்தையும், இவரின் பாடல்களின் சொல் வீரியத்தையும், எடுத்துக்காட்டாய் கூறிய வாழ்வின் சித்திரங்களையும், உண்மைகளையும், விரிந்த எண்ணப் போக்குகளையும் எதிர்காலச் சமூகம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பாரதி சந்திரனின் இந்த கட்டுரை ஒரு தவிர்க்க முடியாத பதிவு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.