கண்ணன்

கண்ணன் எங்கள் கண்ணனாம்.

கார் மேக வண்ணனாம்.

வெண்ணெய் உண்ட கண்ணனாம்.

மண்ணை உண்ட கண்ணனாம்.

 

குழலி னாலே மாடுகள்,

கூடச் செய்த கண்ணனாம்.

கூட்ட மாகக் கோபியர்

கூட ஆடும் கண்ணனாம்.

 

மழைக்கு நல்ல குடையென

மலை பிடித்த கண்ணனாம்.

நஞ்சுப் பாம்பின் மீதிலே

நடனம் ஆடும் கண்ணனாம்.

 

கொடுமை மிக்க கம்சனைக்

கொன்று வென்ற கண்ணனாம்.

தூது சென்று பாண்டவர்

துயரம் தீர்த்த கண்ணனாம்.

 

அர்ச்சு னர்க்குக் கீதையை

அருளிச் செய்த கண்ணனாம்.

நல்ல வர்க்கே அருளுவான்,

நாங்கள் போற்றும் கண்ணனாம்.

– அழ. வள்ளியப்பா