எனக்கு வெகு நாட்களாகக் கண்ணப்ப நாயனார் புராணம் குறித்த ஓர் ஐயம்! அதில், திருக்காளத்தி மலையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் ‘குடுமித் தேவர்‘ என்று தான் குறிப்பிடப்படுகிறார்.
கண்ணப்பரும், அர்ச்சகரும் அக்குடுமித் தேவருக்கு மலர்கள் சூடுவதும் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற வருணனைகளும் சிவன் உருவச்சிலை வடிவாக இருந்ததையே காட்டுகின்றன.
தவிர, சிவனின் கண்களில் குருதி வடிந்ததும், கண்ணப்பர் வலது கண்ணிற்குத் தனது வலது கண்ணை ஈந்து குணப்படுத்தியதும், இடது கண்ணிற்குத் தனது இடது கண்ணை ஈயும்போது சிவன் தடுத்தாட் கொள்வதும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதுவும் சிவன் உருவச்சிலை வடிவாகவே அங்கு இருந்தார் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
ஆனால், இந்தக் கதை குறித்த ஓவியங்களில் (நான் பார்த்த) சிவன் லிங்க வடிவாகவே காணப்படுகிறார். இது முற்றிலும் பொருத்தமற்றதாக உள்ளது.
கண்ணப்ப நாயனார் புராணத்திலிருந்து சான்றுகள்
கண்ணப்ப நாயனார் புராணத்தில் உள்ள கீழ்க்காணும் பாடல்களைப் படித்துப் பாருங்கள்.
745.நாணனே தோன்றும் குன்றில் நண்ணுவேம் என்ன நாணன்
காணநீ போதின் நல்ல காட்சியே காணும் இந்தச்
சேணுயர் திருக்கா ளத்தி மலைமிசை யெழுந்து செவ்வே
கோணமில் குடுமித் தேவர் இருப்பர்கும் பிடலாம் என்றான்.
753. திங்கள்சேர் சடையார் தம்மைச் சென்றவர் காணா முன்னே
அங்கணர் கருணை கூர்ந்த அருள்திரு நோக்க மெய்தத்
தங்கிய பவத்தின் முன்னைச் சார்புவிட் டகல நீங்கிப்
பொங்கிய ஒளியின் நீழல் பொருவில்அன் புருவம் ஆனார்.
772. இளைத்தனர் நாயனார் என்று ஈண்டச் சென்று எய்தி வெற்பின்
முளைத்து எழு முதலைக் கண்டு முடிமிசை மலரைக் காலில்
வளைத்த பொற் செருப்பால் மாற்றி வாயின் மஞ்சன நீர் தன்னை
விளைத்த அன்பு உமிழ்வார் போன்று விமலனார் முடிமேல் விட்டார்
773. தலை மிசைச் சுமந்த பள்ளித் தாமத்தைத் தடங் காளத்தி
மலை மிசைத் தம்பிரானார் முடி மிசை வணங்கிச் சாத்திச்
சிலைமிசைப் பொலிந்த செங்கைத் திண்ணனார் சேர்த்த கல்லை
இலை மிசைப் படைத்த ஊனின் திரு அமுது எதிரே வைத்து
784. எய்திய சீர் ஆகமத்தில் இயம்பிய பூசனைக்கு ஏற்பக்
கொய்த மலரும் புனலும் முதலான கொண்டு அணைந்தார்
மை தழையும் கண்டத்து மலை மருந்தை வழி பாடு
செய்து வரும் தவம் உடைய முனிவர் சிவ கோசரியார்
788. பழுது புகுந்தது அது தீரப் பவித்திரமாம் செயல் புரிந்து
தொழுது பெறுவன கொண்டு தூய பூசனை தொடங்கி
வழுவில் திரு மஞ்சனமே வரும் முதலாக வரும் பூசை
முழுது முறைமையின் முடித்து முதல்வனார் கழல் பணிந்தார்
789. பணிந்து எழுந்து தனி முதலாம் பரன் என்று பன் முறையால்
துணிந்த மறை மொழியாலே துடி செய்து சுடர்த் திங்கள்
அணிந்த சடை முடிக் கற்றை அங்கணரை விடை கொண்டு
தணிந்த மனத் திருமுனிவர் தபோ வனத்திடை சார்ந்தார்
812. உனக்கவன் தன் செயல் காட்ட நாளை நீ ஒளித்து இருந்தால்
எனக்கு அவன் தன் பரிவு இருக்கும் பரிசு எல்லாம் காண்கின்றாய்
மனக் கவலை ஒழிக என்று மறை முனிவர்க்கு அருள் செய்து
புனல் சடிலத் திரு முடியார் எழுந்து அருளிப் போனார்
816. மாறில் ஊன் அமுதும் நல்ல மஞ்சனப் புனலும் சென்னி
ஏறு நாண் மலரும் வெவ்வேறு இயல்பினில் அமைத்துக் கொண்டு
தேறுவார்க்கு அமுதம் ஆன செல்வனார் திருக்காளத்தி
ஆறுசேர் சடையார் தம்மை அணுக வந்து அணையா நின்றார்
818. அண்ணலார் திருக் காளத்தி அடிகளார் முனிவனார்க்கு
திண்ணனார் பரிவு காட்டத் திரு நயனத்தில் ஒன்று
துண்ணென உதிரம் பாய இருந்தனர் தூரத்தே அவ்
வண்ணவெஞ் சிலையார் கண்டு வல் விரைந்து ஓடி வந்தார்
822. வேடரைக் காணார் தீய விலங்குகள் மருங்கு எங்கும்
நாடியுங் காணார் மீண்டும் நாயனார் தம்பால் வந்து
நீடிய சோகத்தோடு நிறை மலர்ப் பாதம் பற்றி
மாடுறக் கட்டிக் கொண்டு கதறினார் கண்ணீர் வார
832. செங்கண் வெள்விடையின் பாகர் திண்ணனார் தம்மை ஆண்ட
அங்கணர் திருக் காளத்தி அற்புதர் திருக்கை அன்பர்
தங்கண் முன் இடக்குங் கையைத் தடுக்க மூன்று அடுக்கு
நாக கங்கணர் அமுதவாக்குக் கண்ணப்ப நிற்க என்ற
இது குறித்து எவரேனும் விளக்கம் அளித்தால் எனது ஐயம் தீரும்!
உருவச்சிலை உள்ள ஓவியங்கள் இருந்தாலும் வெளியிடலாம்!
புதிதாகவும் வரையலாம்!
குறிப்பு: நான் கண்ணப்ப நாயனார் புராணத்தைக் கரைத்துக் குடித்தவன் என்று யாரும் எண்ணிவிட வேண்டாம்!
காவடி மு.சுந்தரராஜன்
கைபேசி: 9842231074
indianthaatha@yahoo.com