கண்ணப்ப நாயனார் – பக்தியின் உச்சம்

கண்ணப்ப நாயனார் சிவனின் கண்களில் இருந்து வழிந்த இரத்தத்தை நிறுத்த, தன்னுடைய கண்களைத் தானம் செய்த வேடர்.

கண் தானம் செய்ப‌வர்களின் முன்னோடி இவரே.

இவர் புகழ்மிக்க அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். கண்ணப்ப நாயனார் பற்றித் தெரிந்து கொள்ள கதையைத் தொடர்ந்து படியுங்கள்.

பொத்தப்பி நாட்டில் உடுப்பூர் என்ற ஒரு ஊர் ஒன்று இருந்தது. இது இயற்கை வளமும், மலை வளமும் நிறைந்ததாக விளங்கியது.

பொத்தப்பி நாடு இன்றைய தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு இடையில் அமைந்திருந்தது.

உடுப்பூரில் வேடுவர்கள் வாழ்ந்து வந்தனர். அவ்வேடுவர்களின் தலைவராக நாகன் என்பவர் இருந்தார். அவருடைய மனைவி நங்கை.

நாகன் வேட்டையாடுவதில் திறமைசாலியாக இருந்ததோடு தம் குடிகளைப் பாதுகாப்பதில் வல்லவராகவும் விளங்கினார்.

அவருக்கு நீண்டநாட்களாக குழந்தைப்பேறு வாய்க்கவில்லை. தன்னுடைய இஷ்ட தெய்வமான முருகனிடம் நாகனும் நங்கையும் குழந்தைப்பேற்றினை வேண்டிக் கொண்டிருந்தனர். முருகனின் அருளால் நங்கை ஆண் மகவு ஒன்றை ஈன்றெடுத்தாள்.

அக்குழந்தையை தூக்கியதும் திண் எனக் கனமாக இருந்ததால் அதற்கு திண்ணன் என்று பெயரிட்டான் நாகன். திண்ணனும் திறமையான வேட்டைக்காரனாக வளர்ந்தான்.

முதுமைப்பருவம் எய்ததால் நாகன் குடிமக்களின் விருப்பத்திற்குகேற்ப திண்ணனுக்கு வேடுவர் தலைவனாக முடிசூட்டினான்.

ஒருநாள் திண்ணன் வேடுவர்கள் சிலரோடு வேட்டைக்குப் புறப்பட்டான்.

வேடர்கள் மான், முயல், காட்டெருமை, யானை உள்ளிட்டவைகளை வேட்டையாடினர். அப்பொழுது காட்டுப்பன்றி ஒன்று வேடுவர்களிடம் இருந்து தப்பித்து ஓடியது. அப்பன்றியை விரட்டியபடி திண்ணன் ஓடினான். திண்ணனைத் தொடர்ந்து நாணன், காடன் இருவரும் பன்றியைப் பிடிக்க ஓடினார்கள்.

வெகுதொலைவுக்குச் சென்ற அப்பன்றியை இறுதியில் திண்ணன் தன்னுடைய உடைவாளால் வீழ்த்தினார். திண்ணனின் வேட்டைத்திறனைக் கண்ட காடனும், நாணனும் பெருமிதத்தோடு மகிழ்ச்சியும் அடைந்தனர்.

திண்ணன் அவர்களிடம் பன்றியை விரட்டி வெகுதூரம் வந்ததால் களைப்புடன் பசியும் உண்டாகி யுள்ளதால் உணவும், தண்ணீரும் தேவையாக இருப்பதாகக் கூறினான்.

“இன்னும் சற்று தூரத்தில்தான் பொன்முகலி ஆறு ஓடுகிறது. அங்கு சென்று தண்ணீர் அருந்தலாம். அதற்குள் காடன் பன்றியை தீயிலிட்டு பக்குவப்படுத்தி வைக்கட்டும்” என்று அனுபவசாலியான நாணன் கூறினான்.

நாணன் கூறுவதை சரி என்று ஒப்புக்கொண்ட திண்ணன் அவனுடன் நடந்தான். சிறிது தூரத்தில் பொன்முகலி ஆற்றினை இருவரும் அடைந்தனர். அப்போது ஆற்றின் அருகில் இருந்த காளத்தி  (காளஹஸ்தி)  மலையை திண்ணன் கண்டான்.

அதனைக் கண்டதும் திண்ணனுள் பசிக்களைப்பு நீங்கி பேரானந்தம் பெருகியது. மலையின் மேல் ஏற வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்க நாணனிடம் தன்னுடைய விருப்பத்தைக் கூறினான்.

“இந்த மலையில் மீதிலேறினால் பல அரியக் காட்சிகளை நாம் காணலாம். அத்துடன் அங்கிருக்கும் குடுமித்தேவரையும் (சிவலிங்கம்) கும்பிட்டுவிட்டு வரலாம்” என்றான் நாணன்.

இருவரும் மலையின் மீதேறி குடுமித்தேவரை அடைந்தனர். குடுமித்தேவரைக் கண்டதும் திண்ணனுக்கு அளவில்லா மகிழ்ச்சி தோன்றியது. அவரை உற்று நோக்கிய திண்ணன் குடுமித்தேவரின் மேலிருந்த பச்சிலை மற்றும் பூக்கள் பற்றி கேட்டான்.

நாணன் “உன்னுடைய தந்தையுடன் குடுமித்தேவரை கும்பிட வந்த போது, சிவகோசாரியார் ஒருவர் குடுமித்தேவரை பொன்முகலி நீரால் குளிப்பாட்டி பச்சிலை, பூக்கள், அன்னத்தையும் படைத்து வழிபடுவதைக் கண்டிருக்கிறேன். அவர்தான் இன்றும் குடுமித்தேவருக்கு பூக்களும், பச்சிலையும் படைத்திருக்க வேண்டும்.” என்றான்.

‘அப்படியா, இம்முறையில்தான் குடுமித்தேவரை வழிபட வேண்டுமா?’ என்று தனக்குள் கூறிக் கொண்டான்.

நெடுநேரம் குடுமித்தேவரை பார்த்த வண்ணம் இருந்தான் திண்ணன். குடுமித்தேவரை வழிபட வேண்டும் என்ற எண்ணம் மேலேழ மலையிலிருந்து கீழறங்கி காடனை அடைந்தான்.

தீயில் வதக்கி வைத்திருந்த பன்றிக்கறியை சுவைத்துப் பார்த்து நல்ல சுவையுடையவைகளை தேக்கம் தொன்னையில் வைத்து ஒரு கையில் கொண்டான் திண்ணன்.

மற்றொரு கையில் வில்லினை எடுத்துக் கொண்டு குடுமித்தேவரை நோக்கி நடக்கத் தொடங்கினான். வ‌ழியில் காட்டுப்பூக்களைப் பறித்து தன்னுடைய தலைமுடியில் சொருகிக் கொண்டான். வாயில் பொன்முகலி ஆற்று நீரை உறிஞ்சி கொண்டான்.

நாணனும், காடனும் திண்ணனைப் பின் தொடர்ந்தனர். குடுமித்தேவரின் இருப்பிடத்தை அடைந்ததும் திண்ணன் தன்னுடைய காலால் குடுமித்தேவரின் மீதிருந்த பச்சிலைகளையும், பூக்களையும் சுத்தப்படுத்தினான்.

வாயிலிருந்த ஆற்று நீரால் குடுமித்தேவரை அபிசேகித்தான். தலைமுடியில் சொருகியிருந்த காட்டுப்பூக்களைக் கொண்டு அலங்காரம் செய்தான். தொன்னையில் கொண்டு வந்திருந்த சுவைமிகுந்த பன்றி இறைச்சியை படையலிட்டான்.

நீண்ட நேரம் அங்கு அமர்ந்து குடுமித்தேவரைப் பார்த்த வண்ணம் இருந்தான். நாணனும், காடனும் திண்ணனை இருப்பிடம் செல்ல அழைத்தனர்.

வனவிலங்குகளிடமிருந்து குடுமித்தேவரைப் பாதுகாக்க வேண்டுமாதலால் தன்னால் இருப்பிடம் திரும்ப இயலாது என்று திட்டவட்டமாக தெரிவித்தான் திண்ணன்.

நாணனும், காடனும் அங்கியிருந்து இருப்பிடத்திற்கு சென்று நாகனிடம் விவரத்தை தெரிவித்தனர். நாகன் வந்து அழைத்தபோதும் குடுமித்தேவரை விட்டு வரஇயலாது என்று கூறி திண்ணன் அங்கியிருந்து செல்ல மறுத்து விட்டான்.

விடியவிடிய குடுமித்தேவருக்கு காவலிருந்த திண்ணன் பொழுது புலர்ந்ததும் குடுமித்தேவருக்கு படையலிட உணவினைத் தேடி அங்கிருந்து சென்றான்.

சிவகோச்சாரியாரும் சிவனாரை வழிபட குடுமித்தேவரின் இருப்பிடத்தை அடைந்தார். அரனாரைச் சுற்றிலும் பன்றிக்கறி இருப்பதைக் கண்டதும் திடுக்கிட்டார். மனம் நொந்து அவ்விடத்தை சுத்தம் செய்தார்.

தன்னுடைய முறையின்படி பொன்முகலி நீரால் அபிசேகித்து அன்னமும், பச்சிலையும், பூக்களும் கொண்டு இறைவனை வழிபாடு நடத்தி விட்டு சென்றார்.

திண்ணன் மான், முயல் போன்றவற்றை வேட்டையாடி அவற்றை தீயிலிட்டு வதக்கி சுவை பார்த்து தொன்னையில் வைத்தான். அக்கறியில் தேனடையிலிருந்த தேனைப் பிழிந்தான்.

காட்டுப்பூக்களைப் பறித்து தலைமுடியில் சொருகியும், பொன்முகலி நீரை வாயில் எடுத்துக் கொண்டும் குடுமித்தேவரை அடைந்தான். தன்னுடைய வழக்கப்படி தான் கொண்டு வந்த பொருட்களைக் கொண்டு வழிபட்டான்.

இவ்வாறாக ஐந்து நாட்கள் சிவகோச்சாரியாரும், திண்ணனும் தம்தம் முறைப்படி குடுமித்தேவரை வழிபட்டனர்.

ஆறாவது நாள் காலையில் சிவகோச்சாரியார் மிகவும் மனவருத்தத்துடன் ‘இறைவா, விலங்குகளின் இறைச்சியைக் கொண்டு யார் உனக்கு படையலிடுகிறார்கள். இத்தகாத செயல் எனக்கு பெரும் மனவருத்தத்தை அளிக்கிறது.’ என உருகி வேண்டினார்.

‘நீ நினைப்பது தவறு. ஏன் மேல் பேரன்பு கொண்ட ஒருவனே இவ்வாறு செய்கிறான். அவனுடைய பேரன்பினை நீ காண வேண்டுமாயின் இவ்விடத்தில் சென்று மறைந்து கொள்.’ என்ற தேவ வாக்கியம் ஒன்று சிவகோச்சாரியருக்கு ஒலித்தது.

சிவகோச்சாரியாரும் தேவ வாக்கின்படி மறைவிடத்தில் ஒளிந்து கொண்டார்.

சற்று நேரத்தில் திண்ணன் அங்கு வந்தான். வழக்கம் போல் காலால் சிவலிங்கத்தைச் சுத்தம் செய்தான்.

வாயிலிருந்த பொன்முகலி நீரால் அபிசேகித்தான். தலையிலிருந்து காட்டுப்பூக்களால் அலங்காரம் செய்தான். தொன்னையிலிருந்த விலங்கு இறைச்சியை படையலிட்டான். பின்னர் குடுமித்தேவரைப் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் குடுமித்தேவரின் வலக்கண்ணிலிருந்து இரத்தம் வரத் தொடங்கியது. அதனைக் கண்டதும் திண்ணன் துடித்தான்.

ஓடிச்சென்று பச்சிலைகளைக் கொண்டு வந்து சாறு பிழிந்து இரத்தம் வந்த கண்ணில் பூசினான். இரத்தம் நிற்கவில்லை.

சிறிது நேரம் யோசித்தான். ஊனுக்கு ஊன்தான் மருந்து என்பார்கள் என்றபடி கையிலிருந்து அம்பால் தன்னுடைய வலக்கண்ணைத் தோண்டி எடுத்து குடுமித்தேவரின் இரத்தம் வந்த கண்ணில் அப்பினான்.

குடுமித்தேவரின் வலக்கண்ணிலிருந்து இரத்தம் வருவது நின்றது.

அதனைக் கண்டதும் திண்ணன் தன்னுடைய வலியை மறந்து ஆனந்தக் கூத்தாடினான். சற்றுநேரத்தில் குடுமித்தேவரின் இடக்கண்ணிலிருந்து இரத்தம் வழியத் தொடங்கியது.

திகைத்த திண்ணன் அம்பால் இடக்கண்ணைத் தோண்ட நினைக்கையில் ‘இடக்கண்ணையும் தோண்டி விட்டால் இரத்தம் வழியும் குடமித்தேவரின் இடதுக்கண் இருக்கும் இடம் தெரியாது. ஆதலால் காலால் இடதுகண்ணை அடையாளம் கண்டு கொள்வேன்’ என்று எண்ணினான்.

உடனே தனது காலின் பெருவிரலை இரத்தம் வழிந்த குடமித்தேவரின் இடது கண்ணில் வைத்துக் கொண்டு அம்பால் தன்னுடைய இடக்கண்ணை தோண்ட முற்பட்டான்.

அப்போது ‘நில் கண்ணப்பா, நில் கண்ணப்பா’ என்றபடி திண்ணனின் கைகளை குடுமித்தேவர் தடுத்தார். நடந்தவைகளைக் கண்டு கொண்டிருந்த சிவகோச்சாரியார் திகைத்தார். திண்ணனுக்கு மறுபடியும் பார்வை வந்தது.

‘என்னுடைய வலப்பக்கம் வா’ என்றார் சிவனார். சிவனருளால் கண்ணப்ப நாயனார் சிவலோகத்தை அடைந்தார்.

கண்ணப்ப நாயனார் குருபூஜை தை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

சிவன் மேல் கொண்டிருந்த பேரன்பினால் கண்ணப்ப நாயனார் தன்னுடைய கண்களைத் தானமாகத் தந்தார். இவரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் கலை மலிந்தசீர் நம்பி கண்ணப்பர்க்கு அடியேன் என்று பெருமைப்படுகிறார்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.