கண்ணீரைச் சேமியுங்கள்! கண்ணீரைச் சேமியுங்கள்!வரும் காலம் வறுமையின் காலம்
கண்ணீரையும் தண்ணீராய் மாற்றிப் பருகும் காலம்
கண்ணீரைச் சேமியுங்கள்! கண்ணீரைச் சேமியுங்கள்!
கண்ணெடுத்து பாராத கன்னியருக்காய்
கண்ணீர் சிந்திய வாலிபனே நாளைய
உன் சந்ததி பெண்களே இல்லாத தேசத்தில்
வாழப் போகிறதே, சிந்தித்துப் பார்த்து
கண்ணீரைச் சேமியுங்கள்! கண்ணீரைச் சேமியுங்கள்!
அண்டை தேசத்து மனிதனின் பட்டினிச்
சாவை எண்ணி கறி சமைத்துக் கொண்டே
கண்ணீர் சிந்தினாயே இந்நிலைதான்
உன்பின் நிலைமை என்பதை சிந்தித்து பார்த்து
கண்ணீரைச் சேமியுங்கள்! கண்ணீரைச் சேமியுங்கள்!
எனக்காக அழ வேண்டாம்; உங்களுக்காகவும்
உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் என்று
பட்டமரம் தூக்கிய பச்சைமரம் சொன்னதே சிந்தித்துப் பார்த்து
கண்ணீரைச் சேமியுங்கள்! கண்ணீரைச் சேமியுங்கள்!
– S. சுசிலா
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!