கண்ணுக்கு ஒளி தரும் பிஸ்தா

கண்ணுக்கு ஒளி தரும் பிஸ்தா என அழைக்கப்படக் காரணம், கண் நோய்கள் வராமல் தடுக்கும் ஊட்டச் சத்துக்கள் நிறைய அதில் இருப்பதே ஆகும்.

பிஸ்தா எல்லோருக்கும் பிடித்தமான பருப்பு ஆகும். இதன் இனிப்பு சுவை மிகவும் பிரபலம். ஆதலால்தான் ஐஸ்கிரீம், இனிப்புகள், மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட பலவற்றில் இதனுடைய சுவை பலரையும் கவர்ந்திழுக்கிறது.

இது மிகவும் பழங்காலம் முதல் அதாவது கிமு 6000-ல் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சிற்றுண்டியாக கொறித்தும்,  உணவுப் பொருட்களோடு சேர்த்து சமைத்தும் உண்ணப்படுகிறது.

இது ஆண்டு முழுவதும் கிடைக்கிறது. இதனை காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்து வைத்து ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம்.

இது அனகார்டியாசி குடும்பத்தைச் சார்ந்தது. முந்திரி பருப்பு, மா போன்றவை இதனுடைய உறவினர் ஆவர். இதனுடைய அறிவியல் பெயர் பிஸ்டாசியா வேரா என்பதாகும்.

பிஸ்தாவின் அமைப்பு மற்றும் வளரியல்பு

இது இலையுதிர் மரவகை பூக்கும் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. பிஸ்தாவானது நீண்ட வெப்பமான வறண்ட கோடை மற்றும் மிதமான குளிர்காலம் கொண்ட இடங்களில் செழித்து வளருகிறது. இது உவர்ப்பு தன்மை உள்ள இடங்களிலும் நன்கு வளரும்.

 

பிஸ்தா மரம்
பிஸ்தா மரம்

 

இது கோடையில் 48டிகிரி செல்சியஸ் வெப்பத்தையும், குளிர்காலத்தில் -10டிகிரி செல்சியஸ் வெப்பத்தையும் தாங்கி வளரும். நீர் தேங்காத மண் இதற்கு மிகவும் அவசியம்.

இம்மரமானது பயிர் செய்யப்பட்டு 10-12 வருடங்களில் பலன் கொடுக்கத் துவங்குகிறது. இதனுடைய காயானது நன்கு பழுக்க நீண்ட வெப்பமான கோடை தேவை. இதனுடைய ஆயுட்காலம் சுமார் 300 ஆண்டுகள் ஆகும்.

இம்மரமானது 10மீட்டர் வரை வளரும் இயல்புடையது. இம்மரமானது 10-20 செமீ நீளமுள்ள இலைகளைக் கொண்டுள்ளது. இதில் ஆண் மற்றும் பெண் மரங்கள் தனித்தனியே உள்ளன.

 

பிஸ்தா இலை
பிஸ்தா இலை

 

இதனுடைய பழமானது ட்ரூப் வகையைச் சார்ந்தது. இதனுள் நீளமான பச்சைநிற சதைப் பற்றுள்ள உண்ணக்கூடிய விதை உள்ளது. இதனையே நாம் பிஸ்தா என்கிறோம்.

 

கண்ணுக்கு ஒளி தரும் பிஸ்தா
கண்ணுக்கு ஒளி தரும் பிஸ்தா

 

இப்பழமானது கண் வடிவத்தில் கிரீம் நிறத்தில் கடினமான ஓட்டுப்பகுதியால் மூடப்பட்டுள்ளது. இது சுமார் 2செமீ நீளமும், 1செமீ அகலமும் 0.7-1 கிராம் எடையையும் கொண்டுள்ளது.

இப்பழானது முதிரும்போது மேல்தோல் சிவப்பு அல்லது இலையுதிர் மஞ்சள் நிறமாக மாறி லேசாக திறந்திருக்கும்.

 

பழுக்கும்போது
பழுக்கும்போது

 

ஒவ்வொரு பிஸ்தா மரமும் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை 50கிலோகிராம் விதைகளைக் கொடுக்கிறது.

பிஸ்தாவின் வரலாறு

பிஸ்தாவின் தாயகம் மத்திய ஆசியா (இன்றைய ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான்) ஆகும். கிமு 6750-ஆம் ஆண்டிலே இவை உணவாக பயன்படுத்தப்பட்டதாக தொல்லியல் ஆய்வுகள் கூறுகின்றன.

‘நம்மிடையே நன்கு அறியப்பட்ட, சிரியாவின் தனித்துவமான மரங்களில் ஒன்றான பிஸ்தா ரோமன் புரொகான்சால் இத்தாலிக்கு அறிமுகப்படுத்தப்பட்டது’ என்று பிளின் தி எல்டர் தனது இயற்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்.

கிமு 700-ல் கிங் மெரோடாக்-பாலாதன் ஆட்சியின்போது பாபிலோனின் தொங்கும் தோட்டங்களில் பிஸ்தா மரங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

நவீன பிஸ்தா முதன்முதலில் மத்திய ஆசியாவில் வெண்கல காலத்தில் பயிரிடப்பட்டது. இதற்கு ஆரம்ப உதாரணம் உஸ்பெகிஸ்தானின் ஜார்குடான் ஆகும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியா, நியூ மெக்ஸிக்கோ, கலிஃபோர்னியா ஆகிய இடங்களில் தோட்டத்து மரங்களாக இவை பயிர் செய்யப்பட்டன.

இன்றைக்கு ஈரான், ஈராக், சிரியா, ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, துருக்கி, சீனா உள்ளிட்ட நாடுகளில் இது விளைவிக்கப்படுகிறது.

வணிக நோக்கங்களுக்காக வளர்க்கப்படும் மிகவும் பிரபலமான பிஸ்தா வகை கெர்மன் ஆகும்.

 

கெர்மன் பிஸ்தா
கெர்மன் பிஸ்தா

 

 இது ஈரானின் கெர்மன் பிராந்தியத்திலிருந்து வரும் சுவையான மற்றும் சிறந்த தரமான பிஸ்தாக்களில் ஒன்றாகும்.

பிஸ்தாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

இது மிகஅதிகளவு விட்டமின் பி6(பைரிடாக்ஸின்), விட்டமின் இ, அதிகளவு விட்டமின் பி1(தயாமின்) ஆகியவற்றைப் பெற்றுள்ளது. மேலும் இதில் விட்டமின் ஏ, சி, பி3(நியாசின்), பி5(பான்தெனிக் அமிலம்), பி9(ஃபோலேட்டுகள்) ஆகியவையும் உள்ளன.

இதில் மிகஅதிகளவு காப்பர், அதிகளவு இரும்புச்சத்து, மாங்கனீசு, பாஸ்பரஸ் ஆகியவற்றைப் பெற்றுள்ளது. இதில் பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம், துத்தநாகம், செலீனியம் ஆகியவையும் உள்ளன.

இப்பருப்பில் ஒற்றை நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் மிகஅதிகளவு காணப்படுகின்றன. மேலும் இது கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து, பீட்டா கரோடீன் ஆகியவற்றையும் பெற்றுள்ளது.

பிஸ்தாவின் மருத்துவ பயன்கள்

கண்களின் நலத்திற்கு

பிஸ்தாவில் உள்ள கரோடீனாய்டுகள் கண்களின் நலத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன. முதிய வயதினருக்கு உண்டாகும் கண் புரை ஏற்படுவதை பிஸ்தாவினை அளவாக தினந்தோறும் உட்கொண்டால் தவிர்க்கலாம்.

மேலும் இதில் உள்ள கரோடீனாய்டுகள் கண் தசை அழற்சி உண்டாவதையும் தடுக்கிறது. கரோடீனாய்டுகளை உடல் உட்கிரகிக்க கொழுப்பு அவசியமானது.

பிஸ்தாவானது கரோடீனாய்டுகளையும், கொழுப்புகளையும் ஒன்றாகப் பெற்றுள்ளது. எனவேதான் கண்ணுக்கு ஒளி தரும் பிஸ்தா என்று அழைக்கப்படுகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு

தினந்தோறும் உணவில் சரிவிகித உணவாக பிஸ்தாவை உட்கொள்ளும்போது, இதில் உள்ள ஒற்றை நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகளை நீக்கி விடுகின்றன.

இதில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகள், பைட்டோஸ்டெரால்ஸ் ஆகியவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறந்தவை.

இப்பருப்பில் உள்ள எல்-அர்ஜினைன் என்னும் அமினோ அமிலம் தமனிகள் தடித்து கடினமாவதையும், இரத்த கட்டிகள் உருவாதையும் தடுக்கின்றன. எனவே இப்பருப்பினை அளவாக அடிக்கடி உண்டு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

ஆரோக்கிய உடல் எடை பராமரிப்பிற்கு

குறைந்த கலோரி, அதிக புரதம், குறைந்த நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள், அதிக நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ள பிஸ்தா ஆரொக்கிய உடல் எடை பராமரிப்பிற்கு ஏற்ற சிறந்த உணவு என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

நல்ல செரிமானத்திற்கு

இதில் உள்ள நார்ச்சத்தானது செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது. 30கிராம் பிஸ்தாவில் 3கிராம் நார்சத்து உள்ளது. இது ஒருநாளைக்கு தேவையான நார்ச்சத்து அளவினைவிட அதிகமாகும்.

உடலுக்குத் தேவையான இரும்புச்சத்தினைப் பெற

இதில் உள்ள அதிகளவு செம்புச் சத்தானது உணவில் உள்ள இரும்புச்சத்தினை உடல் உட்கிரகிக்க உதவுகிறது. இதனால் ஹீமோகுளோபினின் அளவு அதிகரித்து அனீமியா உண்டாவதை பிஸ்தா தடைசெய்கிறது.

சருமப் பாதுகாப்பிற்கு

இதில் உள்ள விட்டமின் இ-யானது செல் சவ்வினைப் பாதுகாத்து சருமத்தை பளபளக்கச் செய்கிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிஜென்ட்டுகள் சூரிய புறஊதாக் கதிர்களிலிருந்து பாதுகாப்பு சருமத்தைப் பாதுகாக்கிறது.

இதில் உள்ள எண்ணெய் சத்து சரும வறட்சி, சருமச் சுருக்கம் ஆகியவற்றைத் தடுக்கிறது.

நோய் எதிர்ப்பாற்றல் மற்றும் ஆரோக்கிய நரம்பு செயல்பாடுகளைப் பெற

உடல் நோய் எதிர்ப்பாற்றலைப் பெற விட்டமின் பி6(பைரிடாக்ஸின்) மிகவும் அவசியம். விட்டமின் பி6 குறைபாடு மூளையின் செயல்பாடுகளை பாதிப்பதோடு நோய் எதிர்ப்பாற்றலையும் குறைக்கிறது.

விட்டமின் பி6-னாது நரம்பு மண்டலம் நன்கு செயல்பட தேவையான அமினோ அமில உற்பத்திக்கு உதவதோடு சீரான வளர்ச்சிதை மாற்றத்திற்கும் காரணமாகிறது.

எனவே இதனை உண்டு நோய் எதிர்ப்பாற்றல் மற்றும் ஆரோக்கிய நரம்பு செயல்பாடுகளைப் பெறலாம்.

பிஸ்தாவினை தேர்வு செய்து பயன்படுத்தும் முறை

பிஸ்தாவானது கடைகளில் கடினமான மேல் தோலுடன் உப்பு அல்லது இனிப்பு சேர்த்து வறுத்தோ அல்லது வறுக்காமல் அப்படியோ, தோல் இல்லாமலும் ஆண்டு முழுவதும் கிடைக்கிறது.

நாம் இதனை வாங்கும்போது மேல்புற கடினமான தோல் இல்லாமல் முழுமையான, ஒரே அளவிலான, சீரான நிறத்துடன் கனமான, அதிகம் பதப்படுத்தாத பிஸ்தாவினைத் தேர்வு செய்ய வேண்டும்.

சீரற்ற நிறத்துடன், பிளவுகள் கொண்ட, மக்கிய வாசனை கொண்டவற்றைத் தவிர்க்கவும்.

மேல்புற கடினமான தோல் நீக்கியவற்றை காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்து அறையின் வெப்பநிலையில் வைத்து மாதக் கணக்கில் பயன்படுத்தலாம்.

மேல்புற கடினமான தோல் உள்ளவற்றை குளிர்பதனப் பெட்டியில் வைத்தே பயன்படுத்த வேண்டும்.

பிஸ்தா கேக்குகள், இனிப்புகள், ஐஸ்கிரீம்கள், பிஸ்கெட்டுகள், பழங்கள் அல்லது காய்கறிகள் சாலட் ஆகியவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.

 

இனிப்பு
இனிப்பு

 

கேக்
கேக்

 

பிஸ்கெட்
பிஸ்கெட்

 

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, கண்ணுக்கு ஒளி தரும் பிஸ்தா பருப்பினை அளவோடு உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.

வ.முனீஸ்வரன்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.