கண்ணே என் கண்ணுக்குள்
கருவிழி நீதானே!
காலங்கள் எத்தனை ஆனாலும்
காட்சிகள் எப்படி போனாலும்
காண்பவை எல்லாம் உன்முகமே
கற்பனை எல்லாம் உன்வடிவே! (கண்ணே என்)
அன்றொருநாள் என் தோள்மீது
தூங்கியே எனக்கு சுகம் தந்தாய்!
அடுத்த நொடியில் காலாலே
மிதித்தே என்னை மகிழ்வித்தாய்!
சந்தன சிற்பம் உனைசுமக்கும்
பெருமையில் என்னை மூழ்கடித்தாய்!
சற்றே நான் அயர்ந்தாலும்
சரியாய் எனக்குள் சிரித்திருப்பாய்! (கண்ணே என்)
சின்னஞ்சிறு விரல் கொண்டே நீ
கொடுத்த உணவே அமிழ்தாகும்!
சீறடி கொண்டே நீ நடக்க
சிறந்த கவிதையும் உருவாகும்!
வண்ணப்பூக்களின் வாசனையோ நீ
வருவதை முன்னே அறிவிக்கும்!
வாடா மலரோ உன்முகமே நோய்
தீர்த்திடும் மருந்தென நிலைத்திருக்கும்! (கண்ணே என்)
முன்னொரு பிறவியில் நான்செய்த
தவமே எனக்கே மகளானாய்!
மூன்று தமிழும் தருகின்ற
நிறைவினை எனக்குள் தருகின்றாய்!
பின்வரும் தலைமுறை உனைபோற்றும்
விதமாய் நீயும் வளர்கின்றாய்!
பெண்ணே நீ என் மகளெனினும் வரும்
பிறவியில் எனக்கே தாயாவாய்! (கண்ணே என்)
–இராசபாளையம் முருகேசன் கைபேசி: 9865802942
மறுமொழி இடவும்