அக்னி நட்சத்திரத்தின் ஆதிக்கம் முடிந்துவிட்ட நிலையிலும் கொஞ்சமும் இரக்கமின்றி காலை ஏழுமணிக்கே தன் வெறித்தனத்தை அவிழ்த்துவிட்டு சுட்டெரிக்க ஆரம்பிக்கும் சூரியன் காலை ஒன்பது மணிவாக்கில் சாதுவாய் இருந்து விடுவானா என்ன?
வெப்ப அலையைப் பரவ விட்டு, ‘நான் யார் தெரியுமா? சூரியனாக்கும்! வெளீல தலையக் காட்டினா எந்த ஜீவராசியானலும் சரி பொசுக்கிடமாட்டேன் பொசுக்கி’ என்று இரக்கமின்றித் தன் அக்னிக் கதிர்களை வாரி வீசிக் கொண்டிருந்தான்.
காலை எட்டு மணிக்கே டிவியை ஆன் செய்துவிட்டு பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை வெகு சிரத்தையோடு பார்த்துக் கொண்டிருந்தார் நாற்பத்தாறு வயது பரமேஸ்வரன்.
கிச்சனிலிருந்து ரவா உப்புமாவின் வாசனை வெளியே வந்து ஹாலில் சுழன்று பரவியது.
‘இன்னும் சற்று நேரத்தில் ரவா உப்புமாவைத் தின்னும் தண்டனை தனக்குக் காத்திருப்பதை மனது சொல்ல பரமு (பரமேஸ்வரன்) அதைத் தின்னாமல் தவிர்ப்பதற்கு என்ன காரணத்தைச் சொல்லலாமெனச்சில வினாடிகள் யோசித்தார்.’
முடிவினை எட்டுவதற்குள் கிச்சனிலிருந்து வெளியே வந்த சகதர்மினி வைதேகி “ஏன்னா, இப்பிடி மசமசன்னு டீவிய பாத்துண்டு ஒக்காந்திருக்கேள். இன்னிக்கு ஞாயித்திக்கெழம ஆபீஸ் லீவுன்னு நெனப்பா? இன்னிக்கு செவ்வாக் கெழம. நீங்கதான் ஆபீஸ்க்கு லீவு போட்ருக்கேள். எதுக்கு லீவு போட்ருக்கேள்கறதாவது ஞாபகம் இருக்கா. அதும் மறந்துட்டேளா?”
“இல்லடி.. தேர்தல் முடிவு..”
“என்ன தேர்தல் முடிவு? கீர்தல் முடிவு? எவஞ் ஜெயிச்சா நமக்கென்ன?எவந் தோத்தா நமக்கென்ன? அவ அவன் கோடிகோடியா கொள்ளையடிச்சி சுவிஸ் பேங்குல போடுவாமா? சிக்கப்பூர்ல பதுக்குவமா? க்ரீன்லாந்துல தீவுகளா வாங்கிப் போடுவாமா? ஸ்ரீலங்கால பிசினஸ் பண்ணுவாமா?
பேங்குகளுக்கே கடன் குடுப்பமான்னு பத்து என்ன பல தலைமுறைக்கு சொத்து சேத்து வெச்சருக்குறது போறாதுன்னு மேக்கொண்டு பணத்த வாரிச்சுருட்ட தேர்தல்ல நிக்கிறானுக.
ஜனங்களுக்கு சேவ செய்ய வேத்து வடியுதா என்ன?”
“ஏய் வைது! (வைதேகி) இப்டீல்லாம் வாசல்ல நின்னுண்டு யார்ட்டியாவது கத்தி பேசிடாத. கட்சிக்காரன் எவங் காதுலயாவது விழுந்துடப் போறது. தலப் பின்னல அறுத்துடுவான். வீட்டு மேல பெட்ரோல் குண்டு வீசிடுவான்” பரமு சொல்லி முடிப்பதற்குள் “ஐயோ!” என்றபடி வலது கையால் வாயைப் பொத்திக் கொண்டாள் வைதேகி.
“அது.. அந்த பயம் இருக்கனும்..” சிரித்தார் பரமு.
“அடப்போங்கோன்னா. நாட்டுல நடக்கறாதப் பாத்தா கடுப்பாருக்கு. அவ அவன் அடிக்கிற கூத்து. தன்ன தட்டிக்கேக்க யாருமில்லேன்னு பண்ற அட்டூழியம். சாமிகூடன்னா அவுனுகளுக்கு பயந்துண்டு செவனேன்னு கண்ண மூடிண்டு ஒக்காந்துருக்கு.
நியாயம், தர்மம், மனசாட்சி, கடவுள்னு சொல்லிண்டு ஒவ்வொண்ணுக்கும் பயந்துண்ருக்குற நாம என்னத்தக் கண்டோம்?
சேத்தாப்ல ஒரு இருவதாயிரத்த கையில வெச்சுக் கண்ணால பாத்ருப்பமா? மாசம் ஒன்னாந்தேதி சம்பளம் வருதுன்னுதாம் பேரு.இருவது தேதியாச்சுன்னா பத்து காசு கையில இருக்கறதில்ல. பறவா பறக்க வேண்டிருக்கு. அடுத்த ஒன்னாந்தேதி எப்படா வரும்னு தவியாத் தவிக்க வேண்டிருக்கு.
பட்ஜெட் போட்டுக் குடும்பம் நடத்தி நடத்தி ச்சே.. ஏண்டா ஜென்மம் எடுத்தோம்னு அலுப்பா இருக்கு.. இப்ப பாரு நம்ம ஹரீஷ் +2 முடிச்சாச்சு. பி.எஸ்ஸியோ, பி.காமோ படீன்னா கேக்க மாட்டேங்றான்.
நம்ம வசதிக்கு அதாண்டா முடியும்னு சொன்னா கேக்கறானா? அவ ஃபிரெண் டெல்லாம் பி.இ.தான் படிக்கப் போறாளாம். நானும் அதாம் படிப்பேங்கறான்.
நா என்ன மெடிகல் படிக்கனுங்கறேனா? பி.இ.தானே படிக்கனும்ங்றேன். அதக்கூட ஒங்களால படிக் வெக்க முடியாதா?
முடியாதுன்னா சொல்லுங்கோ மேக்கொண்டு எதுவுமே படிக்கல. ப்ளஸ்2வே போதும். எதாவது சிட் ஃபண்ட் நிறுவனத்துக்கு வேலைக்குப் போயிடறேங்கிறான்.
இவன் என்ஜினியரிங் மூணாவது வருஷம் படிக்கறத்தையே பொண்ணு ஸ்வேதா +2 முடிச்சிட்டு தான் பாரா மெடிகல் படிக்கனும் சேத்துவிடுன்னு ஆரம்பிப்பா. அந்த படிப்புதா அவ லட்சியம்னு இப்பவே சொல்லிண்ருக்கா.
அதுக்கும் வருஷத்துக்கு ஒரு லட்சம் ஒன்ர லட்சம்னு கட்டணுமாம். பசங்கள படிக்க வெச்சு முடிக்கிறதுக்குள்ள என்ன பாடுபடப்போறமோ? நெனச்சாலே அகில் திகிலா இருக்கு. நம்ம மாரி எத்தனையோ குடும்பங்க, குடும்பம் நடத்தவே ததுங்கிணதோம் போட்டுண்ருக்கு. இதுல இவுனுகள்ள எவஞ் ஜெயிச்சா என்ன? எவன் தோத்தா என்ன?
இப்ப பாரு. குருவி சேக்கறா மாதிரி கஷ்டப்பட்டுக் காசுசேத்து சொந்தவீடு கட்டி வாழனும்னு ஆசப்பட்டு எட்டு வருஷம் முன்னாடி அரைகிரவுண்டு ப்ளாட்டு வாங்கிப் போட்டோம்.
இப்ப அததான் வித்து புள்ளைய படிக்க வெக்கப் போறோம். எவன் வந்து ஆண்டாலும் நம்ம வாழ்க்கைத் தரம் ஒசந்துடுத்தா என்ன? நம்ம மாதிரி மிடில் க்ளாஸுக்கும் ஏழபாழைக்கும் செய்யவா இவாள்ளாம் தேர்தல்ல நிக்கறா? சரி.. சரி.. தரகர் கோவிந்துக்கு ஃபோன் பண்ணேளா? ப்ளாட்ட பாக்க வரேன்னு சொன்னவா வராளாமா?”
“ம்.. வரேன்னாளாம். நீங்க எங்க வீட்டுக்கு வந்துடுங்க சார். ப்ளாட்ட வாங்கிக்கறேன்னு சொன்ன பார்ட்டியும் எங்க வீட்டுக்கு வந்துடுவாங்க. போய்ப் பாத்துடுவோம்னு சொன்னாரு கோவிந்து!” என்றார் பரமு.
“பேசின பணம் நிச்சயமா கெடைக்குமோனோ? அது வேற கவலையா இருக்குன்னா”
“ம்.. ம்.. நாலு லட்சம் வரும். தரகு கோவிந்து நாப்பதாயிரம் கமிஷன் கேக்கறாப்ல. நாப்பதாயிரம் கமிஷன் போக மூன்ர சொச்சம் கைக்கு வரும். அத வெச்சு எப்டியோ ஹரீஷ பி.இ. படிக்க வெச்சுடலாம்னு வெச்சுக்கோ. இன்னும் ரெண்டே வருஷம் ஸ்வேதா ரெடியாயிடுவா. அவள படிக்க வெக்க விக்கறத்துக்கு ஒன்னுமில்ல” கவலை தெரிந்தது பரமுவின் குரலில்.
“திக்கற்றவாளுக்கு தெய்வமே துணை. மொதல்ல ஹரீஷ் படிப்புக்கான கவலயப் பட்டு முடிப்போம். அப்பறம் ரெண்டு வருஷம் கழிச்சு ஸ்வேதா பத்தி கவலப் படுவோம்” சொல்லிச் சிரித்த வைதேகியின் சிரிப்பில் விரக்தி வழிந்தது.
ஹால் ஜன்னல் அருகே சென்று வெளியே பார்த்த பரமுவின் முகத்தை வெப்பக் காற்றுத் தடவிச் சென்றது.
‘ரொம்ப வெய்யில். எப்டிதான் அவ்வளவு தூரம் போய்ட்டு வரப் போறேனோ? வண்டி வேற மக்கர் பண்றது. அத நம்பி கெளம்பக்கூடாது.பஸ்லதான் போய்ட்டு வரணும்’ என்று நினைத்தவர்.
“வைது வண்டி சரியில்ல. பஸ்லதான் போணும். கோவிந்து வீட்டுக்குப் போய்ட்டேன்னா அவர்கூட அவர் வண்டீல ப்ளாட்டுக்குப் போயிடலாம். சரி கெளம்பறேன்.”
“ப்ளாட்ட மூணு வருஷமா ஒரு நட கூட போய்ப் பாக்கல. எந்த கதீல கெடக்கோ! பத்திரம் பட்டா சிட்டால்லாம் எடுத்துண்டேளா?”
“ம்.. எடுத்துண்ட்டேன்”
“சரி வாங்கோ. டிபன் எடுத்து வெக்கறேன்.சாப்புடுங்கோ!”
“என்ன பண்ணீருக்க? ரவா உப்புமா தானே?”
“உப்புமா இல்ல. கிச்சடி”
“இல்ல வைது எனக்கு காலேலேந்தே வயறு ஒருமாதிரி இருக்கு. ரவா கிவால்லாம் வேண்டாம். போற எடத்துல ப்ரர்ச்சன குடுத்தா நெலம அசிங்கமாயிடும். அதால ரெண்டு பிஸ்கெட்டும் காபியும் குடு போதும்.”
“ரவான்னாலே ஒங்குளுக்கு பேதி வந்துடுமே.. திரும்ப எவ்வளவு நாழியாகுமோ? பசிக்காதா?”
“எதுக்கு இன்னிக்குன்னு ரவா கிச்சடிலாம் பண்ண. கோதும மாவ கரச்சு தோசையாவது வாத்ருக்கலாமோல்யோ நாம் பாத்துக்கறேன் விடு.ரெண்டு பாட்டில்ல தண்ணி குடு. வெய்யில் தாங்கல. தேவப்படும்”
கிளம்பும் நேரம். சுவாமி அலாமாரியின் முன் நின்று கண்மூடி ப்ரார்த்தனை செய்துவிட்டு டாகுமெண்ட்கள் அடங்கிய பையையும் தண்ணீர் பாட்டில் வைத்திருந்த பையையும் எடுத்துக் கொண்டு, “வரேன் வைது!” என்று சொல்லிவிட்டு செருப்பை மாட்டிக் கொள்ள செருப்புகள் வைக்கப்பட்டிருந்த ஸ்டாண்ட் அருகில் வந்தபோதுதான் முதல் நாள் வழக்கமாய் அணியும் செருப்புகளில் ஒன்றின் கட்டைவிரல் நுழைக்கும் பகுதி அறுந்து போனது ஞாபகம் வந்தது. ‘திக்’கென்றது பரமுவுக்கு.
“வைது! நேத்திக்கு செருப்பு அறுந்து போச்சு. மறந்தே போய்ட்டேன். இப்ப என்ன செய்யறது?” கவலையோடு கேட்டார் பரமு.
“அட ராமா! இப்ப என்னத்த செய்யறது? செருப்பில்லாம வெளியே எப்டிப் போறது? அட ஆண்டவனே!” என்ற அங்கலாய்த்த வைதேகி, “இருங்கோ.. இருங்கோ..” என்றபடி நீலக்கலர் கேரிபேக்கொன்றில் போட்டு சுருட்டி வைக்கப்பட்டிருந்த சிகப்புக்கலர் வாரோடுகூடிய ஸ்லிப்பர் ஜோடியை வெளியே எடுத்துப் போட்டாள்.
பரமுவின் முகத்தில் மின்னலடித்தது. “கொஞ்சம் பழசாதான் இருக்கு. இருந்தாலும் இப்பக்கி இதாவது கெடச்சுதே. ரொம்ப தேங்ஸ் வைது!” சொல்லிக் கொண்டே ஹவாய்ச் சப்பலை காலில் மாட்டிக் கொண்டபோது அது காலைவிட ஒரு இன்ச் நீட்டமாக இருந்தது.
“ப்ச்..” என்றாள் வைதேகி.
“நீங்கதானே வாங்கினேள். போட்டு பாத்து வாங்கினேளா இல்லியா? பாரு காலவிட நீட்டமா, கண்ராவி!”
“சரி சரி விடு, இதாவது இருக்கே பத்ரமா இரு. வாசகதவ தாப்பா போட்டுக்கோ .நா வரேன்” தெருவில் கால் வைத்தார்.
பஸ்ஸில் கூட்டமோ கூட்டம். மூச்சுத்திணறும் அளவு அடைத்துக் கொண்டு நின்றனர்.
ஜீவா நகரில் பஸ் நின்றபோது ‘திமுதிமு’வென்று நிறையப் பேர் இறங்கினார்கள்.
அவர்களில் ஒருவராய் பரமுவும் இறங்கித் தரையில் கால் வைத்த நேரம் பின்னால் இறங்கியவர் பரமுவின் காலைவிட ஒரு இன்ச் நீட்டமாக இருந்த சப்பலின் அந்த நீளமான பகுதியில் தவறுதலாகக் கால் வைத்துவிட அவர் கால் வைத்த அதேநொடி பரமு அந்தக் காலை அடுத்த அடி வைக்கத் தூக்க பட்டென சப்பல் அறுந்து மேல் வார் கழண்டு காலைவிட்டு நகர்ந்தது.
தான் கால் வைத்ததால் சப்பல் அறுந்ததை புரிந்துகொண்ட அந்த நபர் “ஸாரி..ஸாரி..” என்று சொல்லிவிட்டு கடந்து செல்லும் ஆட்டோவை.கைதட்டி “ஆட்டோ ஆட்டோ..” என்று கூவி அழைத்தபடி வேகமாய் நடையைக் கட்டினார்.
ஒரு சப்பல் அறுந்து போக நொந்துபோன பரமு, ரெண்டு சப்பலையும் ரோட்டோரம் வீசிவிட்டு அந்தத் தார்ச் சாலையில் தாரே உருகி ஓடும் அளவுக்கு வாட்டும் வெய்யிலில் வெற்றுக் காலை வைத்து நடக்க முடியாமல் தவித்துப் போனார்.
“ஜீவா நகர்ல தரகர் கோவிந்து வீடு எங்க இருக்கோ தெரீலயே! இந்த கொளுத்தர வெய்யில்ல நடக்கவும் முடீல..ஃபோன்னா செஞ்சு பாப்பமா?’” என்றபடி இரண்டு மூன்று முறை முயன்றும் ஸ்விட்ச் ஆஃப் என்றே பதில் வந்தது.
‘அட தெய்வமே! நம்மள வரச் சொல்லிட்டு இந்த ஆளு எங்கயாவது போய்ட்டாரா?’ சின்னதாய்க் கவலை எட்டிப் பார்த்தது மனதிற்குள்.
‘ம்கூம்.. செருப்பில்லாம இந்தக் கொடூர வெய்யல்ல நடக்கல்லாம் முடியாது. பேசாம திரும்பின்னா போயிடலாமா? தீடீர்னு பசிக்கவேற பசிக்கறது’ பையிலிருந்து வாட்டர் பாட்டிலை எடுத்துத்திறந்து வலது கையில் கொஞ்சம் சரித்து முகத்தில் வீசிக் கொண்டு பின்கழுத்திலும் தண்ணீரால் துடைத்துக் கொள்ள கொஞ்சம் இதமாக இருந்தது.பாட்டிலிலிருந்த தண்ணீரில் முக்கால் பங்கைக் குடித்தாகி விட்டது.
தண்ணீர் பாட்டிலை பைக்குள் போடும் போது ஃபோன் அழைத்தது.
“ஹலோ சார், எங்க இருக்கீங்க?” தரகு கோவிந்து.
“நடுரோட்டுல நிக்கிறேன் கொளுத்தர வெய்யில்ல” கத்த வேண்டும் போல் இருந்தது.
“ஜி.ஆர்.டி. நகைக்கடையோட விளம்பர போர்டு இருக்குமே அங்க நிக்கறேன்.”
“நீங்க அங்கியே இருங்க. நானும் பார்ட்டியும் அங்க வந்துடறோம்”
மூன்று ஆண்களும் ஒரு பெண்மணியும் இரண்டு டூவீலரில் வர, தரகு ஒருவண்டியில் தனியாக வந்தார்.
‘அப்பாடி!’ என்றிருந்தது பரமுவுக்கு. ‘தரகோடு வேறு யாராவது வந்திருந்தால் தன்பாடு திண்டாட்டமாகியிருக்கும்.. நல்லவேளை பிழைத்தோம்!’ என்று தோன்றியது.
“என்ன சார் நிக்கிறீங்க? வண்டியில வல்ல?” கோவிந்து கேட்கவும்..வெட்கமாகிப் போனது பரமுவுக்கு.
“அதில்ல! வண்டி பாதிவழி வரும்போது கொஞ்சம் ட்ரபுள் குடுத்திடுச்சு. அப்டியே தெரிஞ்ச ஒர்க் ஷாப்புல குடுத்துட்டு பஸ்ல வந்தேன்” சமாளித்தான்.
ப்ளாட் பார்க்க வந்திருந்த பார்ட்டியோடு கை குலுக்கினான்.
“பின்னிடி ஏறுங்க சார்!” தரகர் சொல்ல வண்டியின் பின் சீட்டில் ஏறிக் கொண்டான்.
“ப்ளாட் எந்த நகர்ல இருக்கு? ஏதோ பேர் சொன்னீங்க மறந்துட்டேன்” தரகர் கேட்கவும்..
“சுபம் நகர்!” என்றான் பரமு.
“பேரே மங்களகரமா இருக்கு சார். சூப்பர் சார். பரவால்ல நெறைய வீடுங்க வந்திருக்கு”
“ஆமாமா!” என்றார் பரமு..
“நம்ம ப்ளாட் எங்க சார் இருக்கு.?”
“தோ.. நேரா போய் லெஃப்ட்ல திரும்பினா பதினோராவது ப்ளாட்”
மூன்று வண்டிகளும் நேராகச் சென்று இடதுபக்கம் திரும்பி தெருமுனையிலேயே நின்றன.
ஆறுபேரும் வண்டியைவிட்டு இறங்கினார்கள். தெருவில் இங்கும் அங்குமாய் வீடுகள் எழும்பியிருந்தன.
பையிலிருந்து ப்ளாட்டுக்கான வரைபடத்தை எடுத்து தரகு கோவிந்துவிடம் கொடுத்தார் பரமு.
ஆறுபேரும் நடக்கத் தொடங்கினார்கள். ப்ளாட் நெம்பர் 1, 2, 3, 4 விரல் நீட்டி சொல்லிக் கொண்டே வந்தார் தரகு.
சில ப்ளாட்டுகள் குடியிருக்கும் வீடாகவும் சில பாதி கட்டப்பட்டும் சில பேஸ்மென்ட்டோடும் நின்ற நிலையில், பதினோராம் ப்ளாட் ட்யூ ப்ளக்ஸ் வீடாய் நிப்பான் பெயின்ட் அடிக்கப்பட்டு பளபளப்பாய் நின்று கொண்டிருந்தது.
உள்ளேயிருந்து டிவியில் தேர்தல் முடிவுகள் பற்றி தந்தி டிவி சேனலில் அசோகவர்த்தினி யாரையோ பேட்டி காணும் சப்தம் வாசலுக்கு வெளியே நிற்கும் இவர்கள் காதிலும் விழ அதிர்ந்து போனான் பரமு.
“சார்! என்னா சார்? பதினோராம் நம்பர் ப்ளாட் ஒங்குளுதுன்னு சொன்னீங்க.. இதுல வீடே இருக்கு”
“ஐயோ! இந்த பதினோராம் நம்பர் ப்ளாட்டு என்னோடது. நா பொய் சொல்லல. .இதுல எப்பிடி வீடு வரும்?
சார்! சார்!” வீட்டின் உட்புறம் பார்த்துக் கத்தினான் பரமு.
முகத்தில் பாதி மீசையோடு கன்னங்கரேலென்று ஆஜானுபாகுவாய் “எவண்டா இப்பிடி காட்டுக்கத்தலு கத்துறது?” என்று அதட்டும் தொனியில் கேட்டுக் கொண்டே கைலியும் முண்டா பனியனுமாய் ஒருவன் வெளியே வந்தான்.
அந்த ஆளைப் பார்த்த அடுத்த நொடி “அண்ணே.. அண்ணே.. நீங்களான்ணே..” என்றபடி வெகு பவ்யமாய் கைகளைக் கட்டிக் கொண்டார்கள் பரமுவைத் தவிர மற்ற அனைவரும்.
“சார்..சார்..இது பதினோராம் நம்பர் ப்ளாட்டு தானே!” பதட்டமாய்க் கேட்டார் பரமு.
“ஆமா, அதுக்கென்ன?”
“இது என்னோட ப்ளாட்டு சார். இதுல நீங்க எப்பிடி சார் வீடு கட்னீங்க. நா ப்ளாட்ட ஒங்குளுக்கு விக்கலயே?”
“என்னது? இந்த எடம் ஒங்குளுதா? என்ன ஜோக்கடிக்கிறீங்களா? எத்தினி பேர் கெளம்பிருக்கீங்க இப்பிடி பேசிக்கிட்டுத் திரிய? என்னய்யா தரகு என்ன இதெல்லாம்?”
“அண்ணே.. எனக்கு ஒன்னும் தெரியாதுண்ணே. ப்ளாட்டு இருக்கு வித்துகுடுங்கன்னு சொன்னாரு.. அதாண்ணே பார்ட்டிய ப்ளாட்ட காமிக்க அழச்சுக்கிட்டு வந்தேன். ப்ளாட்டு ஒங்களதுன்னு தெரியாதுங்க” பம்மினான் கோவிந்து.
“இல்ல.. இல்ல.. இது என்னோட ப்ளாட்டு” ஆவேசமாகக் கத்தினார் பரமு.
“யோவ்! ஒம்பேரு?”
“எம்பேரு பரமேஸ்வரன்”
“நா ராசமாணிக்கம்கிறவர்ட்ட கத்தகத்தையா சொளசொளயா பணத்த குடுத்து சார்பதிவாளரு ஆபீஸுல பத்திரம் எழுதி இந்தப் ப்ளாட்ட வாங்கிருக்கேன். போ. போ.. இங்க நின்னு பைத்தியம்மாரி கத்திக்கிட்டு நிக்காத..
ஒன்னுதுன்னு நிரூபிச்சு காட்டு.. அப்பிடி செஞ்சிட்டீன்னா இந்த வீட்ட சும்மாவே ஒனக்கு எளுதி வெச்சுடறேன். நா வெத்தாளுன்னு நெனச்சியா? லேய் கோவிந்து! நா யார்னு அந்தாளுட்ட சொல்லு!”
“பரமு சார், அண்ணன் கட்சி மேலிடத்துக்கு ரொம்ப நெருக்கமானவரு. இவுருக்கு இல்லாத எடமா வீடுகளா.. அண்ணனுக்கு இந்த எடம் புடிச்சி பேட்டு போல.. அதா வீணா அண்ணன பகச்சுக்காதீங்க.. அப்றம் ஒங்களால மீள முடியாது. நல்லபடியா வீடு போய்ச் சேருங்க”
“தேர்தல்ல எங்கட்சி ஜெயிச்சுக்கிட்டு இருக்கு. அதப்பாத்து கைதட்டி சந்தோஷப்பட்டுக்கிட்டு இருந்தேன். வந்துட்டான் கெடுக்க பைத்தியக்காரப் பய..” சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் திமிராய் நடந்து சென்றான் கட்சியாள்.
உள்ளே சென்ற கட்சியாளை தரகு கோவிந்தும் மற்றவர்களும் பரமுவைத் திரும்பிக்கூட பார்க்காமல் அம்போ என்று விட்டுவிட்டு பின் தொடர்ந்து சென்றார்கள்.
தனியாளாய் விடப்பட்ட பரமு சொந்தமான ப்ளாட்டை கட்சியாளிடம் இழந்து பரிதவித்து நிற்கும் பரமு, எப்படி வீடுவந்து சேர்ந்தாரோ அது கடவுளுக்கே வெளிச்சம்.. அப்படியொருவர் இருக்கும் பட்சத்தில்.
உள்ளே நுழைந்து சோஃபாவில் அமர்ந்து இருகைகளிலும் முகத்தைப் பதித்துத் தேம்பித் தேம்பி அழும் கணவனைப் பார்த்து, அவன் அழுகைக்கான காரணம் தெரியாமல் தானும் கதற ஆரம்பித்தாள் வைதேகி.
திருந்தாத அரசியல்வாதிகளும் அவர்களின் அல்லக்கைகளும் செய்யும் அட்டூழியங்களையும் அநியாயங்களையும் கண்டும் காணாமல் கண்மூடி தெய்வங்கள் மௌனமாய் அமர்ந்திருக்கும் வரை, இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்குமோ?
பரமு பதினோராம் நம்பர் ப்ளாட் தனதுதான் என்று நிரூபிக்கப் பல வருடங்கள் ஆகலாம்; அல்லது நிரூபிக்க முடியாமலே கூடப் போகலாம்..
ஒரு நடுத்தர வர்க்கத்துக் கற்பனையும் கனவுகளும் நசிந்து போய்க் காணாமல் போக காரணமானவர்களைத் தட்டிக் கேட்க யார் வருவார்?
கண்ணுக்கெட்டிய தூரம் வரை எவரையும் காணவில்லை.
காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்