பள்ளியில் ஆண்டு மலர் தயாரித்து வெளியிடப் போகிறார்களாம்.
மாணவர்களின் பங்கு அதில் நிறையவே இடம் பெற வேண்டும் என்றும், ஆண்டு மலருக்கான கதைகள், கட்டுரைகள், புதிர்கள், ஜோக்குகள் போன்றவற்றை மாணவர்கள் எழுதி சமர்ப்பிக்கலாம் என்றும் சுற்றறிக்கை வந்தது.
தன் எழுத்தாற்றலைக் காண்பிக்க நல்லதொரு சந்தர்ப்பம் கைகூடி வந்திருப்பது கண்டு சரவணனின் மனம் சிறகடித்துப் பறந்தது.
என்ன எழுதுவது? கதையா? கவிதையா? கட்டுரையா? ஜோக்கா? அல்லது புதிரா?.
ஏதோ ஒன்று கண்டிப்பாக ஆண்டு மலரில் இடம் பெற்றே ஆக வேண்டும் என தீர்மானித்துக் கொண்டவன், இரவும் பகலும் யோசித்தான்.
சரவணன் மூளையைக் கசக்கினான்; நூலகங்கள் சென்றான்; எண்ணற்ற புத்தகங்களைப் புரட்டினான்; படித்தான்; குறிப்புகள் எடுத்துக் கொண்டான். வெள்ளைத்தாள்கள் பல வீணாயின.
பலதரப்பட்ட மனிதர்களைச் சந்தித்தான். அவர்களின் குணாதிசயங்களை ஆராய்ந்தான். அன்றாடம் கண் முன் நடைபெறும் நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனித்தான்.
பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, தபால் அலுவலகம், கம்பெனிகள், ரயில் நிலையம், மார்க்கெட், பஜார், தியேட்டர், விமான நிலையம் என பல்வேறு இடங்களுக்கு சென்று அங்கு நிலவும் சூழ்நிலைகள், மனிதர்களின் போக்குகள், செயல்பாடுகளை மனதில் படம் பிடித்துக் கொண்டான்.
எத்தனையோ கருக்கள் உருவாயின. குறிப்பிட்ட ஒரு கருவை மையமாகக் கொண்டு யதார்த்தத்தையும் கலந்து எளிய நடையில் அழுத்தமான ஒரு கதையை எழுத ஆரம்பித்தான்.
பலமுறை படித்தான்; திருத்தங்கள் செய்தான். முடிவில் முழுசாக ஒரு கதை உருவாக, அழகான கையெழுத்தில் பிழைகளின்றி எழுதி சமர்ப்பித்தான்.
சரவணனின் அயராத உழைப்பு அங்கீகரிக்கப்பட்டு, அவனது கற்பனைகள் அச்செழுத்துக்களாய் உயிர்பெற்று அவனை ஆனந்தக்கடலில் தள்ளியது.
சக மாணவர்கள், ஆசிரியர்கள், தலைமையாசிரியர் அனைவரும் அவனது கற்பனையை எழுத்தைப் புகழ்ந்து தள்ளினார்கள். நல்லதோர் எதிர்காலம் அவனைக் கரம் நீட்டி அழைக்கக் காத்திருப்பதாகக் கூறினார்கள்.
புகழ்மாலையின் நறுமணத்தில் திக்குமுக்காடிப் போன சரவணன் பத்திரிக்கைகளுக்கும் எழுத ஆரம்பித்தான். பல படைப்புகள் திரும்பி வந்தன. சில வெளியாயின.
எழுத்துலகில் கொடி கட்டிப் பறக்க வேண்டும் என்கின்ற வெறி, உத்வேகம் அவனுள் ஏற்பட நேரம், காலம் இன்றி பல்வேறு படைப்புகளை உருவாக்குவதில் சிந்தனையையும் பொழுதையும் செலவிட்டான்.
பத்திரிக்கைகளில் படைப்புகள் வெளியாகி, படிப்பில் கவனம் குறைந்தது. அதனால் அவன் மதிப்பெண்களின் சதவீதம் கணிசமாகக் குறைய ஆரம்பித்தது.
பாராட்டுகளை வாரி வழங்கிய வாய்கள், அவன் உருப்படப்போவதில்லை என நாடி பிடித்து ஜோசியம் சொல்ல ஆரம்பித்தன. அவனை ஊக்குவித்தவர்கள் ஊசிகளாய் மாறி அவன் உள்ளத்தைக் குத்தி ரணமாக்கினார்கள்.
உறங்கிக் கிடந்த திறமைகளைத் தட்டி எழுப்பி உட்கார வைத்து சித்திரவதை செய்வதில் ஓர் அலாதியான இன்பமா?
இவர்கள் நோக்கத்தின் பின்னணியை சரவணால் புரிந்து கொள்ள முடியவில்லை.
தங்களின் இயலாமையைப் பொறாமை மூலம் வெளிப்படுத்துகிறார்களோ அல்லது ‘மாணவன்’ என்பதை மறந்து நான் தான் தடம் புரண்டு விட்டேனா?
என் சீனியர் பிரசாந்த் கூட பிளஸ் டூ மாணவர். சமீபத்தில் பிரபல வாரப்பத்திரிக்கை நடத்திய சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசான ரூபாய் பத்தாயிரத்தைத் தட்டிச் சென்றானே?
கிட்டத்தட்ட இருவருமே ஒரே ஓடத்தில் செல்பவர்கள்தான். அவனுக்கு மட்டும் ஓடத்தில் பயணம் ஒரே சீராய் தோன்றும் போது எனக்கு மட்டும் தள்ளாடுவது ஏன்?
இப்படியெல்லாம் மனதில் சிந்தனை அலைபாய்ந்து கொண்டிருக்க, ஒருநாள் எதிர்பாராதவிதமாய் பிரசாந்தைத் தனியே சந்தித்து ஆதங்கங்களைக் கொட்டினான் சரவணன்.
அவனது ஆதாங்கங்கள் அர்த்தமற்றவை எனப் புன்னகையுடன் சர்டிபிகேட் வழங்கிய பிரசாந்த், தகிக்கும் கோடை வெயிலில் சரவணனை அழைத்துக் கொண்டு பஜாரிலிருந்த குளிர்பானக்கடைகள் பகுதிக்குச் சென்றான்.
அக்கடைகளை நோட்டமிடச் சொன்னவன் சரவணனை நோக்கி, “குளிர்பான வியாபாரிகளான இவர்களைப் பார். எவ்வளவு சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள்?
கோடை முடிந்து குளிர் வந்ததும் வியாபாரம் அடியோடு மாறிவிடும். குளிர்பானக்கடைகள் காபி, டீ ஸ்டால்களாய் உருவெடுத்துவிடும்.
சீசனுக்கேற்ப தொழிலை மாற்றி தங்கள் வியாபாரத் திறமைகளை பறைசாற்றும் இவர்களைப்போல் இருப்பதுதான் சரி.
மாறாக, சீசனைப் பற்றி கவலைப்படாமல் காலம் பூராவும் குளிர்பானமாகவோ, காபி, டீயாகவோ வியாபாரம் நடைபெற்றால் அது எடுபடுமா?, நஷ்டமே ஏற்படும்.
எந்தெந்தக் காலத்தில் எப்படிச் செயல்பட்டால் லாபம் ஈட்ட முடியும் என்பதை நுணக்கமாகத் தெரிந்து வைத்திருந்து, அதற்கேற்றாற்போல் செயல்படும் இச்சிறுவியாபாரிகள்தான் நமக்கு வழிகாட்டிகள்.
கதை எழுவது தப்பில்லை. முழுக்க முழுக்க அதையே தொழிலாகக் கொண்டு அதிலேயே மூழ்கிக் கிடப்பது சரியல்ல. அது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான்.
நிரந்தர ஊதியத்திற்கும், சீரான வாழ்க்கைக்கும் வழி தேடிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.
திறமைகளை எந்தெந்த நேரத்தில் எப்படியெப்படி பயன்படுத்திப் பயன் பெறலாம் என்பதைத் தெரிந்து வைத்திருப்பதும் ஒருவனது திறமையே.”
பிரசாந்த் பிரசங்கத்தைக் கேட்க ஆரம்பித்ததும், சரவணனின் மனம் சிந்தனையில் லயிக்க அவன் பிரசங்கம் தொடர்ந்தது.
“நானும் உன்னைப் போல எழுதுபவன்தான். ஆனால் எனக்குள் ஓர் வரைமுறை வைத்திருக்கிறேன். அதை மீறுவதில்லை.
என் திறமைக்குக் கிடைத்த பத்தாயிரம் ரூபாய் பரிசை மூலதனமாய் கொண்டு வங்கி உதவியுடன் சுயதொழில் துவங்கத் திட்டம். வேலையில்லாப் பட்டதாரி என்கிற பட்டத்தைப் பின்னால் தவிர்க்கலாமே.
தேர்வில் நீ தோல்வியடைய உன் மற்றொரு திறமையே காரணமாகிவிட்டது. காரணம்?
எல்லையின்றி தறிகெட்டு ஓடிய சிந்தனையும் மனமும் தான். முழு நேரத்தையும், கவனத்தையும் கதை பண்ணுவதில் செலவழித்ததின் எதிரொலி.
நாம் இருவரும் மாணவர்களே இலக்கியம் அறிந்தவர்களே.
உன் வீழ்ச்சிக்கும், என் வளர்ச்சிக்கும் காரணம் கதை தான் என்றாலும், ஒளிந்து கிடக்கும் திறமையை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளும் விஷயத்தில் தான் இருவருக்குள்ளும் எவ்வளவு வேறுபாடு?” என்றான்.
சரவணனின் மனம் தெளியத் தொடங்கியது.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!