நாங்கள் மூவரும் மாடி அறையில் கட்டிலில் அமர்ந்திருந்தோம். மாலைப் பொழுதே இரவாக மாறியிருந்த ஒரு மார்கழி மாதம்.
குளிர் மெல்லிசாக இறங்கிக் கொண்டிருந்ததால் மின்விசிறியின் சுற்றல் குளிரை சற்று அதிகமாக உணர வைத்தது.
நான் எழுந்துபோய் மின்விசிறியை நிறுத்திவிட்டு வந்து மீண்டும் அமர்ந்தபோதுதான் பூரணி என்னிடம் “ஒரு கத சொல்லுப்பா!” என்று கேட்டாள். அப்படி அவள் கேட்கும்போது உச்சிக்குடுமி போடாது விடப்பட்ட தலைமயிர் சிலும்பியது.
நான்தான் உச்சிக்குடுமி போட்டு விட்டிருக்க வேண்டும். மறந்துவிட்டேன். எப்போதும்போல்தான் அவள் என்னிடம் கதை கேட்டாள்.
ஆனால் ஆவேசமுற்றிருந்த என் மனம் அவளுடைய குழந்தைமை மொழியில் சட்டென்று கரைந்து ஒட்டுப்புல் போல் ஒட்டிக்கொண்டு விட்ட ஆச்சரியத்தை என்ன சொல்வது!
பூரணி தனாவிடம் “நா அப்பாட்ட கத கேக்கப் போறேம்மான்னு!” ஓர் அறிவிப்பை விடுவதற்குச் சற்று முன்னர்தான் எங்களுடைய வாக்குவாதமும் சண்டையும் ஓய்ந்திருந்தன.
என் பக்கத்தில் ‘கொஞ்சம்’ விலகி உட்கார்ந்திருக்கும் தனாவின் கண்களில் தெறிக்கிற கோபம். இந்தமுறை வாக்குவாதத்தில் நான் வென்றதாக நினைக்கவில்லையாயினும் தான் தோற்றுவிட்டதாகவே நினைத்தாள் தனா.
கடந்தகாலங்களில் எனக்கு ஏற்பட்டத் தோல்விகளைவிட அவளுக்கு ஏற்பட்ட தோல்விகளே என்னை மிகுந்த இம்சைக்கு உள்ளாக்கியிருக்கின்றன. அவள் அவ்வளவு எளிதில் சமாதானமாகிவிடக் கூடியவள் அல்ல.
இந்த முறை நானும் அப்படியேதான் இருந்துவிடப் போகிறேன். ‘என்ன நடந்தாலும் நடக்கட்டும். பார்த்து விடலாம்!’
எல்லாவற்றிற்கும் மேல் எதற்காக இந்த வாக்குவாதமும் சண்டையும் என்று நான் எவ்வளவு யோசித்தாலும் ஒன்றும் பிடிபடவில்லை. வாயைத் திறப்பேனா என்கிறாள்.
“ஏண்டி ஒரு மாதிரியா இருக்கற?” என்று கேட்கப் போய்த்தான் இவ்வளவு பெரிய ஊடலும் மோதலும்.
என்னவென்றே தெரியாத ஒன்றுக்காக சண்டை போடுவதுதான், எங்கள் இல்வாழ்க்கையின் ஆறுவருடத் தவப்பயன். அதுதான் இந்தமுறை எனக்கும் பிடிவாதமாக இருந்துவிடத் தோன்றிவிட்டது.
பொதுவாக எங்களுக்குள் வாக்குவாதமும் சண்டையும் புயலும் மழையும் போல. புயல் வேகம் குறைந்துவிட்டால் மழையும் ஓய வேண்டுமல்லவா?
அதுபோலத்தான் வாக்குவாதம் சண்டையாக அதாவது புயல்மழையாக உருமாறி வெளுத்து வாங்கும். வந்த புயல் கடலிலேயே மையம் கொண்டிருந்தால் பரவாயில்லை. கரையில் இருப்போரையும் காவு வாங்கும் இல்லையா?
எந்தப் பிரச்சினைக்காக நாங்கள் வாக்குவாதம் செய்து சண்டையிட்டுக் கொள்வோமோ அங்கிருந்து புயல் மையம் நகர்ந்து நகர்ந்து வேறு வேறு பிரச்சினைகளுக்குள் புகுந்து சுற்றிச் சுழற்றியடித்து ஓய்ந்துபோகும்.
தற்போது புயல் ஓய்ந்துவிட்டாலும் எங்கள் நிலவரம் புயல் வந்து சென்ற கரையின் களநிலவரம் தான்.
மாலையிலிருந்து உறங்கிக் கொண்டிருந்த பூரணி எங்களுடைய சண்டையின் ‘சிறு’ சலசலப்பில்கூட எழுந்திருக்கவில்லை.
கொஞ்ச நேரத்திற்கு முன்னர்தான் எழுந்து பால் குடித்தாள். இப்போது ‘கதை வேணும்’ என்று கேட்கிறாள்.
“கனிக்கு என்ன கத வேணும்?” என்று குழந்தையிடம் செல்லம் கொஞ்சினாள் தனா.
“பூதக் கத வேணும்மா! பூதக் கத!”
“பூதக் கதையா?” என்று தனா புருவம் உயர்த்தி என்னைப் பார்த்தவள் குழந்தையை தூக்கித் தன் மடியில் இருத்தி ‘பூதக் கத வேண்டாம். என் தங்கம்ல. நைட்டு பூதக் கத கேட்டுட்டுத் தூங்குனா காச்சல் வந்துடும். நாளைக்குப் பகல்ல பூதக் கத கேட்டுக்கலாம் சரியா!” என்றாள்.
முகம் லேசாக மாற ஆரம்பித்தது பூரணிக்கு.
“நா பயப்பட மாட்டே. நல்லாத் தூங்கீருவேன். நா குட் கேர்ள்!” என்று மெதுவாக விசும்ப ஆரம்பித்தாள்.
“தங்கக்குட்டிக்குப் பூதக்கத வேணுமாடி. அப்பா சொல்றேன்!” என்று நான் அவளைச் சமாதானம் செய்ய அருகில் நகர்ந்தேன்.
இதைப் பார்த்த தனா கங்காரு போல் வயிற்றோடு குழந்தையை அணைத்துக் கொண்டு கையைக் காட்டி என்னை அருகில் வரவேண்டாம் என்று தடுத்துவிட்டாள்.
நான் ஏமாந்தவன் போல் பழைய இடத்திற்கு நகர்ந்து முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டேன். நான் அப்படி உட்கார்ந்திருப்பதைப் பார்த்து குழந்தை தனாவிடமிருந்து பிய்த்துக்கொண்டு ஓடிவந்து என்னைக் கட்டிக் கொண்டாள்.
“நேத்துச் சொன்னியே பா! பெரிய்ய பூதம். அதச் சொல்லுப்பா!”
“எனக்கு மறந்து போச்சே! எந்த பூதக்கதைனு!’ என்று என் கன்னத்தில் விரல்களால் ‘டைப்’ அடித்தேன். புரிந்து கொண்டவள் முத்தமொன்று கொடுத்தாள்.
உடனே “இப்பத்தா ஞாவகம் வருது!” என்றேன்.
கதை கேட்க உற்சாகத்தோடு தயாரானாள் பூரணி.
கீழே இறங்கிப் போய் கட்டிலுக்கடியில் குப்புறக் கிடந்த கரடி பொம்மையை எடுத்து வந்து நெஞ்சோடு கட்டிக் கொண்டவள் கோழிக்குண்டு கண்களை விரியத் திறந்து ஆர்வமாய் என்னைப் பார்த்தாள்.
“சரி தான். அப்பாவுக்கும் மகளுக்கும் தெனமும் நைட்டு இந்தக் கத தா ஓடுதா!” என்று என்னை ஒருமுறை முறைத்தாள். கதைக்காக முறைத்தது மாதிரித் தெரியவில்லை.
“ஆமா ஏன்? என் தங்கத்துக்கு பூதக்கதையும் சொல்லுவேன். வேற எந்தக் கதையும் சொல்லுவேன் உனக்கென்னடி!” என்றேன். கூறியதோடு நின்றிருக்கலாம். கடைவாயில் ஒருஇடி இடித்தேன்.
சடாரென்று கையை ஓங்கிக் கொண்டு வந்தாள். பாதுகாப்புக்குப் பூரணியை நடுவில் நிறுத்திக் கொண்டேன்.
பூரணியும் ‘உனக்கென்ன?’ என்று நான் செய்ததுபோல் அவள் கன்னத்தில் இடித்தாள்.
‘வாய் வாய்’ என்று அவளையும் கை ஓங்கினாள். ஆனால் கன்னத்தில் ஒரு லேசானத் தட்டலோடு விட்டுவிட்டாள்.
கதை சொல்லத் தொடங்கினேன்.
“ஒரு காட்ல ஒரு புலிக்குட்டி இருஞ்ச்சு. அந்தப் புலிக்குட்டி என்ன பண்ணுச்சாம் ஒரு நாளு”
“அதுக்கு அப்பா அம்மா யாரும் இல்லியா?” என்று பூரணி குறுக்குக் கேள்வி கேட்டாள். வலதுகை கட்டைவிரலை வாயில் சூப்பிக்கொண்டே.
“அப்பா அம்மா இல்லாம எப்புடி!” என்றுவிட்டு “அப்பா புலியும் அம்மா புலியும் இருந்தாங்க. அந்தப் புலிக்குட்டிக்கு ஒரு ஆச. அவங்க இருந்தது ஒரு காட்டுக்குள்ள. அந்தக் காடு ரொம்பப் பெரிய்ய காடு” என்றவாறே என் மடியில் உட்கார வைத்து விரலை வாயிலிருந்து எடுத்து வாயைத் துண்டால் அழுந்தத் துடைத்தேன்.
“அப்பறம்!” என்றாள்.
“காட்டுக்குள்ள தூரமா ஒருமலை மேல அருவி இருக்குது. அங்க போய் குளிக்கனும்னு ரொம்ப நாள் ஆச அந்தக் குட்டிப்புலிக்கு.
அம்மாகிட்டயும் அப்பாகிட்டையும் அடம் புடிக்குது. என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் அங்க போறாங்க; நானும் போறேன்னு. அவுங்களும் நீ பெரியவ ஆனதுக்கப்புறம் அங்க போலாம்னு சொல்லீட்டாங்க!”
“அருவினா எப்படிமா இருக்கும்?” என்று சம்பந்தமே இல்லாதது போல் உட்கார்ந்திருந்த தனாவைக் கேட்டாள்.
தனா அருவியை எப்படி அவளுக்கு விளக்குவது என்று தெரியாமல் முழித்தாள்.
நான் அதற்குள் என் கைப்பேசியின் இணையத்தில் அருவியின் காணொளியை எடுத்துக் காட்டினேன்.
அதில் குற்றாலம் அருவியில் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் குளித்துக் கொண்டிருந்தனர்.
“அன்னைக்கு ஒருநாள் இங்க மழ பேஞ்சு நம்ம வீட்டு ஓட்டு மேல இருந்து மழத்தண்ணி விழுந்துச்சுல்ல. அதேமாதிரி மலையில இருந்து தண்ணி அப்படியே ‘திமுதிமு’னு விழுகுது பாரு!” என்று காணொளியைக் காட்டி விளங்க வைத்தாள் தனா.
“அப்ப நம்மளும் அங்க போய் குளிக்கலாமா?”
“ஓ குளிக்கலாமே!”
‘
“அப்பா! அப்பா! என்னையும் ஒருநாள் அங்கக் கூட்டிட்டுப் போப்பா!”
“எனக்கு அந்த எடம் தெரியாதே. உங்கம்மாவுக்குத் தா தெரியும்!” என்றேன்; அவள் முறைத்தாள்.
“அம்மா! அம்மா! என்னையும் ஒருநாள் அங்க கூட்டிட்டு போமா. ப்ளீஸ் மா! ப்ளீஸ்!” என்று அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கொஞ்சினாள்.
“சரி போலாம்! போலாம்! ரெண்டு மாசம் கழிச்சு பள்ளிக்கூடம் லீவு விடுவாங்கல்ல. அப்ப போலாம்!”
“ஐ! ஜாலி! ஜாலி!” என்று கொண்டே கட்டிலைவிட்டு வேகமாக இறங்கினாள்.
“எங்கடி போற?” தனாவும் பின்னாலேயே போவதற்கு கட்டிலில் நகர்ந்தாள்.
“நா தாத்தாட்டச் சொல்லப் போறேன். நாங்கெல்லாம் அருவி பாக்கப்போறோமுனு!”
‘படிகளில் ஒழுங்காக இறங்கிப் போகிறாளா?’ என்று அங்கிருந்து சன்னல் வழியாக எட்டிப் பார்த்துவிட்டுத் திரும்பவும் வந்து பழைய இடத்தில், மறுபடியும் என்னை விட்டுக் ‘கொஞ்சம்’ தள்ளி அமர்ந்துகொண்டாள் தனா.
கீழ்வீட்டில் பூரணியின் குரலும் அதைத் தொடர்ந்து படுத்தப் படுக்கையாக இருக்கும் அப்பாவின் சிரிப்புச் சத்தமும் கேட்டது.
எப்போதும் அவர் ‘ஓங்கி’ச் சிரிப்பவராதலால் இப்போதும் அவர் அப்படியே முயற்சி செய்த சிரிப்போடு கூடவே இருமலும் ஓங்கி வந்தது.
இதைக் கவனித்துக் கொண்டே தனாவின் பக்கம் திரும்பினேன்.
தனா என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள். நான் படக்கென்று வேறுபக்கம் திரும்பிக் கொண்டேன்.
சிறிது நேரம் சென்றிருக்கும். எனக்கு என்னவோ போலிருந்தது. மெதுவாக “தனா!” என்றழைத்தேன்.
என்னைப் பார்க்காமல் மாடிப் படிகளைப் பார்த்துக்கொண்டே ‘ம்ம்ம்ம்!’ என்றாள்.
“என்னய என்னப் பண்ணச் சொல்ற?”
“…………”
“உனக்கு என்னதான் பிரச்சன? சொல்லு!”
“…………”
கை தரையில் என்னவோ வரைந்து கொண்டிருந்தது.
“சொல்லுனு சொன்ன…” எரிச்சலாகச் சொன்னேன்.
“…………”
“இப்ப உனக்கு என்ன வேணும்?”
தலையை உயர்த்திப் பார்த்தாள்.
“சொல்லு. என்ன வேணும்னு கேட்டேன்?”
“சொன்னா இப்பவே கெடைக்குமா?”
“குடுக்கற மாறி இருந்தா இப்பவே குடுப்பேன்!” இதை நான் வாய்க்குள்தான் சொல்லிக் கொண்டேனே ஒழிய அவளிடம் சொல்லவில்லை. காதில் விழுந்திருந்தால் அவ்வளவுதான் தொலைத்திருப்பாள்.
“என்ன மொணங்குறீங்க? வாயத் தொறந்து சொல்லுங்க. குடுப்பீங்களா? மாட்டீங்களா?”
“குடுக்க முடுஞ்சா குடுப்பேன். உங்களுக்கு என்ன வேணுங்க மேடம்?” கொஞ்சம் சிரிக்க முயன்றேன்.
“எனக்குக் கேக் வேணும்! இப்பவே வேணும்!”
நான் சிரித்து விட்டேன். “யாரு பூரணிக்கா?”
“காதுல விழுகுலயா? இந்திலயா சொல்றேன். கேக் எனக்கு வேணும்!”
‘ஓகோ இவ்வளவு நேரம் நடந்த சண்டைக்கான காரணம் இதுதானா! இதை அவள் வாயிலிருந்து வரவைப்பதற்கு ஏழு கடல் ஏழு மலை தாண்ட வேண்டியிருக்கிறது.
நான் சுதாரித்துக் கொண்டவனாய், “இத முன்னாடியே சொல்லீருந்தீனா ஒன்னு சேத்தி வாங்கீருப்பேன்ல!” என்றேன்.
“எங்கிட்டச் சொல்லீட்டா வாங்கீட்டுப் போனீங்க? இல்ல எங்களுக்கு ஏதாவது வேணுமானு கேட்டுக்கிட்டா வாங்கப் போனீங்க?”
“இவ்ளோ தானா? ஒரு கேக்குக்காகவா இவ்ளோ சண்டையும்.”
“என்ன இவ்ளோ தானா? எங்கிட்டக் கூடச் சொல்லாம நானுந்தா கூட வர்ற. எனக்கே தெரியாம சார் வாங்கீட்டு வந்து உங்க தங்கச்சிக்கும் தங்கச்சிப் பொண்ணுக்கும் மட்டுமில்ல எனக்கும் சேத்து சர்ப்ரைஸ் குடுக்குறீங்க. அப்டித்தான சார்?”
“இல்லடி பாப்பா போன் போட்டு கேட்டா! வாங்கீட்டுப் போகலன்னா ஏங்கிப் போயிருவா அதா!”
“நம்ம பாப்பாவையும் நாளைக்கே கேக்கச் சொல்றேன். அத்த எனக்குக் கேக் வாங்கிக் குடுங்கனு. வாங்கிக் குடுக்கறாளானு பாப்போம் உங்க அன்புத் தங்கச்சி!”
“இத அப்பளயேவே சொல்லீருக்கலாமல்ல?”
“சொன்னா மட்டும் கிழிச்சுத் தள்ளீருப் பாரு!”
“…………!”
“இதா லாஸ்டா இருக்கணும். உங்கத் தங்கச்சி வாங்கறதுக்கு மட்டுந்தா வருவா. மாமாக்கு ஒடம்பு சரியில்லாமப் போய் இத்தன நாள்ல அவரப் பாக்கணும்னுகூட ஒருநா வந்ததில்ல. அவுளுக்கு ஏதாவது வேலையாகணும்னா மட்டும் பாசம் பொத்துக்கிட்டு வந்துரும்!”
“சாரீடி!” என்று அவள் கையைத் தொட்டேன்.
“தொடாதீங்க!” கையை உதறிவிட்டாள்.
அப்போது பூரணி மாடிப்படி ஏறி வந்து கொண்டிருந்தாள். குளிருக்கு ஸ்வெட்டர் அணிந்து குல்லாய் போட்டிருந்தாள். அம்மா போட்டு விட்டிருப்பார்.
“செல்லக்குட்டி!” என்று கட்டிலில் ஏற முயன்றுகொண்டிருந்த குழந்தையைத் தூக்கப் போனேன்.
அதைப் பார்த்த தனா என் கைகளைத் தட்டிவிட்டு என்னிடம் ஆவலாகத் தாவி வந்த குழந்தையைத் தூக்கித் தன் மடியில் வைத்துக் கொண்டாள்.
“தாத்தாவும் அருவியப் பாக்க வர்றேன்னாருமா! நாம எல்லாரும் சேந்து போலாம்னு சொல்லீட்டு வந்துட்டேன்!” என்றாள். அவள் பேச்சே அருவிச் சத்தமாக மாறியிருந்தது.
தனாவுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். என்னைப் பார்த்துக் கொண்டே தனா பூரணியின் காதுக்குள் என்னவோ சொன்னாள்.
பூரணியும் ஞாபகம் வந்தவள் போல், “குட்டிப்புலி அப்பறம் என்னப்பா பண்ணுச்சு?” என்று கேட்டாள்.
“குட்டிப்புலியும் சீக்கிரம் பெரிய புலியா வளந்துருச்சு!”
“எவ்ளோ பெருசா வளந்துச்சு?”
நானும் யோசிப்பது போல் பாவனை காட்டி நகர்ந்து வந்து, “இவ்ளோ பெருசா வளந்துருக்கும்!” என்று தனாவின் தலைக்கு மேல் அந்தரத்தில் கை வைத்துச் சொன்னேன்.
வேகமாக எழுந்து என் கைக்கு அருகில் நின்று கொண்டு அளந்து பார்ப்பவள் போல் பார்த்துவிட்டு, “நாந்தா புலிக்குட்டிய விடப் பெருசு!” என்றாள்.
தனாவும் “ஆமாண்டா கண்ணு!” என்று குழந்தையை இழுத்து உச்சி முகர்ந்தாள்.
இன்னும் என் கை தனாவின் தலைக்கு மேல் அந்தரத்தில்தான் பள்ளி கொண்டிருந்தது.
என் கை அவள் தலை மேல் படாமல் இருந்தாலும் கையை எடுக்கத் தோன்றவில்லை.
தனா என்னை இமைக்காமல் புதிதாகப் பார்ப்பதுபோல் பார்த்தாள்.
மற்ற நேரமாக இருந்திருந்தால் வெட்கத்தை மறைத்துக் கொண்டே “என்ன அப்டிப் பாக்கற?” என்று கன்னத்தை ஒரு இடி இடித்திருப்பேன்.
இப்போது நானும் பார்த்துக் கொண்டே இருந்தவன் கண்களிரண்டையும் குறிப்பாக ஒருமுறை சிமிட்டினேன்.
அதிர்ச்சியடைந்தவளாய் முந்தைய கோப முகத்தை ‘படக்’கென்று அணிந்து கொண்டாள்.
“சாரீ!” என்று உதடுகளை மட்டும் அசைத்தேன். தலையைத் திருப்பிக் கொண்டாள்.
குழந்தை “அப்பறம் அப்பறம்!” என்று என் முகத்தைத் தன் பக்கம் திருப்பியது.
“குட்டிப்புலி கொஞ்சம் வளந்த பின்னாடி அதோட அப்பா அம்மாகிட்டப் போய்க் கேட்டுச்சு இப்ப அந்த அருவிக்கு நா போலாமானு.
அவுங்களும் நீ பெரிய புலியாகிட்ட அதனால போலாம்னு ஓகே சொல்லிட்டாங்க. ஆனா அம்மா புலியும் அப்பா புலியும் ஒரே ஒரு கண்டிசன் போட்டாங்களாம்!”
“கண்டிசனா? என்ன கண்டிசன்?”
“உனக்குக் கண்டிசன்னா என்னனு தெரியுமாடி பெரிய மனுசி?” என்று தனா பூரணியின் முகத்தைத் தன் பக்கம் திருப்பிக் கேட்டாள்.
“கண்டிசன்னா கண்டிசன் தான். உனக்குத் தெரியாதா?” என்று பெரிய மனுசியாகவே பதில் சொன்னாள்.
தனா வாய்க்குள் என்னவோ முணங்கினாள். இதற்கும் என்னைத்தான் திட்டியிருப்பாள். நான் கண்டுகொள்ளவில்லை.
“என்னா கண்டிசன்னா சாயந்திரம் இருட்டறதுக்குள்ள வீட்டுக்கு வந்தர்னும். வெளீல தங்கக்கூடாது அப்டினெல்லாம் ஸ்ட்ரிக்டா சொல்லீட்டாங்க. புலியும் அதுக்கு ஓகேனு சொல்லி அருவியப் பாக்க ஜாலியா கெளம்பிப் போச்சாம்!”
“அப்டிக் காட்டுக்குள்ள நடந்து போய்க்கிட்டே இருக்கும்போது ரெண்டு பெரிய யானைக சோகமா வந்துச்சாம். குட்டிப்புலிட்ட அந்த ரெண்டு யானைகளும் நீ எங்க மகனப் பாத்தியானு கேட்டாங்க.
அவுங்களோட குட்டி யானை ரெண்டு நாளா காணமாம். அந்த யானையத் தேடி ரெண்டு பேரும் போய்க் கிட்டிருக்காங்க. குட்டி யானைய நான் பாக்கலன்னு குட்டிப்புலி சொன்னதும் பாத்தா எங்ககிட்ட வந்து சொல்லுனு சொல்லீட்டு அந்த யானைகளும் சோகமாப் போயிருச்சு!”
“யானக் குட்டி எங்கப்பா போச்சு? அதுக்கு என்னாயிருக்கும்?”
“பொறு! பொறு! சொல்றேன்!”
“அப்பறம் ரொம்ப தூரம் நடந்து நடந்து உயரமான மல மேல ஏறின பின்னாடி குட்டிப்புலி அருவியப் பாத்துருச்சு!”
“பூதம் எப்பப்பா வரும்?”
“அருவி கிட்டதா பூதம் இருந்தது!”
“புலிக்குத் தெரியாதா அங்க பூதம் இருக்குதுனு?”
“தெரியாது!”
“அச்சச்சோ மாட்டிக்குமே!” தலையில் கை வைத்து அலுத்துக்கொண்டாள்.
அதுவரை ஒதுங்கியே அமர்ந்திருந்த தனா, “தலையில கை வைக்கக்கூடாது?” என்று கையை தலையிலிருந்து எடுத்துவிட்டாள்.
பிறகு பூரணியிடம், “குட்டிப்புலிக்குப் பேரு இல்லையா?” என்று கேட்டாள்.
நான் “இங்க வா!” என்று அழைத்து குழந்தையின் காதில் “என்ன பேரு வைக்கலாம்?” என்றேன்.
தான் யோசிப்பதுபோல் தனாவைப் பார்த்தாள் பூரணி.
“நம்மப் பூரணிக்குட்டி மாதிரி இருக்கறதுனால பூரணிக் குட்டினே வைக்கலாம்!” என்று என்னைப் பார்த்துக் கண்களைக் குறிப்பாய்ச் சிமிட்டினாள் தனா.
நான் புரிந்துகொண்டவனாய் “குட்டிப்புலிக்குப் பேரு பூரணிக்குட்டி!” என்றேன்.
“குட்டிப்புலிக்குப் பேரு பூரணியா! ஐ! ஜாலி! ஜாலி! குட்டிப்புலி! பூரணிப்புலி!’ என்று எழுந்து நின்று ஒரு ஆட்டம் போட்டாள்.
இதைக் கொஞ்ச நாளாக இணையத்தைப் பார்த்துப் பழகியிருக்கிறாள். இப்போதெல்லாம் உற்சாகமாகிவிட்டால் இப்படித்தான் ஆட்டம்.
“பூரணிக்குட்டிக்கு அருவியப் பாக்கனுங்கற ஆர்வத்துல வேகமா அருவிகிட்டப் போச்சு. அருவிச் சத்தம் பெருசா கேக்குது. அருவிய ஒருமரத்துக் கிட்ட நின்னு பாத்தா அப்டியே வானத்துல இருந்து கொட்டோ கொட்டுனு கொட்டுது!! நான் அண்ணாந்து மேற்கூரையைப் பார்த்தேன். குழந்தையும் அண்ணாந்து பார்த்தாள்.
“தண்ணி ஒரு பெரிய பாறமேல விழுந்து அப்டியே புகை மாதிரி ஆகி அந்த எடமே கண்ணுக்குத் தெரியில. குளுகுளுனு இருக்குது. அங்க எல்லா மிருகங்களும் ஜாலியா விளையாடிக்கிட்டே குளிக்குதுக.
குட்டிப்புலிக்கு ஆர்வம் தாங்க முடியில. ஓடிப்போய் அருவில ஆடிக்கிட்டே ரொம்ப நேரம் குளிச்சு ஜாலிய இருக்குது. அங்கக் குளிச்ச எல்லா மிருகங்களும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்குப் போயிட்டாங்க.
குட்டிப்புலிக்கு அப்பவும் வெளியில வர்றதுக்கு புடிக்காம தனியா குளுச்சுக்கிட்டே இருக்குது!”
“தனியாவா? அதுக்குப் பயமே இல்லையா?”
“அதா இன்னும் இருட்டாகலியே. அவுங்க அப்பாவும் அம்மாவும் சொன்ன மாதிரி இருட்டாகறதுக்குள்ள வீட்டுக்கு போய்டுமே. ஏன்னா பூரணிப்புலி குட்புலி!” என்று தனா சொன்னாள்.
தனாவைப் பார்த்து ‘சரிதான்’ என்று தலையாட்டிக்கொண்டே, “அதுவுமில்லாம பூரணிப்புலி ரொம்ப தைரியமான புலி. யாரக் கண்டும் பயப்படாது!” என்றேன் நானும் சேர்ந்து கொண்டு.
“அப்பத் தான் ஒரு பெரிய சத்தம் கேக்குது. யாரோ அழுகிற மாதிரி ஒரு சத்தம். பூரணிக்குட்டிக்கு யாரு அழுகுறானே தெரியில. அழுகச் சத்தம் கொஞ்சங் கொஞ்சமாப் பெருசாயிட்டே இருக்குது.
குட்டிப்புலி சுத்திச் சுத்தித் தேடிப் பாக்குது. யாருமே கண்ணுக்குத் தெரியில. திடீர்னு அழுகச் சத்தம் நின்றுச்சு. குட்டிப்புலி அருவியவிட்டுத் தள்ளி வந்து தேடிப் பாக்குது. அந்த எடமே ரொம்ப அமைதியா இருந்துச்சு.
சரி வீட்டுக்குக் கெளம்புவோம்னு கெளம்பப் பாத்தா திடீர்னு அந்தச் சத்தம் மறுபடியும் பக்கத்துல இருந்து கேக்குற மாதிரி இருக்குது!”
பூரணியின் முகத்தைப் பார்க்க வேண்டுமே! காட்டிற்குள் தனித்து மாட்டிக்கொண்ட குட்டிப்புலியாகவே மாறிப்போனாள்.
“பூரணிப்புலி சுத்தியும் முத்தியும் பாத்துச்சு. யாருமே இல்ல. யாரு சத்தம் போடுறா? ஒருவேள காட்டுக்குள்ள இருந்து சத்தம் வருதானு யோசிக்குது. ஆனா மறுபடியும் அந்த அழுகச் சத்தம் கேக்குது. இப்ப அந்தப்புலி என்ன பண்ணுச்சு தெரியுமா?” ரகசியம் சொல்வதுபோல் மெதுவாகக் கேட்டேன்.
“என்ன பண்ணுச்சு? ஓடிப்போயிருச்சா?”
“ஊஹூம்!”
“ஏன்?”
“அம்மா! புலி குட்டிப்புலிகிட்ட சொல்லீருக்குல்ல. என்னச் சொல்லீருக்குத் தெரியுமா? நீ தனியா எங்கியாவது போனீனா வழில யார் வேணாலும் வருவாங்க. எல்லாரையும் நல்லவங்கனு நம்பீரக் கூடாது.
யாராவது உன்ன ஏதாவது செய்ய நெனச்சா பயப்படக்கூடாது. ஏன்னா நீ புலி! நீ யாரக் கண்டும் பயப்படாம தைரியமா எதுத்து நிக்கணும். உன் முன்னாடி பெரிய யானையே வந்தாலும் சரி எதுத்து நின்னு அடிக்கத் தெரியனும்.
பதுங்கி நின்னு பாயத் தெரியனும். ஏன்னா நீ பூரணிப் புலின்னு சொல்லீருக்கு. அதுனால பூரணிப்புலிக்கு எப்பவும் எங்கயும் பயமே இல்ல. அதுனால குட்டிப்புலி தைரியமா தண்ணிக்குள்ள எறங்கி எல்லாப் பக்கமும் தேடுச்சு.
மறுபடியும் மறுபடியும் அழுகச் சத்தம். மெதுவா அங்கிட்டும் இங்கிட்டும் பாத்துச்சு. மேல இருந்து விழுகுற அருவிச் சத்தம் பயங்கரமாக் கேக்குது. அதவிடவும் சத்தமா யாரோ அழுகுறாங்க.
விட்டுவிட்டுக் கேக்குது. ஆனா பெருசா கேக்குது. புலிக்குனா என்னனே புரியில. வேற ஏதாவது பெருசா மிருகம் வந்துருச்சானு எல்லாப் பக்கமும் தாவிப் போய் தேடுது. எங்கியும் யாரும் இல்ல?”
‘யாருபா அழுகுறா? சொல்லித் தொலையேன்!’ என்கிற தவிப்பு குழந்தைக்கு.
“ஒடனே பூரணிப்புலிக்கு ஒரு சந்தேகம் நம்ம காதுக்குத் தான் அப்டிக் கேக்குது போலனு நெனச்சிட்டு கொஞ்ச நேரம் காத வச்சு நல்லாக் கேட்டுப் பாக்குது. ஆனாலும் சத்தம் வந்துட்டேதா இருக்குது!”
“லூசுப்புலி. பூதத்தோட சத்தந்தா அதுன்னு தெரியாதா!” என்று அங்கலாய்த்துக் கொண்டாள். இவளே போய் சொல்லிவிட்டு வருவாள்போல.
“ஒடனே அதுக்கு ஒரு சந்தேகம். அருவி விழுகிற எடத்துல நின்னு பாத்துச்சு. அப்பதா அருவிக்குப் பின்னாடி ஒரு குகை இருக்கறதே தெரியிது. அந்தக் குகையில இருந்துதா சத்தம் வருதுனு பூரணிப்புலிக்கு இப்ப நல்லாத் தெரிஞ்சி போச்சு. உடனே பதுங்கிப் பதுங்கி அங்க இருக்குற பெரிய பாற மேல ஏறி குகைக்குள்ள போனா!”
“உள்ள பூதந்தான?” என்றாள்.
“ஆமா பூதந்தான்!”
“ஐயைய்யோ! அப்பறம் என்ன ஆச்சு? உள்ளுக்குள்ள போயிடுச்சா பூரணிப்புலி?”
“உள்ள இருக்கறது பூதந்தான்னு அதுக்குத் தெரியாதே. அதுனால உள்ள போயிருச்சு!”
“அச்சோ!” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.
தனா தலையில் அடிக்கக்கூடாது என்று கையை ஓங்கியவள் “சொன்னப் பேச்சே கேக்க மாட்ற பாப்பா நீ!” ஒரு அதட்டு அதட்டினாள். பார்த்தால் ஓடிவந்து என்னிடம் ஒட்டிக்கொண்டாள்.
நான் கண்டும் காணாததுபோல் கதையைத் தொடந்தேன்.
“குகைக்கு உள்ள போனா உள்ளுக்குள்ள ஒரே இருட்டு. உள்ள போகப்போக குகை போய்ட்டே இருக்குது. கொஞ்ச தூரத்துல பெரிய உருவம் ஒன்னு படுத்துருக்கறது பூரணிப்புலிக்குத் தெரியிது.
ஆனா யார்னு தெளிவாத் தெரியில புலிக்கு. ஒரே இருட்டா இருக்குது. மனசத் தைரியப்படுத்திட்டு பதுங்கிப் பதுங்கி உள்ள போயிப் பாத்தா அது குட்டி யானை!”
“குட்டி யானையா? அது எப்படி அங்க வந்துச்சு? ஏ அழுவுது?” பரபரப்பாகிவிட்டாள்.
நான் குரல் தொனியை மாற்றாமலேயே தொடர்ந்தேன்.
“பூரணிப்புலியப் பாத்த உடனே குட்டி யானை ஓனு அழுகுது. தேம்பித் தேம்பி அழுகுது. குட்டி யானையோட நாலு காலயும் யாரோ கட்டி வச்சிருக்காங்க. யானைக்குட்டியால பேசக்கூட முடியில. ஒரே அழுக.
பூரணிப்புலிக்கு குட்டி யானையப் பாக்கவே ரொம்பப் பாவமா இருக்குது. யானையக் கட்டியிருக்கற கயித்த அவுத்து வுடலானு பூரணிப்புலி பக்கத்துல போச்சா அப்பத்தான் வேற ஒரு அழுகச் சத்தம் குகைக்கு உள்ள இருந்து கேட்டுச்சு.
குகையே அந்தச் சத்ததுல ஒரு ஆட்டம் ஆடுச்சு பாரு. அந்தச் சத்தம் யானையோட அழுகச் சத்தத்த விடப் பெருசாக் கேக்குது. வேற யார்றா அழுகறதுனு புலி யோசிச்சுக்கிட்டே மெதுவா குகைக்கு உள்ள போய்ப் பாத்தா அது பூதம்!”
பூரணி ஏதாவது பயந்துவிடுவாள் என்று தனா இப்போது நகர்ந்து வந்து பூரணியிடம் அமர்ந்துகொண்டாள்.
பூரணி எப்போதும் போல்தான் கதை கேட்கிறாள் என்றாலும் வழக்கத்தைவிடக் கொஞ்சம் பரபரப்பாக இருந்தாள் என்பதுதான் உண்மை.
“தலைல ரெண்டு பெரிய கொம்பு, நெத்தீல ரெண்டு கண்ணு அதுக்கு கீழ ரெண்டு கண்ணு. அதுக்கு மூக்கே இல்ல. நாலு கண்ணும் மூடீருக்குது. வாயத் தொறந்து ‘புஸ்ஸு புஸ்ஸு’ன்னு மூச்சு விடுது.
பெரிய்ய்ய பூதமா இருக்குது. நல்ல வேள தூங்குது. பெரிய பூதத்துக்குப் பக்கத்துல கொழந்த பூதமும் தூங்கீட்ருக்குது. கொழந்த பூதம் திடீர்னு கையக் கால ஆட்டி ஆட்டி கொழந்த மாதிரி அழுகுது.
பூரணிப்புலிக்கு இப்பத்தா தெரியிது யாரு பெருசா சத்தம் போட்டு அழுகுறானு! அதோட சத்தந்தா பூரணிப்புலிக்கு அருவி வரைக்கும் கேட்ருக்குது. கொழந்த பூதம் அழுவுற சத்தத்துல பெரிய பூதம் எந்திருச்சு
கொழந்த பூதத்த அப்டியே தூக்கி ரெண்டு கைலயும் வச்சு தாலாட்டுப் பாடுது. பூரணிப்புலி நல்லாப் பதுங்கி ஒளிஞ்சுக்குச்சு.
பெரிய பூதம் தாலாட்டுப் பாடிக்கிட்டே என்னடிச் செல்லம் பசிக்கிதா? நான் போய் யானக்குட்டிய சமைச்சு எடுத்துட்டு வர்றேன். அதுவரைக்கும் நீ தூங்குடி சுச்சுச்சுச்சூ என் ராசாத்தீனு கொஞ்சிக்கிட்டே தூங்க வச்சிச்சாம்!”
என் கைகளில் குழந்தையைக் கொஞ்சுவதுபோல் இரண்டு கைகளையும் சேர்த்து வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தேன். பூரணி ‘சிரி சிரி’ என்று சிரித்தாள்.
தனா நினைத்தது போல் பூரணி பயப்படவில்லை என்பதை தனாவும் நானும் அவள் விழுந்து விழுந்து சிரிப்பதைப் பார்த்துக் கொண்டே பார்வையாலேயே மகிழ்ச்சிக் குறிப்பைப் பரிமாறிக்கொண்டோம்.
‘பெரிய பூதம் கொழந்த பூதத்தத் தூங்க வைக்கறதுக்குள்ள நாம குட்டி யானைய காப்பாத்தனுமேனு சொல்லீட்டு பூரணிப்புலி சத்தம் போடாம குட்டி யானை படுத்திருந்த இடத்துக்கு வந்துச்சு.
அதோட கால கட்டுன கயித்த அவுத்து வுட்டு ரெண்டு பேரும் மெதுவாச் சத்தமில்லாம அங்கிருந்து குகைக்கு வெளியில வந்து காட்டுக்குள்ள வேகமாத் தப்பிச்சு வந்துட்டாங்க!”
“குட்டி யானை எதுக்கு அங்க போச்சு? அவுங்க அப்பாவும் அம்மாவும் ரொம்ப பயந்துக்குவாங்கல்ல. பாவம் இல்லம்மா!” உண்மையாகவே பரிதாபப்பட்டாள்.
“ரொம்ப தூரம் வந்த பின்னாடிதா பூரணிப்புலி குட்டியானைட்ட நீ எதுக்குத் தனியா இங்க வந்தன்னு கேட்டுச்சு. அதுக்கு அந்தக் குட்டி யானை சொல்லுச்சாம்
எனக்கு அருவில குளிக்கப்போகணும்னு ரொம்ப ஆச. எங்க அப்பா, அம்மாகிட்ட கேட்டதுக்கு நீ பெரிய யானை ஆனதுக்கப்பறம் போலாம்னு சொன்னாங்க.
எனக்கு உடனே போகனும்னு ஆச. அதா அவங்ககிட்ட விளையாடப் போறேன்னு பொய் சொல்லீட்டு அருவியப் பாக்க இங்க வந்தேன்.
வந்து அருவில குளிக்கும் போது மேல குகைக்குள்ள ஏதோ சத்தம் கேக்குதுனு போய்ப் பாத்தேன். பெரிய பூதம் ஒன்னு என்னையப் புடுச்சு கட்டிப் போட்டு நீ தா எனக்கு சாப்பாடு.
நாளைக்கு உன்னத் தான் என் கொழந்தைக்கு சாப்பிடக் குடுக்கப்போறேன்னு சொல்லுச்சு. எங்க அப்பா அம்மா பேச்சக் கேக்காமப் போனது எவ்ளோ பெரிய தப்புனு அந்த நேரத்துல நா ரொம்ப வருத்தப்பட்டேன்.
நல்லவேள நீ வந்து என்ன காப்பாத்துனனு பூரணிப்புலிக்கு நன்றி சொல்லுச்சு. அப்பத்தான் பூரணிப்புலிக்குப் புரியுது அப்பா அம்மா பேச்சக் கேக்கனும். இல்லனா இந்தமாதிரி மாட்டிக்குவோம்னு!”
“குட் புலி! குட்டிப்புலி!” என்று கைதட்டிப் பாராட்டினாள் பூரணிக்குட்டி.
“அப்பா அம்மாகிட்டப் பொய் சொல்லக்கூடாது. அப்டிப் பொய் சொன்னா அது நமக்கே ஆபத்தா முடியலாம்!” என்று தனா கதையின் நீதியை வழிமொழிந்தாள்.
“அப்பறம் பூரணிப்புலி பத்திரமா யானைக்குட்டிய வீட்டுக்குக் கொண்டு போய் அவுங்க அம்மா அப்பாகிட்ட சேர்த்துருச்சு. அவங்களும் பூரணிப்புலிக்கு நன்றி சொன்னாங்க.
அப்பறம் இருட்டாகுற நேரம் ஆனதுனால பூரணிப்புலி அவுங்க வீட்டுக்குக் கெளம்பிப் போயிருச்சு. வீட்டுக்குப் போன உடனே அப்பா அம்மாகிட்ட நடந்தத எல்லாம் ஒன்னு விடாமச் சொல்லீருச்சு. அவங்களும் பூரணிப்புலியப் பாராட்டுனாங்க. கடைசியா எல்லாரும் சந்தோசமா இருந்தாங்க!”
கதையை முடிப்பதற்குத்தான் காத்திருந்தது போல தனா உடனே, “எனக்குப் பசிக்குது. போய் சாப்படலாமா?” என்று சத்தமாகச் சொன்னாள். மணி எட்டை நெருங்கியிருந்தது.
“அம்மாக்கு பசிக்கிதாமாடி செல்லக்குட்டி. நம்ம போய் சாப்படலாம். கெளம்பு! கெளம்பு!” என்று நான் கட்டிலை விட்டு இறங்கி குழந்தையைக் கீழே இறக்கினேன்.
“நாளைக்கி என்னக் கதப்பா?”
“ஒட்டகக்கத!”
இதைக் கேட்டதும் முன்னைவிடவும் உற்சாகமாக குழந்தை மாடிப்படிகளில் இறங்கி ஓடினாள்.
நான் “பொறுத்துடா தங்கம்!” என்று சொல்லியதும் வேகத்தை குறைத்து மெதுவாக இறங்கிப் போனாள்.
எட்டிப் பார்த்து சரியாக இறங்கிப் போய்விட்டாள் என்பதை உறுதிசெய்து கொண்டதும் தனாவைப் பார்த்தேன். அவள் எழாமல் கட்டிலிலேயே இருந்தாள்.
கட்டிலுக்கருகில் சென்று “பசிக்கிதுன்னு சொன்ன. அப்படியே உக்காந்துருந்தா எப்புடி? எந்திரி போலாம்!” என்றேன்.
“இதெல்லாம் ஒரு கத!”
“இதுதா கத!”
“பூதக்கத சொல்றதும் இதுவே லாஸ்டா இருக்கட்டும்” என்றாள்.
பிறகு இரண்டு கையையும் நீட்டினாள். அள்ளித் தூக்கி கட்டிலைவிட்டு இறக்கினேன்.
நெஞ்சோடு சாய்ந்துகொள்வாள் என்று நெருங்கியவனை விடாப்பிடியாகத் தலையைப் பின்னகர்த்தி என்னைத் தள்ளிவிட்டு, “கதையாமா கதை பூதம், புலி, யானைன்னுட்டு. உங்கப் பொண்ண நாளைக்குக் காட்ல தான் கொண்டு போய் விடப் போறீங்களாக்கும்?” என்றாள்.
நான் பதிலேதும் சொல்லவில்லை. அவள் பேச்சில் கடுமை தீர்ந்து இலகியிருந்தது. அவளும் இலகிப் போயிருந்ததை என் கைகளும் புரிந்துகொண்டன.
கைகளில் அவளைச் சற்று இறுக்கி என் நெஞ்சோடு நெருக்கினேன். முரண்டு பிடிக்காமல் வழிய வந்தாள். திடீரென்று என் சட்டையைப்பிடித்து இழுத்தவள் முகத்தை முகத்தருகே வைத்து “பூதம் எப்டித் தாலாட்டுப் பாடுச்சு? எங்க இன்னொருக்கா செஞ்சு காட்டுங்க சார் பாப்போம்!” என்றாள்.
“சுச்சுசுச்சுசுச்சூ..”
பளீரென்று சிரித்தவாறே நெஞ்சில் சாய்ந்து கொண்டவளை மேலும் நெருக்கிக் கொண்டேன்.
அன்பரசன் அப்பாச்சாமி
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!