கதை என்று குறிப்பிட்டுள்ளதால் இந்தக் கட்டுரை, புனைகதைகளைப் பற்றிப் பேசுவதாக நேயர்கள் நினைத்துவிட வேண்டாம்.
‘கதை’ என்பதும் ‘கதை சொல்லல்’ என்பதும் இதழியலில் அன்றாடம் புழங்கும் ஒரு சொல். அட்டைப்படக் கட்டுரைக்கு ‘கவர் ஸ்டோரி’ என்று பெயர்.
இந்தக் கட்டுரைதான் வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் தலைப்பு வாசகங்களுடன் எழுதப்பட்டிருக்கும்.
இன்று, ஊடகங்கள், பல்வேறு பரிமாணங்களைப் பெற்று நின்றுள்ள போதிலும், கதை சொல்லல் சுண்டி இழுக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பது விதி.
அதற்காக, பலதரப்பட்ட இதழாளர்களும் எழுத்தாளர்களும் இணைந்தும் தனியாகவும் பல தளங்களில் இயங்கி வருகிறார்கள்.
எந்த நேரத்தில் எதைக் கூற வேண்டும் என்கிற பொறுப்புணர்வும் இந்த வகை கதை சொல்லிகளுக்கு வேண்டும் என்று கூறப்படுகிறது.
சில சமயங்களில் சுருக்கமாக, பீடிகை எதுவும் இல்லாமல்கூட செய்தியைக் கூற வேண்டிய நிலை இருக்கும்.
ஒருமேலாளர், தம்முடைய கிளையன்ட்டிமிருந்து பெற வேண்டிய தொகையை வசூலிக்க தமது பணியாளரை அனுப்பி வைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
கிளையன்ட்டை பார்த்து விட்டு வந்தவர், “போனேன்; காத்திருந்தேன்; அப்புறம் சந்தித்தேன்” என்று பேசத் தொடங்கினால், “ரிசல்ட் என்ன?” என்று தான் மேலாளர் கேட்பாரே தவிர, அவருடைய பேச்சு விறுவிறுப்பாக இருந்த போதிலும் கேட்க அவருக்கு மனம் இருக்காது.
இதுபோல் தான், ஊடகங்களில் கதை சொல்ல முற்படும் போது சுவையாகத் தொடங்கி கவனத்தை ஈர்த்து பகிரப்பட வேண்டிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த கதை சொல்லல் நுட்பத்தையே யூட்யூப், பாட்காஸ்ட், இணைய வழி உரை, நேரடி உரை ஆகியவற்றில் கைக்கொள்ள வேண்டும்.
பள்ளிக்கூடங்களில் கல்லூரிகளில் ஒரு சில குறிப்பிட்ட ஆசிரியர்கள் / பேராசிரியர்கள், மிகவும் கடினமான பாடங்களைப் பற்றியும் தங்கள் கலகலப்பான பயிற்று முறைகளால் மாணவர்களைக் கட்டிப் போட்டு விடுவார்கள். அப்படிப்பட்டவர்கள், மாணவர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவர்கள் ஆகி விடுவார்கள்.
சிக்கல்கள் நிறைந்த துறைகள் / புரியாத பொருட்கள் பற்றிய கட்டுரைகளை எழுதும் போதும் உரையாற்றும் போதும் கட்டிப் போடும் உத்தியை கதை சொல்லலில் பின்பற்ற வேண்டும். தவறான வழிகாட்டுதல் /தவறான தகவல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
மதுரகவி சீனிவாசன்
சென்னை
கைபேசி: 9841376382
மின்னஞ்சல்: mkavi62@gmail.com
Comments
“கதை சொல்லும் நுட்பம்” மீது ஒரு மறுமொழி
[…] கதை சொல்லும் நுட்பம் […]