கத்தரிக்காய் கிரேவி செய்வது எப்படி?

கத்தரிக்காய் கிரேவி பிரியாணி, சப்பாத்தி, பூரி, இட்லி மற்றும் தோசை ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமான தொட்டுக்கறி ஆகும்.

கத்தரிக்காயை விரும்பாதவர்கள்கூட இக்கிரேவியை விரும்பி உண்பர். இதனுடைய அபார சுவையே அதற்குக் காரணம்.

பிரியாணியில் பட்டை, சோம்பு, லவங்கம் உள்ளிட்ட மசாலாப் பொருட்கள் சேர்க்கப்படுவது வழக்கம்.

கத்தரிக்காய் கிரேவி செய்ய மிளகு, சீரகம், வெந்தயம் உள்ளிட்ட மசாலாப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அதாவது இரண்டிலும் வெவ்வேறு மசாலாப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. ஆதலால்தான் கத்தரிக்காய் கிரேவி பிரியாணியுடன் சேர்த்து சுவைக்க மிகவும் பொருத்தமானதாக உள்ளது.

இனி சுவையான கத்தரிக்காய் கிரேவி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் (சிறியது) – ஏழு எண்ணம் (தோராயமாக கால் கிலோ)

பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (பெரியது)

தக்காளி – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)

புளி – பெரிய நெல்லிக்காய் அளவு

பச்சை மிளகாய் – 1 எண்ணம் (பெரியது)

மிளகாய் வற்றல் – 1 எண்ணம் (பெரியது)

வெள்ளைப் பூண்டு – 10 பற்கள் (பெரியது)

மஞ்சள் பொடி – 1 ஸ்பூன்

கொத்தமல்லிப் பொடி ‍- 2 & 1/2 ஸ்பூன்

மிளகாய் பொடி – 2 ஸ்பூன்

கொத்தமல்லி இலை – ஒரு கொத்து

மண்டை வெல்லம் – 2 துண்டுகள் (சிறிய நெல்லிக்காய் அளவு)

உப்பு – தேவையான அளவு

மசால் அரைக்க

நிலக்கடலைப் பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்

எள் – 3 டேபிள் ஸ்பூன்

சீரகம் – 1 ஸ்பூன்

மிளகு – 1 ஸ்பூன்

வெந்தயம் ‍ 1/2 ஸ்பூன்

தாளிக்க

நல்ல எண்ணெய் – 5 ஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

மிளகு – 1 டீஸ்பூன்

வெந்தயம் – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கீற்று

செய்முறை

கத்தரிக்காயின் அடியில் உள்ள பூவிதழ் பகுதியை விட்டு விட்டு நீளமான காம்பினை மட்டும் வெட்டவும்.

கத்திரிக்காயை லேசாக படத்தில் உள்ளவாறு கீறிக் கொள்ளவும்.

கீறிய கத்தரிக்காயை அரிசி கழுவிய தண்ணீரில் போட்டு வைக்கவும். இவ்வாறு செய்வதால் கத்தரிக்காய் கறுத்துப் போகாது.

வெறும் வாணலியில் நிலக்கடலைப் போட்டு வறுத்துக் கொள்ளவும். வறுத்த நிலக்கடலை எனில் லேசாக சூடேற்றிக் கொள்ளவும்.

நிலக்கடலையை வறுக்கும் போது

அதே வாணலியில் எள்ளினைப் போட்டு பொரியும் வரை வறுத்துக் கொள்ளவும்.

எள்ளினை வறுக்கும் போது

அதே வாணலியில் மிளகு, சீரகம், வெந்தயத்தைச் சேர்த்து, வெந்தயம் சிவந்து சீரகம் பொரியுமாறு வறுத்துக் கொள்ளவும்.

மிளகு,சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்ததும்
மிளகு,சீரகம் மற்றும் வெந்தயம் வறுத்ததும்

வறுத்த பொருட்களை நன்கு ஆற வைத்து மிக்ஸியில் நிலக்கடலை, எள், வெந்தயம், சீரகம் மற்றும் மிளகு ஆகியவற்றைச் சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.

மிளகு,சீரகம்,வெந்தயம்,நிலக்கடலை மற்றும் எள் ஆகியவற்றை மிக்சியில் சேர்த்ததும்
விழுதாக்கியதும்

தக்காளியை அலசி சிறுசதுரத் துண்டுகளாக வெட்டவும்.

பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத்துண்டுகளாக வெட்டவும்.

வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.

புளியைப் பிய்த்துப் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து சற்று கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை அலசி காம்பு நீக்கி நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

வாணலியில் நல்ல எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், அதில் கீறிய கத்தரிக்காய்களைச் சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும்.

எண்ணெயில் கத்தரிகாயைச் சேர்த்ததும்
வதக்கிய கத்தரிக்காய்கள்

அதே எண்ணெயில் கடுகு, சீரகம், வெந்தயம், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.

தாளிதம் செய்ததும்

அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து கிளறவும்.

வெங்காயம் சேர்த்ததும்

அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.

பச்சை மிளகாய் மற்றும் வற்றல் சேர்த்ததும்

ஒரு நிமிடம் கழித்து வெள்ளைப்பூண்டினைச் சேர்த்து வதக்கவும்.

பூண்டு சேர்த்ததும்

வெங்காயம் பாதி வதங்கியதும் அதனுடன் தக்காளி, சிறிதளவு உப்பு சேர்த்து தக்காளி நன்கு மசிந்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

தக்காளி சேர்த்ததும்

அதனுடன் வதக்கிய கத்தரிக்காய் சேர்த்து லேசாக பிரட்டி விடவும்.

கத்தரிக்காய் சேர்த்ததும்

பின்னர் மல்லிப் பொடி, மஞ்சள் பொடி மற்றும் மிளகாய் பொடி சேர்த்து பிரட்டி விடவும்.

பொடி வகைகளைச் சேர்த்ததும்

அதனுடன் கரைத்து வைத்துள்ள புளியைக் கரைசல் மற்றும் தேவையான உப்பு சேர்த்து மூடி போட்டு வேக விடவும். அவ்வப்போது கலவையை கிளறி விடவும்.

புளித் தண்ணீர் சேர்த்ததும்
எண்ணெய் பிரிந்ததும்

எண்ணெய் பிரிந்ததும் அதனுடன் அரைத்து வைத்துள்ள நிலக்கடலை விழுதினைச் சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி, அடுப்பினை மிதமான தீயில் வைத்து மூடி போடவும்.

நிலக்கடலை விழுதினைச் சேர்த்ததும்
தேவையான தண்ணீர் சேர்த்ததும்

இரண்டு நிமிடங்கள் கழித்து மண்டை வெல்லத்தைச் சேர்த்துக் கிளறவும்.

கொத்தமல்லி இலையைத் தூவியதும்

பின்னர் ஒரு நிமிடம் கழித்து கொத்தமல்லி இலையைத் தூவிக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

சுவையான கத்தரிக்காய் கிரேவி தயார்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் கத்திரிக்காயை சதுரத் துண்டுகளாக்கிச் சேர்த்தும் கிரேவி தயார் செய்யலாம்.

மசாலாப் பொருட்கள், புளி, வெல்லம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் அளவு மாறினாலும் இதனுடைய சுவை குறையும். ஆதலால் மேற்கண்ட பொருட்களின் விகிதம் முக்கியம்.

கருப்பு எள்ளிற்குப் பதிலாக வெள்ளை எள் பயன்படுத்தலாம். வெள்ளை எள் பயன்படுத்தும்போது மசாலா கலவை வெள்ளையாக இருக்கும்.

கிரேவி நல்ல நிறமாக வேண்டும் என்றும் நினைப்பவர்கள் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கிரேவி தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.