கத்தரிக்காய் சட்னி

கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி?

கத்தரிக்காய் சட்னி இட்லி, தோசை ஆகியவற்றிற்கு தொட்டுக் கொள்ளச் செய்யப்படும் சட்னிகளுள் ஒன்று. இதனை எளிதாகவும், சுவையாகவும் வீட்டில் செய்யலாம்.

இதன் செய்முறை பற்றிப் பார்ப்போம்.

காய்களின் ராஜா கத்தரிக்காயின் பயன்கள் பற்றி அறிய இங்கே சொடுக்கவும்.

தேவையான பொருட்கள்

 

கத்தரிக்காய் சட்னி செய்ய‌ தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் சட்னி செய்ய‌ தேவையான பொருட்கள்

 

கத்தரிக்காய் – 250 கிராம்

தக்காளி – 75 கிராம்

பெரிய வெங்காயம் – 75 கிராம்

பச்சை மிளகாய் – 2 எண்ணம்

மிளகாய் வற்றல் – 2 எண்ணம்

வெள்ளைப் பூண்டு – 3 எண்ணம் (நடுத்தரமானது)

புளி – சிறிய நெல்லிக்காய் அளவு

மஞ்சள் பொடி – ½ டீஸ்பூன்

பெருங்காயப் பொடி – ½ டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – 100 மில்லி லிட்டர்

தாளிக்க

நல்ல எண்ணெய் – 2 டீஸ்பூன்

கடுகு – ¼ டீஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கீற்று

செய்முறை

கத்தரிக்காயை காம்பு நீக்கி சதுரங்களாக வெட்டவும்.

தக்காளியை அலசி சதுரத் துண்டுகளாக்கவும்.

பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கிக் கொள்ளவும்.

 

தயார் நிலையில் தேவையான பொருட்கள்
தயார் நிலையில் தேவையான பொருட்கள்

 

பச்சை மிளகாய், மிளகாய் வற்றலை காம்பு நீக்கிக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

குக்கரில் நறுக்கிய கத்தரிக்காய், தக்காளி, பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி, புளி, தண்ணீர் மற்றும்  தேவையான உப்பு ஆகியவற்றை குக்கரில் சேர்த்து மூடி 3 விசில் வந்ததும் அடுப்பினை அணைத்து விடவும்.

 

கலவைகளை குக்கரில் சேர்த்ததும்
கலவைகளை குக்கரில் சேர்த்ததும்

 

குக்கரை மூடும் முன்பு
குக்கரை மூடும் முன்பு

 

குக்கரை திறந்த பின்பு
குக்கரை திறந்த பின்பு

 

குக்கரின் ஆவி அடங்கியதும் கலவையிலிருந்து தண்ணீரை தனியே வடித்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் கலவை மிக்ஸியில் போட்டு  அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த கலவையுடன் வடித்து வைத்துள்ள தண்ணீரைச் சேர்த்து ஒரு சேரக் கலக்கிக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்து கொள்ளவும்.

சுவையான கத்தரிக்காய் சட்னி தயார்.

 

கத்தரிக்காய் சட்னி
கத்தரிக்காய் சட்னி

 

இதனை இட்லி, தோசை, சப்பாத்தி, ஆப்பம், இடியாப்பம் ஆகியவற்றிற்கு தொட்டுக் கொள்ள பொருத்தமாக இருக்கும். சாதத்திற்கும் இதனைப் பயன்படுத்தலாம்.

குறிப்பு

கத்தரிக்காய் சட்னிக்கு சதைப்பற்றுள்ள பிஞ்சு கத்தரிக்காயைத் தேர்வு செய்யவும்.

ஜான்சிராணி வேலாயுதம்