கத்தரிக்காய் திரக்கல் கத்தரிக்காயைக் கொண்டு செய்யப்படும் வித்தியாசமான சுவையுள்ள குழம்பு வகையாகும்.
இது சாதாரண திரக்கலைப் போல் அல்லாமல் தேங்காய் சேர்க்காமல் செய்யப்படுகிறது. இனி சுவையான கத்தரிக்காய் திரக்கல் செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் – 150 கிராம்
உருளைக் கிழங்கு – 50 கிராம்
பெரிய வெங்காயம் – 50 கிராம்
தக்காளி – 50 கிராம்
கொள்ளு – 4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் பொடி – தேவையான அளவு
மசால் அரைக்க
கசகசா – 1 ஸ்பூன்
பெருஞ்சீரகம் – ½ ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 4 எண்ணம்
வெள்ளைப் பூண்டு – 3 பற்கள் (பெரியது)
கறிவேப்பிலை – 3 கீற்று
புளி – நெல்லிக்காய் அளவு
தாளிக்க
நல்ல எண்ணெய் – 5 ஸ்பூன்
கடுகு – ½ ஸ்பூன்
பெருஞ்சீரகம் – ½ ஸ்பூன்
கருவேப்பிலை – 2 கீற்று
கத்தரிக்காய் திரக்கல் செய்முறை
கத்தரிக்காய், தக்காளி, பெரிய வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகியவற்றை மிகவும் பொடிதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
கொள்ளினை வெறும் வாணலியில் வறுத்து கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.
கசகசாவை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.
புளியை பிய்த்துப் போட்டு அது மூழ்கும்வரை (சிறிதளவு) தண்ணீர் ஊற்றி ஊறவிடவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
மிளகாய் வற்றலை காம்பு நீக்கிக் கொள்ளவும்.
வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி சுத்தம் செய்யவும்.
வறுத்த கசகசா, ஊற வைத்த புளி, வெள்ளைப் பூண்டு, மிளகாய் வற்றல், பெருஞ்சீரகம், சீரகம், கறிவேப்பிலை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, கடுகு, பெருஞ்சீரகம் சேர்த்து தாளிதம் செய்யவும்.
பின் அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் கால்பாகம் வெந்ததும் அதனுடன் உருளைக்கிழங்கினைச் சேர்த்து வதக்கவும்.
கிழங்கு பாதி வெந்ததும் நறுக்கிய தக்காளி, கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.
கத்தரிக்காய் நன்கு வெந்ததும் அதனுடன் விழுதாக்கிய மசாலாக் கலவை, தேவையான உப்பு, மஞ்சள் பொடி ஆகியவற்றைச் சேர்த்து கிளறி மூடி போடவும்.
அவ்வப்போது கிளறி விடவும்.
கலவை சுருள வதங்கியதும் கொள்ளுப் பொடியைச் சேர்த்து ஒரு சேரக் கிளறி தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
குழம்பு கலவை ஒரு கொதி வந்ததும் அடுப்பினை சிம்மில் வைக்கவும்.
மசாலா வாடை மாறி குழம்பு தேவையான பதத்திற்கு வந்ததும் இறக்கி விடவும்.
சுவையான கத்தரிக்காய் திரக்கல் தயார்.
இதனை சாதம், சப்பாத்தி, தோசை, பூரி ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை குழம்பில் சேர்த்து இறக்கலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!