கத்தரிக்காய் வதக்கல் சட்னி செய்வது எப்படி?

கத்தரிக்காய் வதக்கல் சட்னி அருமையான சட்னி ஆகும். எளிதில் இதனை செய்து விடலாம் என்பது இதனுடைய சிறப்பு. இதனுடைய சுவையும் மிக அபாரம்.

கத்தரிக்காயை விருப்பாதவர்கள்கூட இதனை விருப்பி உண்பர். இது இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன் தொட்டுக் கொள்ள மிகவும் பொருத்தமாக இருக்கும்.

இனி சுவையான கத்தரிக்காய் வதக்கல் சட்னி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் – 4 எண்ணம் (சிறியது) (தோராயமாக 150 கிராம்)

தக்காளி – 3 எண்ணம் (பெரியது) (தோராயமாக 150 கிராம்)

சின்ன வெங்காயம் – 8 எண்ணம் (பெரியது)

வெள்ளைப் பூண்டு – 1 பல் (பெரியது)

பச்சை மிளகாய் – 1 எண்ணம் (பெரியது)

உப்பு – தேவையான அளவு

நல்ல எண்ணெய் – 4 ஸ்பூன்

உளுந்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

சீரகம் ‍- 1/4 ஸ்பூன்

கொத்த மல்லி இலை – ஒரு கொத்து

கறிவேப்பிலை – 1 கீற்று

தாளிக்க

நல்ல எண்ணெய் ‍- 1/2 ஸ்பூன்

கடுகு ‍- 1/2 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் – 1 எண்ணம்

கறிவேப்பிலை – 1 கீற்று

கத்தரிக்காய் வதக்கல் சட்னி செய்முறை

கத்தரிக்காயை காம்பு நீக்கி சிறிய சதுரங்களாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நேராக வெட்டிக் கொள்ளவும்.

தக்காளியை அலசி சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

வெள்ளைப்பூண்டினை தோலுரித்து வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

மல்லி இலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை அலசி காம்பு நீக்கி நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.

மிளகாய் வற்றலை காம்பு நீக்கி இரண்டாக ஒடித்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் சீரகம், உளுந்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.

உளுந்து, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்ததும்

உளுந்தம் பருப்பு நிறம் மாறத் தொடங்கியதும் அதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்க்கவும்.

சின்ன வெங்காயம் சேர்த்ததும்

1/2 நிமிடம் கழித்து பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

மிளகாய் சேர்த்ததும்

ஒரு நிமிடம் கழித்து நறுக்கிய வெள்ளைப் பூண்டினைச் சேர்த்து வதக்கவும்.

பூண்டினைச் சேர்த்ததும்

வெங்காயம் கண்ணாடிப் பதம் வந்ததும் கத்தரிக்காயைச் சேர்த்து வதக்கவும்.

கத்தரிக்காய் சேர்த்ததும்

கத்தரிக்காய் வதங்கி சுருங்கியதும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

தக்காளி சேர்த்ததும்

தக்காளி மசிய வெந்ததும், அதில் நறுக்கிய கொத்தமல்லி இலையைச் சேர்த்து ஒருசேரக் கிளறி அடுப்பினை அணைத்து விடவும்.

மல்லி இலை சேர்த்ததும்

கலவையை நன்கு ஆற விடவும்.

கலவை ஆறியதும்

பின்னர் அதனை மிக்ஸியில் சேர்த்து தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து விழுதாக்கிக் கொள்ளவும்.

அரைத்த விழுதினை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

தாளிக்கும் முன்பு

வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் சேர்த்து தாளித்து அரைத்த விழுதில் கொட்டவும்.

தாளிக்கும் போது

சுவையான கத்தரிக்காய் வதக்கல் சட்னி தயார்.

குறிப்பு

சட்னிக்கு பிஞ்சுக் கத்தரிக்காயைத் தேர்வு செய்யவும்.

கத்தரிக்காய் அளவுக்கு தக்காளி சேர்ப்பதால் புளி சேர்க்கத் தேவையில்லை.

விருப்பமுள்ளவர்கள் சிறிதளவு இஞ்சியை வதக்கும் போது சேர்த்துவிட்டு, மிக்ஸியில் அரைக்கும்போது இஞ்சியை நீக்கிக் கொள்ளலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.