பள்ளி முடிந்தது. வழக்கம் போல் கணிதநேசனும் வேதிவாசனும், ஒன்றாக புறப்பட்டு, கணிதநேசனுடைய இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வந்தனர்.
வாகன இருக்கையை கையால் இரண்டு தட்டுதட்டி, அதிலிருந்த தூசிகளை நீக்கியபின், வாகனத்தை இயக்குவதற்கு தயாரானார் கணிதநேசன்.
‘ஆசைமுகம் மறந்துப் போச்சே…. என்ற பாரதியார் பாடல் அழைப்போசை ஒலிக்கத் தொடங்கியது, வேதிவாசனின் கூர்திறன் பேசியிலிருந்து….
எடுத்துப்பார்க்க, அம்மா அழைக்கிறார்.
உடனே அழைப்பை ஏற்று, சொல்லுங்கம்மா… என்றார் வேதி.
எங்கப்பா இருக்கீங்க… கிளம்பிட்டீங்களா.
“கிளம்ப போறோம். சொல்லுங்க.
“நாளைக்கு சாம்பார் வைக்கனும், ஏதாவது காய் வாங்கிட்டு வாயேன்.
“சரிம்மா… வேற என்ன வேணும்.
வேற எதுவும் வேணாம்பா.
சரி வச்சுடரேன். என்றபடி, கூர்திறன் பேசியை அனைத்து வைத்தார் வேதிவாசன்.
“என்னப்பா… என கணிதநேசன் கேட்க,
காய் வாங்கனுமா, காய்கறி மார்கேட் போகனும்
“நானும், காய்கறி வாங்கனும். நாம் இரண்டு பேரும் மார்கேட் போய்ட்டு, அப்புறம் உங்கள வீட்டில விட்டிடுரேன் என்றார் கணிதநேசன்.
“கணி உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே நேரம் இருக்குல
ஒன்னும் பிரச்சனை இல்லப்பா. வாங்க போவோம்.
இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.
பதினைந்து நிமிட பயணத்திற்கு பின்…. வழக்கமாக வரும் காய்கனி அங்காடிக்கு வந்து சேர்ந்தனர்.
வாகனத்தை ஓரமாக நிறுத்தியபின், உள்ளே சென்றனர்.
கணி நீங்க என்ன வாங்கனும்.
“உம்ம்… பாத்துக்குட்டே போவோம். வேண்டியத வாங்கிப்போம்….
“சரிப்பா…” என்றப்படி இருவரும் கூடைகளை எடுத்துக் கொண்டு காய்கறிகள் வைக்கப்பட்டிருந்த இடத்தை நோக்கி நகர்ந்தனர்.
முதலில் கிழங்குவகைகளான உருளை கிழங்கு, சேப்பங் கிழங்கு, கருணைக் கிழங்கு முதலியன இருந்தன. பின்னர் வெங்காய வகைகள் இருந்தன.
அடுத்து, மணித்தக்காளி, பேத்தக்காளி, என தக்காளி வகைகள் வைக்கப்படிருந்தன.
அடுத்தடுத்து, சுரைக்காய், பீர்க்கங்காய், புடலங்காய், பாகற்காய், காராமணி, கத்தரி, கேரட், கொத்தவரை, பூசணி, என பலவித காய்கறிகளும் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
கத்தரித் துண்டுகள் பழுப்பாக மாறுவது ஏன்?
அவைகளை பார்த்தவுடன்,
கணி, நான் கத்தரிப் பழம் வாங்கப் போரேன். உங்களுக்கு வேணுமா.
கணிதநேசனுக்கு புரியவில்லை. என்னது… கத்தரிப் பழமா கத்தரிக் காய்–னுதான சொல்லுவாங்க என்றார் ஆச்சரியத்துடன்.
“சரிதாம்பா.. ஆனா நாம உச்சரிப்பது போல, கத்திரிக்காய் ஒன்னும் ’காய்’ அல்ல!. அது சொலனேசியே (Solanaceae) எனும் தாவர குடும்பத்தை சேர்ந்த ஒருவகை பழம்.
ஆங்கிலத்துல eggplant, aubergine, melongene, brinjal இல்லைனா guinea squash என பல பெயர்களில் இது அழைக்கப்படுது
“அப்படியா!
“இம்ம்… அதோட கத்திரிப் பழத்தின் ஊதா நிறத்திற்கு காரணம், ஆந்தோசயனின் anthocyanin எனும் ஒருவகை குடும்பச் சேர்மம் தான்.
“ஆமா… புளூபெர்ரீஸ் பழங்கள்ள ஆந்தோசயனின் இருக்குன்னு ஒருதடவ நீங்க சொல்லியிருக்கீங்களே
“நல்லா ஞாபகம் வச்சிரிக்கீங்க… கணி, இன்னும் குறிப்பா சொல்லனும்னா, கத்தரியின் ஊதாநிறத்திற்கு தோல்பகுதி நாசுனின் nasunin எனும் ஆந்தோசயனின் குடும்பச் சேர்மம் தான் காரணம்.
இது இரண்டு மாற்றிய அமைப்புகளில் isomeric forms இருக்குது. ஒன்று சிஸ் நாசுனின் cis nasunin மற்றொன்று டிரான்ஸ் நாசுனின் trans nasunin. இதுல டிரான்ஸ் நாசுனின் அமைப்பு தான் அதிக நிலைப்பு தன்மை கொண்டது.
“நல்லது வேதி. ஆனா, கத்திரி ஏன் பஞ்சு மாதிரி மிருதுவா இருக்கு
“அதற்கு காரணம் அதோட பஞ்சு போன்ற அமைப்பு spongy texture தான். அதாவது அதன் செல் தொகுப்புகளின் இடையே இருக்கும் காற்று பைகள் தான் காரணம்.
சமைக்கும் போது, இந்த காற்று பை அமைப்பு சிதஞ்சிடும், அதனால தான் கத்திரிபழம் சுருங்கி போயிடுது என்றார் வேதிவாசன்.
“அப்படியா… இது நல்ல தகவல் தான்… ஆனா இன்னும் ஒரு சந்தேகம். நறுக்கி வச்ச கத்தரித் துண்டுகள் பழுப்பாக மாறுவது ஏன்?
“அதுக்கு காரணம் அதிலிருக்கும் பாலிஃபீனால் சேர்மங்கள் தான். அதாவது, கத்தரிப் பழத்தை வெட்டும் பொழுது, அதன் செல்களில் இருந்து பாலிபினால் ஆக்ஸிடேஸ் நொதி வெளிப்படும்.
இது பாலிஃபீனால் சேர்மங்களை ஆக்சிகரனம் செய்து பாலிஃபீனால் பலபடிச் சேர்மங்களை தரும்.
இந்த பலபடி சேர்மம் பழுப்பு நிறமுடையது. அதனால் தான் நறுக்கிய கத்தரிபழ துண்டுகள் பழுப்பு நிறத்துல மாறுது என்று விளக்கினார் வேதிவாசன்.
அப்பொழுது சார் கொஞ்சம் நகர்ந்துக்குறீங்களா என்று ஒரு குரல் பின்னாலிருந்து ஒலித்தது. அது அங்காடிக்கு வந்திருந்த ஏதோ ஒரு வாடிக்கையாளரின் குரல்.
“மன்னிச்சிக்குங்க சார் என்றபடி சற்று நகர்ந்தார் வேதிவாசன்.
“பரவாயில்லீங்க சார் என்று புன்முறுவலுடன் அவர்களை கடந்து சென்றார் அந்த வாடிக்கையாளர்.
“சரி, வேதி. நாம காய்கறிகளை வாங்கிட்டு கிளம்புவோமா என்றார் கணிதநேசன்.
சரிப்பா என்றபடி இருவரும் கத்தரிப்பழம் இருந்த பகுதியை நோக்கி நகரத் தொடங்கினர்.
முனைவர்.ஆர்.சுரேஷ்
சென்னை.
அலைபேசி: 9941091461
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!