கந்த சஷ்டி திருவிழா

கந்தசஷ்டி என்பது ஆண்டுதோறும் இந்துக்களால் ஐப்பசி மாதம் அமாவாசையை அடுத்து வரும் ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இது தீபாவளியை அடுத்து வரும் நாட்களில் கொண்டாடப்படுகிறது.

தீமையை எதிர்த்து நன்மை வெற்றி பெற்றதின் அடையாளமாக கந்த சஷ்டி திருவிழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வு விரதமுறை மேற்கொள்வது. சஷ்டியில் விரதமிருந்து மனம் மற்றும் உடலை தூய்மைப்படுத்திக் கொள்வது ஆண்டாண்டு காலம் பின்பற்றப்படும் வழிமுறையாகும்.

ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களோடு காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகிய தீய குணங்களை அழித்து முற்றுணர்வு, வரம்பிலா ஆற்றல், தன்வயமுடைமை, வரம்பின்மை, இயற்கை உணர்வு, பேரருள் ஆகிய தேவகுணங்கள் எனப்படும் நல்ல குணங்களை பெறும் நோக்கில் கடைப்பிடிக்கப்படும் விரதம்.

ஆதலால் கந்தசஷ்டி விரதம் ஒப்பரும் விரதம் என்று இவ்விரதத்தைப் பற்றி கந்த புராணம் குறிப்பிடுகின்றது. இவ்விழாவானது ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட எல்லா முருகன் கோவில்களிலும் நடத்தப்படுகிறது. சூரசம்காரம் நிகழ்ச்சியும் கோவில்களில் நடத்தப்படுகிறது.

மக்கள் இந்நாட்களில் விரதமிருந்து பக்தியுடன் முருகனை நினைத்து கந்தர் அனுபூதி, கந்தசஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தபுராணம், சுப்ரமணிய புஜங்கம் போன்றவற்றை பாடியோ, அல்லது பாடுவதைக் கேட்டோ வழிபாட்டினை மேற்கொள்கின்றனர்.

 

இவ்விழாவிற்கான காரணங்கள்:

படைப்புக் கடவுளான பிரம்மாவின் மகனான காசிபர் என்னும் முனிவர் சிறந்த சிவ பக்தர். சிவனை நோக்கித் தவிமிருந்து சிவனிடமிருந்து ஒப்பற்ற சக்தியைப் பெற்றவர். ஆனால் மாயை என்னும் அசுரப் பெண்ணின் அழகில் மயங்கி அவளைத் திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு சூரபத்மன், சிங்க முகன், தாரகாசுரன் ஆகிய அசுரர்களும், அசமுகி என்ற அசுரப் பெண்ணும் பிறந்தனர். இவர்களில் சூரபத்மன் மனித முகமும், சிங்க முகன் சிங்க முகமும், தாரகாசுரன் யானை முகமும், அசமுகி ஆட்டு முகமும் உடையவர்களாகவும், அசுரக்குணம் நிறைந்தவர்களாகவும் இருந்தனர்.

அசுர சகோதரர்கள் சிவனை நினைத்து தவமிருந்து சிவனிடமிருந்து சிவ அம்சக் குழந்தையால் தான் தங்களுக்கு அழிவு வேண்டும் என்ற வரத்தினைப் பெற்றனர். இதனால் ஆணவம் தலைக்கேற, எல்லோரையும் துன்புறுத்தினர்.

அசுரர்களின் கொடுமைகள் தாளாமல் எல்லோரும் சிவனிடம் கொடுமைகள் பற்றி முறையிட்டு தங்களை காப்பாற்ற வேண்டினர். அப்போது சிவபெருமான் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்களோடு அதோ முகம் என்னும் ஆறு முகங்களிலிருந்து தீப்பொறிகளை உருவாக்கினார்.

அவற்றை வாயு மற்றும் அக்னி பகவான் மூலம் கங்கையிடம் சேர்ப்பிக்கச் செய்தார். கங்கையும் வேல் போன்ற புற்களை உடைய சரவணப் பொய்கையில் தீப்பொறிகளைச் சேர்த்தது. அவை ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாக மாறின. இதனால் குழந்தை சரவணபவன் என்றழைக்கப்பட்டார்.

பின் ஆறு கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி, சீராட்டி வளர்த்தனர். எனவே இவர் கார்த்திகேயேன் என்றழைக்கப்பட்டார்.

குழந்தையை பார்க்க வந்த பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் ஒன்று சேர்த்தார். குழந்தை ஆறு தலை மற்றும் ஒரு உடலுடன் காட்சியளித்தது. இப்போது இவர் சண்முகன், ஆறுமுகன் ஆனார்.

பின் குழந்தையானது வளர்ந்து சிறுனாக மாறிய போது குமரன் ஆனார். இவரே தேவர்களின் படை தளபதி ஆனார். இப்போது இவர் தேவசேனாதிபதி ஆனார்.

பின் அன்பின் வடிவான தன்தாய் பார்வதியிடம் இருந்து ஞான வேலை வாங்கிக் கொண்டு சூரனை சம்காரம் செய்யப் புறப்பட்டார். இப்போது இவர் சக்தி வேலன் என்றழைக்கப்பட்டார்.

முருகனுக்கும் அசுரர்களுக்கும் இடையில் ஐப்பசி வளர்பிறை முதல் நாளிலிருந்து பத்து நாட்கள் வரை போர் நடைபெற்றது. முதலில் தாராசுரன் மற்றும் அவனது கிரௌஞ்ச மலை என்னும் மாயை முருகன் அழித்தார். பின் சிங்க முகன் என்னும் கன்மை ஒழித்தார்.

இறுதியில் நான், எனது என்ற ஆணவத்தின் வடிவமான சூரபத்மனுடன் போரிட்டார். அப்போது அவன் பல மாயைகள் புரிந்தான். இறுதியில் சூரபத்மன் மாமரமாக மாறினான். முருகன் தன் தாயிடமிருந்து வாங்கிய ஞானவேலைக் கொண்டு மாமரத்தைப் பிளந்தார்.

அப்போது சூரன் ஞானவேல் தன்மீது பட்டதும் மனம் திருந்தி தன்னை மன்னிக்குமாறு வேண்டினான் அப்போது முருகன் இரண்டு துண்டுகளான மாமரத்திலிருந்த அசுரனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றினார். மயிலைத் தன் வாகனமாகவும், சேவலை தனது கொடியிலும் வைத்துக் கொண்டார். இந்நிகழ்வே சூரசம்காரம் என்றழைக்கப்படுகிறது. இதுவே கந்த சஷ்டி கொண்டாடக் காரணமாகும்.

ஞான சக்தி எனப்படும் வேலின் தாக்கத்தால் ஆணவம் அழிந்து பரம்பொருளின் திருவடி அடையலாம் என்பதை உணர்த்தவே கந்தசஷ்டி விரம் கடைப்பிடிக்கப்படுகிறது. சூரசம்கார நிகழ்ச்சியானது திருச்செந்தூரில் நடைபெற்றதாக கருதப்படுகிறது. எனவே இவ்விழா திருச்செந்தூரில் சிறப்பாக நடத்தப்படுகிறது.

 

சஷ்டி விரதமுறை

இவ்விரத முறையானது ஐப்பசி மாதம் வளர்பிறை முதல் நாளிலிருந்து ஆறு நாட்கள் வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரதத்தைக் கடைப்பிடிப்போர் ஆறு நாட்களும் உணவருந்தாமலும் ஒரு சிலர் ஒரு வேளை உணவு உண்டும், ஒரு சிலர் பால், பழங்களை உட்கொண்டும், ஒரு சிலர் ஆறாவது நாள் மட்டும் விரதமிருந்தும், ஒரு சிலர் ஆறு மிளகை வாயிலிட்டு ஆறு கை தண்ணீர் குடித்தும், ஒரு சிலர் மௌன விரதமிருந்தும் வழிபாடு மேற்கொள்கின்றனர்.

இவ்விரதமிருக்கும் நாட்களில் பக்தர்கள் அதிகாலையில் எழுந்து காலைக்கடன்கள் முடித்து, குளிர்ந்த நீரில் நீராடி, வீட்டிலோ, அல்லது கோவிலுக்குச் சென்றோ வழிபடுகின்றனர். வழிபாட்டின்போது கந்த சஷ்டி, கந்தகுரு கவசம், சண்முக கவசம், கந்தரனுபூதி, கந்தர் கலிவெண்பா, திருப்புகழ் போன்ற பாடல்களையும் ஓம் சரவணபவ என்னும் முருக மந்திரத்தையும் கூறுகின்றனர். இறைவனுக்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடுகின்றனர். இவ்விரதத்தை மேற்கொண்டு உடல் மற்றும் மனத்தூய்மை அடைய பிரார்த்திக்கின்றனர்.

இவ்விரதமுறையை மேற்கொள்வதால் நோய்கள் நீங்கும். பிள்ளைப்பேறு கிட்டும். மனத்தூய்மை கிடைக்கும் என்றும் கருதுகின்றனர். சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது கந்த சஷ்டி குறித்த பழமொழியாகும். அதாவது சஷ்டியில் நோன்பிருந்தால் அகப்பை எனப்படும் கருப்பையில் பிள்ளை வரும் எனவும் சஷ்டி விரதத்தை மேற்கொண்டு அகப்பை எனப்படும் மனத்தில் தூய்மை ஏற்படும் எனவும் பொருள் கொள்ளலாம்.

 

திருச்செந்தூரில் கந்த சஷ்டி

திருச்செந்தூர் சூரனை வென்ற இடமானதால் கந்த சஷ்டி நிகழ்ச்சியானது இங்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. முருகனின் செயல்கள் திரும்ப செய்து காட்டப்படுதலே இத்திரு விழாவின் நோக்கம் ஆகும்.

இவ்விழாவின் போது ஐப்பசி அமாவாசையை அடுத்து ஆறு நாட்களிலும் வள்ளி, தெய்வானை கோயில்களுக்கிடையேயுள்ள வேள்விக் கூடத்தில் காலையிலும் மாலையிலும் வேள்வி நடைபெறுகிறது.

முதல் ஐந்து நாட்கள் இரவில் முருகன் வள்ளி தெய்வானையுடன் திருவாடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளுகிறார். இங்கு அவருக்கு திருமுழுக்காட்டி தங்க தேரில் வீதி வலம் வரச் செய்யப்படுகிறார்.

ஆறாம் நாள் மாலை நான்கு மணி அளவில் கடற்கரையில் சூரனை வெல்லும் திருவிழா தொடங்குகிறது. முதலில் யானைமுகம் கொண்ட தாரகனுடன் போர் தொடங்குகிறது. அவன் வலமிடமாக முருகனை சுற்றி வருகிறான். தலையில் பட்டுக் கட்டிய பட்டர் வேலால் அச் சூரனை நெற்றியில் குத்தி வீழ்த்துகிறார்.

அதே உடலில் சிங்கமுகன் தலை பொருத்தப்படுகிறது. சிங்க முகன் முருகனை வலமிடமாகச் சுற்றி வருகிறான். பட்டர் சிங்க முகன் நெற்றியிலும் வேலால் குத்தி வீழ்த்துகிறார்.

அடுத்து சூரபத்மன் தலை அதே உடலில் பொருத்தப்படுகிறது. சூரனும் முருகனை வலமிடமாக வருகிறான். இப்போது சூரனின் நெற்றியிலும் வேலால் குத்தி வீழ்த்துகிறார். நான்காவதாக மாமரமும் சேவலும் அவ்வுடலில் பொருத்தப்படுகின்றன. மாமரம் வெட்டுண்டதும் சேவல் பறக்கிறது.

ஒரே உடலில் தலைகளைப் பொருத்துவது ஒரே உடலில் மாயை, கன்மம், ஆணவம் பொருந்தியுள்ளதைக் குறிப்பிடுகிறது. சூரனை வென்ற பின் கடற்கரையிலுள்ள சஷ்டி  மண்டபம் என்னுமிடத்தில் முருகனை அமர்த்தி வழிபாடு நடத்துகின்றனர்.

அப்போது கடல் அலைகளோடு போட்டியிடுவது போல் மனிதர் தலைகள் அதிக அளவில் காணப்படும். பின் இரவில் 108 மகாதேவர் முன்பு செயந்தி நாதரை அமர்த்தி வேள்விக் கூடத்தில் இது நாள் வரை கும்பங்களில் வைத்திருந்த நீரை எடுத்து வருவர். முருகனுக்கு முன் கண்ணாடி பிடிக்கப்படும். கண்ணாடியில் தெரியும் நிழலுக்கு கும்பநீரால் அபிசேகம் நடத்தப்படுகிறது. இதற்கு சாயாபிடேகம் என்று பெயர்.

 

அடியார் நோன்பு

சூரபத்மனை வென்ற இடமாதலின் இங்கு வந்து நோன்பு நோற்பதையே மக்கள் சிறப்பாக கருதுகின்றனர். நோன்பு நோற்பவர் இக்கோயிலின் எல்லை தாண்டி ஆறு நாட்களும் செல்வதில்லை என உறுதி பூணுகின்றனர்.

கோயிலுக்கு வடக்கு எல்லையாக வள்ளி குகையும், தெற்கே நாழிக்கிணறும், கிழக்கே கடலும், மேற்கே தூண்டு கை விநாயகர் கோயிலும் எல்லைகளாக கொள்ளப்படுகின்றன. இவ்விடம் கடற்கரை உள்ளதால் நோய் நீக்கம் ஏற்படுவதாக கருதப்படுகிறது.

ஐப்பசி மாதம் அமாவாசையன்று மாலையில் இருந்து இந்நோன்பு தொடங்கப்படுகின்றது. ஆறு நாட்களும் உமிழ்நீர் கூட விழுங்காமல் இருப்பவரும் உண்டு. இவ்வாறு செய்ய இயலாதவர்கள் நண்பகலில் ஆறு மிளகையும், ஆறு கை நீரையும் அருந்தலாம்.

உயிர், உணர்ச்சி வளர்க்கும் விரதமாதலின் பழச்சாறு பருகுதல் தவிர்க்கப்படுகிறது. இவ்விரதத்தில் உண்ணா நோன்புடன் மௌன விரதம் கடைப்பிடிப்பவரும் உண்டு. ஒரு சிலர் பகல் 1 மணிக்கு மட்டும் பச்சரிசி சோறு உண்கின்றனர். சிலர் துளசியும் தண்ணீரும் மட்டும் உட்கொள்கின்றனர். சஷ்டிக்கு அடுத்த நாள் சிவனடியாரோடு உணவு உண்கின்றனர்.

 

திருக்கல்யாணம்

சூரனைவென்ற வீரனுக்கு இந்திரன் தன் மகள் தெய்வயானையை மணம் முடித்துக் கொடுத்தான் என்று கருதப்படுகிறது. சஷ்டிக்கு மறுநாள் தெய்வயானையம்மை ஊருக்கு மேற்கே தெப்பக்குளத்தருகிலுள்ள மண்படத்திற்கு எழுந்தருளுகிறார். மாலை வரை அங்கு தங்கியிருக்கிறார். இதனை அம்மன் தவம் இருக்கிறார் என்கின்றனர்.

மாலையில் பூமாலை மாற்றுவதற்காக குமரவிடங்கரை எழுந்தருளச் செய்கின்றனர். தெற்கு தேர் வீதியின் மேற்கு கோடியில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மேலக்கோபுர வாசலில் முன்பு உள்ள திருமண மண்டபத்தில் தெய்வயானை திருமணம் இரவில் நடைபெறும்.

தெய்வயானை செகந்நாதரை (மூலவருக்கு இடப்புறமுள்ள லிங்கம்) பூசை செய்து முருகனை அடைந்தார் எனவும், தெய்வயானைக்காக எழுந்தருளிய செந்நாதரை மூலவர் பூசை செய்கிறார் எனவும் இவ்வூர் தலபுராணம் கூறுகிறது.

நாமும் கந்த சஷ்டியில் விரதமுறையைக் கடைபிடித்து நம்மை பிடித்திருக்கும் மாயை, கன்மமம், ஆணவம் ஆகியவற்றை நீக்கி உடல் மற்றும் மனதால் தூய்மையாகி வாழ்வின் உன்னத நிலையை அடைவோம்.

 

Comments are closed.