தனது இருப்பிடத்தில் இருந்து புறப்பட்ட ஆடலரசு, நேராக கனலியின் கூட்டிற்கு சென்றது. அங்கு கனலி தியானத்தில் மூழ்கியிருந்தது. அதனால் எதுவும் பேசாமல் வாசலில் அமைதியாக நின்றது ஆடலரசு.
சில நிமிடங்கள் கடந்தன. கண்களை விழித்துப் பார்த்தது கனலி. வாசலருகில் ஆடலரசு அமைதியாய் நின்று கொண்டிருந்தது.
“உள்ள வா” என்று ஆடலரசுவை அழைத்தது கனலி.
வணங்கியபடி உள்ளே சென்ற ஆடலரசு, வாக்டெய்லின் உடல்நிலை குறித்து கனலியிடம் பேசியது.
சிறிது நேரத்தில் கனலியும் ஆடலரசும் அங்கிருந்து புறப்பட்டு, வாக்டெய்ல் இருக்கும் கூட்டிற்கு வந்து சேர்ந்தன.
தனது இன்முகத்தால் கனலியை வாக்டெய்ல் வரவேற்றது.
வாக்டெய்லின் மலர்ந்த முகத்தை கண்டதும் கனலி மகிழ்ந்தது.
அப்பொழுது….
“இப்ப எப்படி இருக்கு வாக்டெய்ல்?”
“உடல்நிலை நல்லா இருக்கு ஐயா. ஆனா இறகுகள தான் அசைக்க முடியல”
“சீக்கிரம் சரியாயிடும்ப்பா”
“ரொம்ப நன்றி ஐயா”
“தம்பி, உன்னோட அம்மா அப்பாவோட நீ சீக்கிரம் சேரனும். அதுக்கு அவங்க இருக்கிற இடத்த இப்பத்திலிருந்தே நாம தேடனும்”
வாக்டெய்லின் கண்கள் கலங்கின. அதைக் கண்டதும் ஆடலரசுவுக்கும் வருத்தம் மேலெழுந்தது.
“வருத்தப்படுவதால எதுவும் மாறப் போறதில்ல. ஒரு துன்பம்னா அதுல இருந்து மீண்டு வர வழியாத்தான் நாம தேடனும். மனசு பலகீனமாயிடுச்சுன்னா உடலும் சோர்ந்திடும்.புரியுதா?”
“சரி ஐயா, இனி கவலப்பட மாட்டேன்.”
“நல்லது தம்பி, உங்க கூட்டம் தங்கியிருக்கும் திசை பற்றி உன்னால ஏதாச்சும் அனுமானம் பண்ண முடியுதா?”
“ஐயா, நாங்க தெற்கு திசையில் தான் பயணிச்சோம். அநேகமா எங்க கூட்டம் சொர்க்க வனத்தோட தெற்கு திசையில இருக்கலாம்.”
“சரி தம்பி, என்னோட கொக்கு நண்பர்கள்கிட்ட சொல்லி வைக்கிறேன். கூடிய சீக்கிரம் உங்க கூட்டத்தோட நீ சேரத்தான் போற”
“நன்றிங்க”
கனலியின் வார்த்தைகளை கேட்ட ஆடலரசு அகம் மகிழ்ந்தது. எனினும், நண்பன் வாக்டெய்ல் தன்னை விட்டு பிரியப்போகும் நிகழ்வு சற்று வருத்தத்தையும் அதற்கு உண்டாக்கியது.
சொர்க்க வனம் பற்றி தெரிந்துக் கொள்வதில் ஆர்வமுடன் இருந்தது வாக்டெய்ல். அதை இன்று கனலியிடம் கேட்டு தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தது. உடனே,
“ஐயா, எனக்கு சொர்க்க வனம் பற்றி சொல்ல முடியுமா?”
“சொல்றேன்ப்பா அதுக்கு முன்னாடி உணவு சாப்பிட்டு, மருந்த எடுத்துக்கோ.”
“வாக்டெய்ல், சொர்க்க வனம் பற்றி கனலி ஐயாவாலத்தான் சரியா சொல்ல முடியும். இரண்டு நிமிடம் பொறுத்துகுங்க. உணவு கொண்டு வந்துடுறேன்.” என்று கூறி நகர்ந்தது ஆடலரசு.
சொன்னபடி, அடுத்த இரண்டு நிமிடங்களில் உணவு வகைகளை அங்கு கொண்டு வந்து வைத்தது ஆடலரசு.
வாக்டெய்லும், கனலியும் ஆலடலரசும் போதுமான உணவை உண்டு பசியை போக்கின.
உணவு உண்ணும் நேரத்தில் அவை எதுவும் பேசவில்லை.
உண்டு முடித்தப் பின் சிறிது நேரம் சென்றது. தான் கொண்டு வந்திருந்த மருந்தை வாக்டெய்லின் இறகுகளில் பூசி விட்டது கனலி.
மீதமிருந்த மருந்தை ஆடலரசுவிடம் கொடுத்து, பின்னர் வாக்டெய்லுக்கு பூசிவிடும்படி சொன்னது.
“சரி ஐயா” என்று மருந்தை வாங்கி பத்திரமாக வைத்தது ஆடலரசு.
பின்னர், ஆடலரசும் கனலியும் வாக்டெய்லின் அருகில் வந்து அமர்ந்தன.
அப்பொழுது சடசடவென மழை கொட்ட துவங்கியது. வாக்டெய்ல் கனலியை பார்த்தது.
“தம்பிகளா, உங்களுக்கு இப்ப சொர்க்க வனம் பற்றி சொல்லப் போறேன். கேட்க நீங்க தயாரா?”
“ஐயா அதுக்காக தானே நாங்க காத்திருக்கோம்” என்று வாக்டெய்லும் ஆடலரசும் ஒருமித்த குரலில் கூறின.
அதன் பின்னர் சொர்க்க வனம் பற்றிய செய்திகளை கனலி கூறத் துவங்கியது.
“நம்ம சொர்க்க வனம் இருப்பதிலேயே மிகப்பெரிய காடு. இதோட பரப்பளவு பலநூறு கிலோமீட்டர் வரைக்கும் இருக்கும்.
ஆண்டுதோறும் வனம் பசுமையாக இருக்கும். அதனால நம்ம வனம் பசுமைக் காடு வகையை சேர்ந்தது.
வெயில் காலத்துல கூட வனம் பசுமையா இருக்குமான்னு நீங்க கேட்கலாம்.
ஆமாம். இங்க எப்போதும் பெருமழை கொட்டிக்கிட்டே இருக்கும்; வெயில் காலத்திலேயும் கார்மேகம் படையெடுத்து மழை பொழியும். அதனால் தாவரங்கள் செழித்து வளர்ந்து வனத்த பசுமையா வச்சுருக்கு.
நம்ம வனத்துல புவியின் ஈர்ப்பு விசையை எதிர்த்து வளரும் நெட்டை மரங்கள் நிறைய இருக்கு. குறிப்பாக, சொல்லனும்னா, அறுபது மீட்டர் உயரத்திற்கும் மேலாக வளரக்கூடிய தேக்கு, கருங்காலி, எபோனிக், செம்மரம், போன்றவை இங்க எண்ணற்ற அளவில் இருக்கின்றன.
இந்த மரங்களோட செய்கை நமக்கு ஆச்சரியம் தருது. எப்படின்னு நினைக்கிறீங்களா?
சூரியஒளியை மரங்கள் எளிதா உறிஞ்சிக்குது. நிலத்தடி நீரை பல அடி உயரம் மேலே எடுத்துச் செல்லுது. காத்துல இருக்கிற கரியமில வாயுவையும் உறிஞ்சுக்குது. இவற்ற வைச்சு உணவு தயாரிக்குது. தயாரிச்ச உணவை நமக்கும் கொடுக்குது. இதெல்லாம் ஆச்சரியம் தானே.
இன்னொரு செய்தி. இங்க பல தலைமுறைகளை பார்த்த படுகிழட்டு மரங்களும் ஏராளமா இருக்கு!
இதுமட்டும் இல்ல. மரம், உயிரினங்களுக்கு புகலிடமாகவும் இருக்குது. நம்மலே இந்த மரத்துல தானே கூடுகட்டி வாழறோம்.
மழை தாவரங்களுக்கு மாதிரியே, விலங்குகளுக்கும் அடிப்படை ஆதாரமா விளங்குது.
உணவு தரும் மரங்களும் தாவரங்களும் மிதமிஞ்சி இருக்கறதால, அவற்றை உண்ணும் யானை, மான், போன்ற தாவர உண்ணிகளும் பல்கி பெருகியிருக்கு.
தாவர உண்ணிகளின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக பெருகிட்டா அதுவும் கடினம் தானே? ஆமாம் உணவாகும் தாவரங்களுக்கு பஞ்சம் வந்துடுமே?
இத சரி செய்ய, சிங்கம், புலி, நரி, போன்ற ஊண் உண்ணிகளை இயற்கை படைச்சிருக்கு. ஊண் உண்ணிகள் தாவர உண்ணிகள உணவா சாப்பிடும். அதனால தாவர உண்ணிகளும் கட்டுக்குள் இருக்கும். ஆக மொத்தத்தில, நம்ம வனம் சமச்சீர்நிலையில இருக்குது.
இங்க உயிரினங்களை தவிர, ஆறு, மண், ஒளி, காற்று, மற்றும் காலநிலை முதலிய உயிரிற்ற காரணிகளும் சிறப்பா இருக்குது.
இங்க இருக்குற உயிரினங்களும் உயிரற்றவைகளும் ஒன்னுத்தோட ஒன்னு சார்ந்து சிறப்பா வாழுது. சுருங்கச் சொல்லனும்னா, சொர்க்கவனம், இங்கு வாழும் தாவர விலங்குகளுக்கு உண்மையிலேயே சொர்க்கம் தான்.”
வாக்டெய்லும், ஆடலரசும் கனலி தந்த தகவல்களை ஆர்வமுடன் கேட்டன. தங்களது நன்றிகளையும் கனலியிடம் தெரிவித்தன.
அதன் பின்னர், “சரிப்பா, நீங்க ஓய்வு எடுங்க. நாம அப்புறம் சந்திப்போம்” என்று சொல்லி அங்கிருந்து புறப்பட்டது கனலி.
வாக்டெய்லும், ஆடலரசுவும், அன்று முழுவதும் கனலி சொன்ன செய்திகளை நினைத்து அகம் மகிழ்ந்தன.
(பயணம் தொடரும்)
கனிமவாசன்
சென்னை
9941091461
drsureshwritings@gmail.com
இதைப் படித்து விட்டீர்களா?
மறுமொழி இடவும்