கனவில் மிதந்தால் என்ற கதை, ஒருவன் உழைக்காமல் வெறுமனே கனவு கண்டால் என்ன விளைவு ஏற்படும் என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது.
சுப்பன் ஓர் ஏழை. அவன் மட்பாண்டங்களை செய்து விற்கும் தொழிலைச் செய்து வந்தான். சுப்பனுக்கு நீண்ட நாட்களாக பணக்காரனாக வேண்டும் என்ற ஆசை இருந்தது.
தான் பணக்காரனால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அடிக்கடி கற்பனை செய்து பார்ப்பான்.
அவன் தினமும் மண்பானைகளை செய்து வீட்டில் அடுக்கி வைப்பான்.
ஒருநாள் மதிய வேளையில் களைப்பால் அயர்ந்து பானைகள் வைத்திருந்த அறையில் தூங்கிக் கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு கனவு ஒன்று தோன்றியது.
கனவில் அவன் ஒரு பசுவினை வாங்கினான். பசுவிலிருந்து கிடைத்த பால் மற்றும் பாலிலிருந்து கிடைக்கும் பொருட்களை விற்று மேலும் இரண்டு பசுக்களை வாங்கினான்.
மூன்று பசுக்களும் நிறைய கன்றுகளை ஈன்றன. அவன் அக்கன்றுகளை வளர்ந்து பெரியதாகியதும் அவற்றை விற்று வயலினை வாங்கினான்.
அவ்வயலில் விவசாயம் செய்து கிடைத்த லாபத்தில் வீடு கட்டினான். இவ்வாறு வீடு, வயல், தோட்டம், ஆடு, மாடு, குதிரை என எல்லா செல்வங்களையும் பெற்றான்.
சுப்பனின் செல்வ வளத்தை பற்றிக் கேள்விப்பட்ட அவ்வூர் ஜமீன்தார் சுப்பனுக்கு அவருடைய ஒரே மகளை திருமணம் செய்து வைத்து அவருடைய சொத்துக்களையும் கொடுத்தார். இதனால் சுப்பன் பெரிய பணக்காரன் ஆனான்.
சுப்பனுக்கும், ஜமீன்தாரின் மகளுக்கும் குழந்தைகள் பிறந்தன.
ஒரு நாள் சுப்பன் தனது மனைவியிடம் தண்ணீர் கொண்டு வருமாறு கூறினான்.
அவளோ ஏதோ ஒரு நினைவில் தண்ணீர் கொடுக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட சுப்பன் தன்னுடைய மனைவியைக் கம்பால் அடித்தும், காலால் உதைக்கவும் செய்தான்.
இத்தனையும் கனவு என்பதை அறியாத அவன் தன்னுடைய மனைவியை அடிப்பதாகக் கருதி மட்பாண்ட பொருட்களை கம்பால் அடித்து நொறுக்கினான்.
சிறிது நேரம் கழித்து சுயநினைவிற்கு வந்த சுப்பனுக்கு ஒரே அதிர்ச்சி. அவன் சேகரித்து வைத்திருந்த மட்பாண்ட பொருட்கள் அனைத்தும் உடைந்து கிடந்தன.
தான் கனவில் மிதந்தால் நஷ்டம் ஏற்படும் என்பதை உணர்ந்து வருந்தினான். இனி கனவு காணுவதை விட்டுவிட்டு உழைத்து முன்னேற உறுதி கொண்டான்.
சுப்பன் கனவில் மிதந்ததால் ஏற்பட்ட விளைவுகளை அறிந்து கொண்டீர்களா?. கனவில் மிதக்காமல் உழைத்து முன்னேற உறுதி கொள்ளுங்கள்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!