கன்சிராம் – எளிய மக்களின் அரசியல் ஆசான்

கன்சிராம் எளிய மக்களின் அரசியல் ஆசான் ஆவார். இந்தியாவில் அடித்தட்டு மக்களும் அதிகாரத்தில் பங்கேற்பதற்கு வழிவகை செய்தவர் அவர்.

அரசியல்வாதி, பௌத்த அறிஞர், சமூக செயற்பாட்டாளர், சாதியை முற்றும் முழுவதுமாக அழித்தொழிக்க எண்ணிய மாமனிதர், அம்பேத்கரின் சிந்தனையாளர், வகுப்புவாத சக்திகளை எதிர்த்து களமாடிய களப்போராளி, பகுஜன் சமாஜ் கட்சியை தோற்றுவித்தவர், தேசியத் தலைவர், பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாவலர் இப்படி அவரின் பெருமையை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

ஆனாலும் சிறந்த மனிதன் என்பதைத் தவிர வேறு எந்த பட்டமும் அவரை அலங்கரிக்காது.

அவர் ‘பகுஜன்’ என்ற சொல்லுக்குப் பெருமை சேர்த்தவர்.

பகுஜன் நாயக், மன்யவர், சாஹேப் என்று அன்போடு அழைக்கப்படும் கன்சிராம் அவர்கள் பெண்களின் மேம்பாடு மற்றும் அரசியல் அணிதிரட்டலுக்காக உழைத்தவர்.

‘பகுஜன்’ என்பது பௌத்த நூல்களில் தொடர்ந்து காணப்படும் பாலி மொழி சொல்லாகும். மேலும் இது பல, பெரும்பான்மை என்பதை குறிக்கிறது.

இது இந்தியாவின் மக்கள்தொகை பெரும்பான்மையாக உள்ள பட்டியல் சாதிகள், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மற்றும் சிறுபான்மையினரின் ஒருங்கிணைந்த மக்கள்தொகையைக் குறிக்கும்.

“பகுஜன் ஹிதாய பகுஜன சுகயா” அல்லது பலரின் நன்மை மற்றும் செழிப்பு என்ற சொற்றொடரில் உள்ளது இது கௌதம புத்தரால் குறிப்பிடப்பட்டது.

கன்சிராம் இந்தியாவை வகுப்புவாத சக்திகளிடம் இருந்து மீட்டெடுக்க தன் வாழ்நாள் முழுவதும் போராடினார்.

முதற் கட்ட போராட்டங்கள்

கன்சிராம் அவர்கள் பஞ்சாப் மாநிலத்தில் ரூட் நகர் மாவட்டத்தில் 1934 மார்ச் திங்கள் 15 ஆம் நாள் பிறந்தார். அவர் சீக்கிய மதத்தைச் சார்ந்தவர்.

கல்லூரிப் படிப்புக்குப் பின், அவர் பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறையில் அறிவியல் உதவியாளராகப் பணியாற்றினார். அப்போது டாக்டர் அம்பேத்கர் எழுதிய சாதி ஒழிப்பு (Annihilation of Caste) என்ற நூலைப் படித்தார். அது அவரது சிந்தனையைத் தூண்டியது.

அதே சமயம் அவரது அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த‌ ஒரு தலித் ஊழியர், அம்பேத்கரின் பிறந்த நாளைக் கொண்டாட முயற்சி செய்தார். அதனால் அவருக்கு எதிரான பாகுபாடு உருவானது. இதைக்கண்ட கன்சிராம் அவர்கள் சாதி ஆதிக்கத்தை எதிர்க்கத் துணிந்து 1964ஆம் ஆண்டு சமூகச் செயற்பாட்டாளராக மாறினார்.

அவர் 1971ஆம் ஆண்டு அகில இந்திய பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகங்களின் பணியாளர்களின் கூட்டமைப்பை உருவாக்கினார்.

டாக்டர் அம்பேத்கரின் தத்துவங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் கன்சிராம்; அதன்பொருட்டு அம்பேத்கர் தொடங்கிய இந்திய குடியரசு கட்சியை (RPI) ஆதரித்தார்.

ஆனாலும் தன்னுடைய சிந்தனைக்கு ஏற்ப ஒரு தனி அமைப்பு தேவை என‌ உணர்ந்து, 1971ஆம் ஆண்டு SC, ST, OBC மற்றும் சிறுபான்மை ஊழியர் சங்கத்தை நிறுவினார்.

அது 1978ல் விரிவடைந்து BAMCEF எனும் அமைப்பாக உருவானது.

இந்த அமைப்பு குறித்து சூரியகாந்த் கூறும்போது, “ஒப்பீட்டளவில் வசதிபடைத்த தலித்களை, பெரும்பாலும் நகர்ப்புறங்களில் அரசு ஊழியர்களாக பணிபுரியும் மற்றும் தீண்டாமை அடையாளங்களில் இருந்து ஓரளவிற்கு அந்நியப்பட்ட வகுப்பினரை இது கவர்ந்தது” என்கிறார்.

மெல்ல மெல்ல தன்னுடைய திசை வழி பயணத்தை அங்குலம் அங்குலமாக கடந்து சென்ற பெருமை கன்சிராமுக்குண்டு.

1981வ் தலித் ஷோஷித் சமாஜ் சங்கர்ஷ் சமிதி எனப்படும் மற்றொரு சமூக அமைப்பை உருவாக்கினார். இதனை DSSSS என்றும் DS4 என்றும் அடையாளப்படுத்தப்பட்டது.

இவ்வமைப்பை பயன்படுத்தி தலித் மக்களை ஒன்றிணைத்து அவர்களை அரசியல் படுத்துவதற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதனால் அவர்களின் வாக்குகளையும் ஒன்றிணைக்க போராடினார்.

மேலும் பட்டியலின மக்களுக்கும் பிற்படுத்தப் பட்டோருக்கான இடைவெளியின் அளவைக் குறைக்கப் போராடினார்.

பகுஜன் சமாஜ் கட்சி

தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற‌, அரசியல் அதிகாரம் பெறுவதை தாண்டி வேறு வழியில்லை என்ற சிந்தனையின் விளைவுதான் பகுஜன் சமாஜ் கட்சி தோற்றுவிப்பதற்கான காரணம்.

பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த நாளில் ஏப்ரல் 14, 1984 அன்று பகுஜன் சமாஜ் கட்சி தோற்றம் கண்டது.

கன்சிராம் கட்சியைத் தொடங்கியதையும் வெற்றி தோல்வி பற்றியும் பின்வருமாறு கூறுகிறார்.

” முதல் தேர்தலில் கட்சி தோல்வி அடையும். இரண்டாவது தேர்தலில் கவனிக்கப்படும்; மூன்றாவது தேர்தலில் வெற்றி பெறும்” என்று கூறினார். அதை சாதித்தும் காட்டினார்.

1995 ஜூன் மாதம் மூன்றாம் தேதி முதல் முறையாக கட்சி ஆட்சி கட்டிலில் அரியணை ஏறியது.

அப்பொழுதுகூட கட்சியை தோற்றுவித்தவர் அல்லது உருவாக்கியவர் என்ற எந்த சுயநல நோக்கமும் இல்லாமல், ஒரு பள்ளி ஆசிரியரான பட்டியல் சமூகத்தைச் சார்ந்த செல்வி மாயாவதி என்ற பெண்ணை ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்த பெருமை அவருக்குண்டு.

எந்த நோக்கத்திற்காக மக்களை அமைப்பாகத் திரட்டினாரோ? அந்த நோக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றியை நோக்கி பயணித்து வருவது வரலாறு கண்ட உண்மை.

“பெண் விடுதலை அடையாமல் சமூக விடுதலை அடைய முடியாது” என்ற அம்பேத்கரின் தத்துவத்தை நனவாக்கிய பெருந்தகை கன்சிராம்.

இதுவரை சமூகம் யாரை புறம் தள்ளியதோ?, எதைக் குறித்துப் பேச அஞ்சியதோ? அதை அவர்கள் வாயாலேயே உச்சரிக்க வைத்தவர்.

‘வலுவானது எதுவோ? அதுவே வாழும்’ என்ற தத்துவத்திற்கு ஏற்ப, வலுவான சிந்தனையால் பகுஜன் சமாஜ் கட்சி வலுப்பெற்ற வரலாற்றை இந்நாடே அறியும்.

வெற்றி எப்பொழுதும் ஒரே இடத்தில் இருப்பதில்லை. வெற்றியும் தோல்வியும் மாற்றம் கண்டால் தான் யாவற்றுக்கும் சிறப்பு.

அந்த வகையில் 1988-ல் மக்களவைத் தேர்தலில் அலகாபாத் தொகுதியில் முன்னாள் பிரதமராக இருந்த வி.பி. சிங்கை எதிர்த்து போட்டியிட்டார்.
அந்த தேர்தலில் அவருக்கு வெற்றி முகம் இல்லை என்றாலும், தன்னுடைய பங்களிப்பை மிக சிறப்பாக பதிவு செய்தவர்.

அதனால் 70 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தன் முதல் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார்.

1989இல் கிழக்கு டெல்லி மக்களவைத் தேர்தலில் எஸ். கே. எல். பகத்தை எதிர்த்துப் போட்டியிட்டதிலும் தோல்வியைத் தழுவினார்.

மேலும் அமோதி தொகுதியிலும் மக்களவைத் தேர்தலில் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றியைப் பறிகொடுத்தார்.

இப்படி மக்கள் வழங்கிய தீர்ப்பை மனமுவந்து ஏற்றுக் கொண்டார். உழைக்கும் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, தன்னுடைய அணுகுமுறையில் எந்த சமரசமும் செய்யாமல் மக்கள் பணியை ஆற்றி வந்தார்.

அதன் விளைவாக 1996 – 98ல் 11-வது மக்களவைத் தேர்தலில் ஹோஷியார்பூரிலிருந்து வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பிறகு, தனக்கு இருக்கும் சமூகப் பொறுப்பை ஆழமாக உணர்ந்தார்.

நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்களே மக்களை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர் என்பதை அறிந்து, பிரிவினைவாத சக்திகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் முலாயம் சிங்குடன் இணைந்து பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களிடையே ஒற்றுமையை உருவாக்கினார்.

வகுப்புவாத சக்திகளால் நாட்டிற்கு எத்தனை பெரிய ஆபத்து சூழ்ந்திருக்கிறது என்பதை உணர்ந்து மிகக் கவனமாக செயல்பட்டார்.

புத்தரின் பாதையில்

கன்சிராம் அவர்கள், பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் கவுதம புத்தர் ஆகிய இருவரின் கொள்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்.

அதனால் அம்பேத்கர் கண்ட கனவை நனவாக்கும் நோக்கத்தில் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

புத்தரும், அம்பேத்கரும் நாட்டிற்கு எவ்வளவு வேண்டப்பட்டவர்கள் என்பதை இளம் வயது முதற்கொண்டு நன்கு அறிந்தவர்.

அம்பேத்கர் காட்டிய பாதையைப் பற்றிக்கொண்டு பின் செல்வதற்கு தயாராகி விட்டார். 2002ஆம் ஆண்டு ஓர் அறிவிப்பை செய்தார்.

‘அம்பேத்கர் பவுத்தம் தழுவிய ஐம்பதாவது ஆண்டான 2006 அக்டோபர் 14ஆம் தேதி சுமார் 5 கோடி மக்களுடன் பௌத்தம் ஏற்பதாக’ அறிவித்தார்.

பௌத்தம் என்பது வெறும் மதமல்ல. அது ஒரு நெறி. நெறி என்பதற்கு பாதை என்ற பொருள்.

ஒவ்வொரு மனிதனும் நடந்து செல்லும் பாதை மிகவும் முக்கியமானதாகும். அந்தப் பாதை நல்ல பாதையாக அமைய வேண்டும். நற்பாதை என்பது நல்ல வாழ்க்கை முறை என்ற அர்த்தத்தில் ஆளப்படுகிறது.

பௌத்தம் எப்பொழுதும் இம்மை, மறுமை பற்றி கவலை கொண்டதில்லை. இல்லாதவற்றைப் பற்றி எப்போதும் எண்ணிப் பார்த்ததுமில்லை. கடவுளைக் குறித்து கிஞ்சித்த அளவும் அக்கறை கொண்டதில்லை. அதேசமயத்தில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வருண பாகுபாடும் அதனிடமில்லை.

பௌத்தம் குறித்து சரியான புரிதலில் இருந்த காரணத்தினால், பாபாசாகேப் அம்பேத்கர் 1935ஆம் ஆண்டு லயோலா மாநாட்டில் அறிவிப்பு செய்ததை நினைவு கூறத்தக்கது.

“நான் பிறக்கும்போது ஓர் இந்துவாக பிறந்து விட்டேன். அது துரதிருஷ்டவசமானது. என் சக்திக்கு அப்பாற்பட்டது. ஆனால் நிச்சயம் நான் இறக்கும் பொழுது ஓர் இந்துவாக இறக்க மாட்டேன்” என்ற கொள்கையை கன்சிராம் மிகத் தீவிரமாக பின்பற்றினார்.

அதனால் தான் 2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 நாள், 5 கோடி மக்களோடு பௌத்தத்தைத் தொழுவதற்கு ஆயத்தப்படுத்தி கொண்டிருந்தார்.

ஆனால் அவர் இறுதி காலத்தில் கடைசி இரண்டு ஆண்டுகளாக கடுமையான நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதன் காரணமாக நிர்ணயித்த தினத்துக்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக அதாவது 2006 அக்டோபர் 9ஆம் தேதி இறந்துவிட்டார்.

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் இந்து மதத்தால் தான் சார்ந்த சாதி இழிவை துடைத்தெறிய சீக்கிய மதத்திற்கு மாறுவதற்கு விரும்பினார்.

சீக்கிய மத குருமார்கள் ‘தாழ்த்தப்பட்டவர்கள் சீக்கிய மதத்திற்கு மாறினாலும் அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்களாக மட்டுமே கருத முடியுமே ஒழிய உயர்ந்த சாதியினராக கருத முடியாது’ என்று கூறினர்.

இது அவருக்கு மிகுந்த மன வேதனையை அளித்தது. ஆனால் அவர் செல்ல விரும்பிய சீக்கிய சமயத்தைச் சார்ந்த திரு.கன்சிராம் அவர்கள் பௌத்தம் ஏற்றுக் கொள்ள பெரிதும் விரும்பினார் என்பது வரலாறு.

எந்த அளவிற்கு மாற்றம், மாற்றம் கண்டு வந்துள்ளது என்பதற்கு இது ஒன்றே சாட்சி. புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் ஒரு தீர்க்கதரிசி. நிகழ்காலத்தில் இருந்து கொண்டு எதிர்காலத்தை கணிக்க கூடியவர். எதிர்கால இந்தியாவை மிகத் துல்லியமாக கணித்துக் கூறினார்.

மாயாவதி தன்னுடைய அரசியல் குருநாதரை பற்றி “சாகேப் கன்சிராமும், நானும் மத்தியில் முழு பெரும்பான்மை கிடைக்கும் பொழுது மதம் மாறி பவுத்த மதத்தை தழுவுவோம்’ என்று முடிவு செய்தோம்.

எங்களுடன் மக்களும் இணைந்து மதத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதனால் இதை செய்ய விரும்பினோம்.

அதிகாரம் இல்லாமல் மதம் மாறினால் நாங்கள் இருவர் மட்டுமே மதம் மாறுவோம். அதனால் எங்களிடம் அதிகாரம் இருக்கும்போது, எங்களால் கோடிக்கணக்கான மக்களை மதம் மாற வைத்து, ஒரு பரபரப்பை ஏற்படுத்த முடியும் என்ற நோக்கம் கொண்டவராக இருந்தார்” என்று பதிவு செய்துள்ளார்.

அதேபோன்று முன்னாள் பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் “கன்சிராம், நமது காலத்தின் மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவர். நமது காலத்தின் பல்வேறு தாழ்த்தப்பட்ட பிரிவினரை ஒருங்கிணைத்து அவர்களின் குரல்களை வெளியில் கொண்டு வந்து சேர்த்த பெருமை அவருக்கு உண்டு” என்று புகழாரம் சூட்டினார்.

அவர் மறைந்து விட்டார் என்று சொல்வதை விட, கொள்கைகள் மூலம் அவர் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று சொல்வதே சாலச் சிறந்தது.

எ.பாவலன்
drpavalan@gmail.com

2 Replies to “கன்சிராம் – எளிய மக்களின் அரசியல் ஆசான்”

  1. மிக அற்புதமான வரலாற்று நாயகனை அறிந்து கொண்டேன். எழுத்து வசீகரம் செய்கிறது பாவலம் அய்யா, இது போல் ஆயிரம் ஆயிரம் படைப்புக்களை வெளியிடுங்கள். தமிழ் உலகம் காத்துக் கிடக்கிறது. தங்கள் பேனா ஏற்படுத்தும் பிரளயத்தில் எல்லாம் சுகமாகும்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.