கன்பர்மேசன்

மதிய வேளையில், செல்போனில் வந்த குறுஞ்செய்தியை பார்த்து விட்டு, தன் கணவருக்கு போன் அடித்தாள் மீரா.

“என்னங்க! என் அக்கவுண்ட்ல இருந்து பணம் எடுத்தீங்களா? “

“ஆமாம். அதான் அட்மிஷன் போட சொன்னல்ல. அதுக்கு தான்” என சலித்தபடி பதிலளித்தான் சந்தோஷ்.

“இப்ப என்ன சலிப்பா பேசுறீங்க? உங்க அம்மாவை ஹாஸ்டலில் சேர்கிறதுக்குகூட என் பணம் தான் தேவைப்படுது பார்த்தீங்களா! இத உங்க அம்மாட்ட சொல்லுங்க, இப்படி வசதியான ஹாஸ்டல்ல சேர்த்து பார்த்துக்க, எந்த மருமகளும் ஒத்துக்க மாட்டாங்க.

அந்த ஹாஸ்டல்ல நல்லா பார்த்துப்பாங்களாம், என் பிரெண்ட் சொன்னா. இப்படி உங்க அம்மாவ நான் கவனிச்சு பார்த்துகிறேன். ஆனா உங்க அம்மா தான் என்னை புரிஞ்சிக்காம இருக்கிறாங்க ” என மீரா சலித்தபடி கூறினாள்.

“மீரா , இப்ப வாட்ஸ் அப்ல ஒரு மெசேஜ் வரும். அத பாரு!” என சந்தோஷ் கூற, ஆர்வமாக வாட்ஸ் அப் மெசேஜ்யை நோக்கினாள் மீரா.

“ஆமாம் வந்திருக்கு. அட்மிஷன் கன்பர்மேசன் லெட்டர்னு போட்டிருக்கு. உங்க அம்மாவ சேர்த்தாச்சு. சூப்பர்.

இனி நாம நம்ம ஃபேமிலியோட , ஜாலியா இருக்கலாம். உங்க அம்மாக்கு மட்டும் என்ன குறச்சல், நல்ல வசதியோட நல்லா பார்த்துக்கிற ஹாஸ்டல் , கலக்குங்க சந்தோஷ்! ” என அவள் பேசி கொண்டே இருக்கும் போது, அந்த வாட்ஸ் அப் குறுஞ்செய்தியில் இருக்கும் மற்ற விபரம் அவளின் கண்ணில்பட்டது.

அதை கண்டு அதிர்ச்சியில் மீரா, “என்னங்க , அந்த லெட்டர்ல எங்க அம்மா பெயரு, போட்டு இருக்கே!” என சந்தேகமாக மீரா கேட்டாள்.

மீராவுக்கு சற்று உரைக்க ஆரம்பிக்க, மௌனமாய் இருந்தாள்.

முதியவர்கள் என கூறி கைவிடாதீர்கள். அவர்களை ஆதரிப்போம்.

அவர்களின் வாழ்க்கை, நமக்கு பாடமாக அமையும்.

மணிராம் கார்த்திக்
மதுரை
கைபேசி: 9842901104