இன்றைய சூழ்நிலையில் கன்றே நன்று என்பது முக்கியம் என்பதையே இக்கதை உணர்த்துகிறது.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் விவேக் பள்ளிக்கு வேகமாக நடந்து, அய்யப்பன் தாத்தா வீட்டைக் கடந்து சென்றான்.
அய்யப்பன் தாத்தா ஒரு சித்த மருத்துவர். இயற்கை வழியில் உடலில் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்பவர்.
மாலை பள்ளி விட்டதும் அய்யப்பன் தாத்தா வீட்டருகே வந்ததும், அவர் கடப்பாரையால் குழி போட்டு, மண்ணை எடுத்துக் கொண்டிருந்தார்.
அதனைப் போல் வரிசையாக பல குழிகள் இருந்தன. வியர்வை துளிகள் மரத்தில் பெய்த மழைத்துளி வழிவது போல வழிந்தன.
வயதான காலத்தில் ஏன் இவர் இவ்வளவு சிரமப்பட்டு, குழி போட்டுக் கொண்டிருக்கிறார் என வருத்தப்பட்டு சென்றான் விவேக்.
அடுத்த நாள் மாலை, அய்யப்பன் தாத்தா ஒவ்வொரு குழியிலும், மரக் கன்று ஒன்றை நட்டு வைத்தார் சிரமப்பட்டு.
விவேக்கிற்கு மனம் பொறுக்கவில்லை. அவரை பார்த்து தாத்தா
“வயதான காலத்தில் உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?”
என்றான்.
அவர் சிரித்துக் கொண்டு கூறினார். “இது வேண்டாத வேலை இல்லையப்பா. ஒவ்வொரு மனிதனும், தன் வாழ்க்கையில் செய்ய வேண்டிய, முக்கியமான வேலை. எதிர்கால சந்ததியினர் சிறப்பாக வாழ, மரக் கன்றுகளை விடுவதே நன்று.
எதிர்கால பிள்ளைகளுக்கு சொத்து சேர்ப்பதைவிட, மரங்களை வளர்த்து வைத்தால், நல்ல காற்றையும் மழையையும் பெற்று வளமுடன் வாழ்வர்.”
அவருடைய பேச்சைக் கேட்டு வியந்து போன விவேக், அவருக்கு உதவி செய்தான். அதில் தனி ஒரு இன்பத்தை உணர்ந்தான்.
அடுத்த நாள் சனிக்கிழமை தன் நண்பர்களை அழைத்துக் கொண்டு, அய்யப்பன் தாத்தா வீட்டிற்கு வந்தான்.
மரக்கன்றுகளை குழிகளில் நட்டு வைத்து, நண்பர்களுடன் இணைந்து அவற்றிற்கு தண்ணீர் விட்டான்.
தாத்தா மன மகிழ்ந்தார். பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் இந்த செய்தி பரவியது.
அவர்கள் வீட்டிற்கு சென்றதும், தங்கள் வீட்டிலும் மரம் வளர்க்க வேண்டும் என்று பெற்றோரிடம் அடம் பிடித்தனர்.
மறுநாள் மரக்கன்று கடைகளில், பெற்றோர் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவ்வூரின் ஒவ்வொரு தெருவிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.
சில வருடங்களில் ஊரில் மரங்கள் நிறைந்திருந்தன; மக்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது.
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்.
எதிர்கால வாழ்க்கைக்கு இன்றே
மரக்கன்றுகளை நடுவோம்
கன்றே நன்று என்று முழக்கிடுவோம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!