கன நீர்- நீருடன் ஓர் உரையாடல் 23

எனது அறையில் இருந்த புத்தக அலமாரிகளை சீர்படுத்திக் கொண்டிருந்தேன். அலமாரியின் மேல் அடுக்கில் இரண்டு பெரிய அட்டைப் பெட்டிகள் இருந்தன. அவற்றை கீழே இறக்கிவைத்தேன்.

பெட்டிகளின் மீது தூசியும் ஒட்டடையும் பயங்கரமாக இருந்தன. அவற்றை எல்லாம் சுத்தமாக துடைத்து தூய்மையாக்கினேன். பின்னர் ஒவ்வொரு பெட்டியாக திறந்து, அதில் இருந்தவற்றை வெளியே எடுத்து வைத்தேன்.

பெரும்பாலும் அவை பழைய நோட்டு புத்தகங்களும், எழுதப்பட்ட தாள்களும் தான். சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு கல்லூரி வகுப்புகள் நடந்தபொழுது, நான் எடுத்த பாடக் குறிப்புகளும் கட்டுகட்டாக இருந்தன.

நோட்டு புத்தகங்களைக் காட்டிலும், தாள்களில் குறிப்பெடுத்து அவற்றை பாட வாரியாக கோர்த்து படிப்பது தான் எனது வழக்கம்.

நடந்து கொண்டோ, நின்று கொண்டோ அல்லது அமர்ந்து கொண்டோ படிக்கும் பொழுது தாள்களை கையாள்வது எளிதாக இருப்பதாக நான் உணர்வதால், இதை நான் வழக்கப்படுத்திக் கொண்டேன்.

மின்விசிறி வேகமாக சுழன்று கொண்டிருந்ததால், பழைய தாள்கள் சிதறின. உடனே, எழுந்து சென்று மின்விசிறியை அணைத்தேன்.

மீண்டும் நான் எழுதிய பாடக் குறிப்புகளை பார்த்தப் பொழுது ஒருவித பரவசம் என்னை தொற்றிக் கொண்டது. பேராசிரியர்கள் பாடம் நடத்தும் காட்சிகள் கண் முன்னே வந்து சென்றன.

அப்பொழுது இன்னொரு பையில் ஒளி ஊடுருவக் கூடிய பிளாஸ்டிக் தாள்கள் (OHP sheet) இருந்தன. அவற்றை ஆர்வமுடன் எடுத்துப் பார்த்தேன்.

அவற்றில் அணு ஆற்றல் குறித்த பொதுவான தகவல்கள் அழிக்க முடியாத மைப்பேனாவைக் கொண்டு எழுதப்பட்டிருந்தன. அவற்றை நான் தான் எழுதினேன்.

ஆம், முதுகலை பட்டப்படிப்பில் மாணவர்களே ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பில் ஒரு மணி நேரம் வகுப்பு எடுக்க வேண்டும். அப்படியாக, எனது முறைக்கு நான் எடுத்துக் கொண்ட தலைப்பு தான் ‘அணு ஆற்றல்’.

வகுப்பு எடுப்பதற்கு ‘தலைக்கு மேல் பிம்பம் வீழ்த்தி (Overhead projector) கருவியை’ பயன்டுத்தும் வாய்ப்பு இருந்ததால், தகவல்களை பிளாஸ்டிக் தாள்களில் கருப்பு பேனாவை பயன்படுத்தி எழுதியிருந்தேன்.

பரவசத்தோடு, அவற்றை புர‌ட்டினேன். அணுக்கரு வினைகள், அதன் வகைகள், அணு உலைகளின் பொதுவான கட்டமைப்பு மற்றும் அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறை பற்றிய தகவல்கள் அவற்றில் இடம் பெற்றிருந்தன.

வியர்வை தலையிலிருந்து காது ஓரமாக வழிந்துக் கொண்டிருந்தது. தாகம் எடுத்தது. மின்விசிறியைத் தான் அணைத்துவிட்டேனே.

உடனே, சமையலறைக்குச் சென்று ஒரு குவளையில் நீர் எடுத்துக் கொண்டு வந்தேன்.

கன நீர்

நீரைக் கொஞ்சம் குடித்துவிட்டு குவளையை அருகில் வைத்துவிட்டு, மீண்டும் அந்த தாள்களைப் புர‌ட்டினேன். அப்பொழுது கன நீர் அணு உலைகளில் பயன்படுத்துவது குறித்த தகவல் என் கண்ணில் தென்பட்டது.

“முக்கியமான வேலையா?”- குவளையில் இருந்த நீரிடம் இருந்து கேள்வி வந்தது.

திரும்பி பார்த்தேன்.

“நான் தான்”

“ஓ! ஓ… நீரா?”

“ஆமாங்க. முக்கியமான வேலையா இருக்கீங்க போல.”

“அப்படி ஒன்னும் இல்ல.”

“என்ன சார் இப்படி சொல்றீங்க? உங்க கையில ஏதோ வச்சிருக்கீங்க. என்ன அது?”

“இதுவா! நான் படிக்கும் பொழுது வகுப்பு எடுப்பதற்காக தயார் பண்ணின OHP sheet.”

“அப்படி எதப்பத்தி வகுப்பு எடுத்தீங்க?”

அப்பொழுது ‘கன நீர்’ பற்றி எனது நினைவிற்கு வரவே, உடனே “உனக்கு கன நீர் பத்தி தெரியுமா?” என்றேன்.

“கன நீரா! என்ன சார் சொல்றீங்க? நான் நீர். அது தான் எனக்கு தெரியும். கன நீருன்னா? தெரியலையே!”

“அட உன்ன பத்தி உனக்கே தெரியலையா?”

“உங்கள பத்தி எல்லாமே உங்களுக்கு தெரியுமா சார்?” எனக் கேட்டது நீர்.

சற்று தயங்கினேன். குழம்பினேன். “முழுசா தெரியாது” என்றேன்.

“அது மாதிரித் தான் சார் நானும்.” என்றது நீர்.

சில நிமிடங்கள் பேசாமல் இருந்தேன்.

“கோச்சிக்கிட்டீங்களா?”

“ச்சே.. ச்சே… அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல… உங்கிட்டா நான் ஏன் கோபப்படனும்?”

“சரி சார். நீங்க சொன்னது உண்மைனா, கன நீர பத்தி சொல்லுங்க.”

“உம்ம்… சொல்றேன். நீருன்னா, அதுல ஒரு பங்கு ஹைட்ரஜனும் இரண்டும் பங்கு ஆக்சிஜனும் இருக்கும். தெரியுமில்ல?”

“ஆமா சார். அதனால் தானே என்ன H2O – ன்னு குறிப்பிடுறாங்க.”

“ஆமா. ஆனா, கன நீருல ஹைட்ரஜனுக்குப் பதிலாக ‘கன ஹைட்ரஜன்’ இருக்கும். இதனை டியூட்டீரியம்-னும் சொல்லுவாங்க. டியூட்டீரியத்த D என்று குறிப்பிடுறாங்க”

“ஓ! ஓ! அப்ப கன நீர D2O-ன்னு எழுதுவாங்களா?”

“ஆமாம். சரியா சொன்ன…. சிறப்பு.”

“சரிங்க. ஹைட்ரஜனுக்கும் டியூட்டிரித்திற்கும் என்ன வேறுபாடு?”

“இம்ம்… சரியா கேட்ட. ஹைட்ரஜனோட ஐசோடோப்பு தான் டியூட்டிரியம்.”

“ஐசோடோப்புன்னா?”

“ஒரே தனிமம் மாறுபட்ட நிறையோட இருந்தா அவற்றுக்கு ஐசோடோப்புன்னு பேரு. உதாரணத்துக்கு ஹைட்ரஜனுக்கு மூணு ஐசோடோப்புகள் இருக்கின்றன. அவை, சாதரண ஹைட்ரஜன் அல்லது புரோட்டியம், டியூட்டிரியம் மற்றும் டிரிட்டியம் (T) ஆகும்.”

“ஓ! இந்த மூணுத்துக்கும் எடை தான் மாறுமா?”

“ஆமாம், சாதரண ஹைட்ரஜன் அணுக்கருவில ஒரு புரோட்டான் மட்டும் தான் இருக்கும். நியூட்ரான் இருக்காது.

அதுவே, ஒரு டியூட்டிரியம் அணுக்கருவில ஒரு நியூட்ரானும், ஒரு புரோட்டானும் இருக்கின்றன.

டிரிட்டியம் அணுக்கருவில ஒரு நியூட்ரானும், இரண்டு புரோட்டான்களும் இருக்கின்றன.”

“ஓ! ஓ!”

வித்தியாசம்

“ஆனா, மூலக்கூறு எடைய பொறுத்தவரைக்கும் சாதாரண நீர் மூலக்கூறுக்கும் கன நீருக்கும் பெரிய அளவுல வேறுபாடு இல்லை.”

“அப்ப என்ன தான் வித்தியாசம் இருக்கு?”

“உம்ம்… சாதாரண நீர் மாதிரியே, கன நீரும் நிறமற்றது. அதனால, கன நீர் சாதாரண நீரில் கலக்கும்போது ஒரே மாதிரியான கலவையை தான் உருவாக்கும்.

அத்தோட, அறை வெப்பநிலையில, கன நீரும் மணமற்ற திரவமாக இருக்கும்.

ஆனா கன நீரின் அடர்த்தியானது சாதரண நீரின் அடர்த்தியை விட சுமார் 11% அதிகமாக இருப்பதால, கனநீர் பனிக்கட்டியாக இருக்கும் பொழுது, நீரில் மூழ்கும். சாதரண நீரால ஆன பனிக்கட்டியோ நீருல மிதக்கும்.”

“அப்படியா! இயற்கையில கன நீர் இருக்குதா?”

“ஆம்.. கன நீர் இயற்கையாகவே இருக்கு, ஆனா, சாதரண நீரை விட மிகமிகக் குறைந்த அளவுல தான் கன நீர் இருக்கும். தோராயமாக, ஒவ்வொரு இருபது மில்லியன் (இரண்டு கோடி) நீர் மூலக்கூறுகளிலும், ஒரே ஒரு கன நீர் மூலக்கூறு தான் இருக்கும் மற்றவை எல்லாம் சாதரண நீர் மூலக்கூறுகள் தான்.”

கன நீர் நன்மைகள்

“நல்லது சார், கன நீரால நன்மை இருக்கா?”

“சில நன்மைகள் இருக்கு. அணு உலைகளில் கன நீர மட்டுப்பத்தியாக (moderator) பயன்படுத்தியிருக்காங்க. அதாவது, அணுக் கருவினையில ஈடுபடும் நியூட்ரான்களின் வேகத்தை குறைக்க, கன நீர் பயன்படுத்தப்பட்டது.

அதுக்கப்புறம், அணுக்கரு காந்த அதிர்வு நிறமாலைமாணியில (nuclear magnetic resonance spectroscopy) வேதிப்பொருளை கரைக்கும் கரைப்பானாக அது பயன்படுத்தப்படுகிறது.

மேலும், கரிம சேர்மங்கள் உருவாகும் வினை வழிமுறைகளை அறியவும், டிரிட்டியம் எனப்படும் மற்றொரு ஹைட்ரஜன் ஐசோடோப்பை உருவாக்கவும் அது பயன்படுத்தப்படுகிறது.”

“நல்லது சார். நான் கிளம்புறேன். நீங்க உங்க வேலை தொடருங்க” என்று கூறி புறப்பட்டது நீர்.

அலமாரியை சுத்தம் செய்யும் பணியில் நான் மூழ்கினேன்.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

நீர்க்கடிகாரம் ‍- நீருடன் ஓர் உரையாடல் ‍- 24

நீர் ஏற்றம் – நீருடன் ஓர் உரையாடல் – 22

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.