கபடி நம் தமிழகத்தின் முக்கிய விளையாட்டுக்களில் ஒன்றாக உள்ளது.கபடி விளையாட்டு இன்றளவும் கிராமப் புறங்களில் மிக இன்றியமையாத வீர விளையாட்டாகவும் உள்ளது.
கபடி விளையாட்டில் ஒரு குழுவிற்கு 7 பேர் இருப்பார்கள். உபரி வீரர்கள் என 5 பேர் இருப்பார்கள். இவர்கள் விளையாட்டின் போது வீரர்களுக்கு காயம், உடல்நலமின்மை ஏற்பட்டால் களம் இறங்குவர்.
ஒரு குழுவினர் களம் இறங்கியதும், எதிர் அணியில் ஒருவர் மூச்சை அடக்கி பாடிக் கொண்டே எல்லைக் கோட்டினைத் தொட வர வேண்டும். கோட்டினைத் தொட்டுவிட்ட பின் வெளியேற வேண்டும் முடிந்தால் வீரர்களையும் தொட்டுவிட்டு வெளியேறலாம்.
குழுவினர் தம்மைத் தொட வரும் எதிரணி நபரை தமது எல்லைக்குள் வரும் போது ‘லாவகமாக’ பிடிக்க வேண்டும். பாடிக் கொண்டே வருபவர் சில நகைச்சுவைத் ததும்பும் பாடல்களை மூச்சைப் பிடித்து பாடி “தொட்டு வெளியேற” முனைவர்.
“நான் தான் உங்கப்பன்டா! நல்ல முத்து பேரன்டா!
தங்கப் பிரம்பெடுத்து, தாண்டிக் குதிக்க வாரேன்டா!
வெள்ளிப் பிரம்பெடுத்து, விளையாட வாரேன்டா!
கபடி, கபடி, கபடி” என்று மூச்சை அடக்கி பாடிக்கொண்டே வருபவரை இழுத்துப் பிடிக்க முனைவர் எதிர் அணியினர்.
இவ்வாறு இவ்விளையாட்டு மாறி மாறித் தொடரும். இறுதியில் வெற்றி பெற்ற குழு அறிவிக்கப்பட்டு பாராட்டுகளும், பரிசுகளும் வழங்கப்படும். இவ்விளையாட்டு கிராமங்கள், மாவட்டங்கள், மாநிலங்கள், தேசிய அளவிலும், உலக அளவிலும் நடத்தப்படுகின்றன.
கபடி விளையாட்டில் பல ஆண்டுகளாக நம் நாடு “உலக சாம்பியன்” பட்டம் பெற்று வருவது நமக்கெல்லாம் பெருமை ஆகும். நம் தமிழகத்தில் வீர விளையாட்டான கபடி – சிறுவர்கள் அணி, இளைஞர்கள் அணி என செயல்பட்டு வருகின்றது.
கபடி சிறந்த உடற்பயிற்சியாகவும், வீரத்தையும், விவேகத்தையும் கொடுப்பதாகவும் உள்ளது. இவ்விளையாட்டினால் நாம் உடல்உறுதி, மனஉறுதி இரண்டினையும் பெற்று சாதனை படைப்போம்.
மறுமொழி இடவும்