கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்

கப்பலோட்டிய தமிழன், தென்னாட்டு திலகர், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் போற்றிப் புகழப் பெற்றவர் வ.உ.சிதம்பரனார் என்னும் வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரனார் ஆவார்.

வங்காளத்தில் விபின் சந்திரபாலும், பஞ்சாப்பில் லாலாலஜபதி ராயும், மராத்தியத்தில் பாலகங்காதர திலகரும் விடுதலைப் போராட்டத் தளபதிகளாக விளங்கியபோது தமிழ்நாட்டில் சிதம்பரனார் விடுதலைத் தளபதியாக திகழ்ந்தார்.

வ.உ.சி என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிதம்பரனார் வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்க தலைவர், சுதந்திரப்போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றவர் ஆவார்.

இவர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் என்னும் ஊரில் 1872 செப்டம்பர் 5ம் நாள் உலகநாதன் மற்றும் பரமாயி அம்மாள் ஆகியோருக்கு மூத்த மகனாகப் பிறந்தர்.
சொந்த ஊரிலும், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் பள்ளிக் கல்வியைப் பயின்று மெட்ரிக்குலேசன் தேர்வில் தேறினார். பின் சிறிது காலம் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்தார்.

பின் திருச்சியில் உள்ள சட்டக்கல்லூரியில் சேர்ந்து தனது 23 வது வயதில் வழக்குரைஞராக தேர்ச்சி பெற்றார். இவருடைய தந்தையும் வழக்கறிஞர். அவருடன் வ.உ.சி சொந்த ஊரில் வழக்குரைஞராக திறமையுடன் தொழில் நடத்தினார். இவர் ஏழைகளுக்காகப் பொருள் பெறாமல் வழக்காடினார்.

ஒரு வழக்கில் இவரும் இவருடைய தந்தையும் எதிரெதிராக வழக்குரையாடினார்கள். அதில் இவர் வெற்றி கண்டார். 1900 ஆம் ஆண்டில் இவர் தூத்துக்குடியில் குடியேறி அங்கு வழக்குரைஞர் தொழில் நடத்தினார்.

1901ம் ஆண்டு மீனாட்சி அம்மாளைத் திருமணம் செய்தார். இளமை முதற்கொண்டே இவர் தேசிய உணர்வு உடையவராகவும் விடுதலை வேட்கை மிகுந்தவராகவும் விளங்கினார்.

1905ல் வங்கப்பிரிவினை நடந்தபோது அதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்தது. திலகரின் புரட்சிக் கருத்துக்கள் இவரைக் கவர்ந்தன. திலகரை தம் வழிகாட்டியாகக் கொண்டார். தென்னாட்டில் திலகரின் கொள்கைகளைப் பரப்பினார்.

தமிழ்நாட்டில் ஊர் ஊராக சென்று மக்களிடம் விடுதலை உணர்வைத் தூண்டினார். வெளிநாட்டுப் பொருள்களைப் புறக்கணிக்கும் போராட்டம் தீவிரமாகியபோது இவர் சுதேசி பொருள்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காகத் தூத்துக்குடியில் தருமசங்க நெசவுச் சாலையையும் சுதேசிப் பண்டக சாலையையும் நிறுவினார்.

இவருடைய முயற்சிகளுக்குக் கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரும், சுப்பிரமணிய சிவாவும் உறுதுணையாக இருந்தனர்.

தூத்துக்குடியில் கடல் வாணிகத்தில் ஆங்கிலேயர் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இந்திய வணிகர்களை அவர்கள் இழிவாக நடத்தினர். இதனைக் கண்டு வ.உ.சி மனங்கொதித்தார். கடல் வாணிகத்தில் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை ஒழிக்க உறுதி பூண்டார்.

சுதேசிக் கப்பல் கம்பெனி ஒன்றை நிறுவ முனைந்தார். பங்குக்கு ரூ.25 வீதம் 40,000 பங்குதாரர் சேர்ந்த ரூ.10 இலட்சம் மூலதனத்துடன் 1906ல் அக்டோபர் 16-ஆம் தேதி சுதேசிக் கப்பல் கம்பெனி ஒன்றை பதிவு செய்தார்.

இதற்குப் பங்குகள் சேர்க்க இவர் வடஇந்தியாவுக்குச் சென்று திலகருடன் தொடர்பு கொண்டார். அப்போது திலகருக்கு நெருங்கிய நண்பரானார். வட இந்தியாவிலிருந்தும் தென்னிந்தியாவிலிருந்தும் பலர் இவருடைய கப்பல் கம்பெனியில் முதலீடு செய்தனர்.

இதன் சார்பாக கலீயோ, லாவோ என்ற இரண்டு கப்பல்கள் வாங்கப்பட்டன. சுதேசிக் கப்பல் கம்பெனியில் 1907-ல் கடல் வாணிகம் தொடங்கியது. இந்திய வணிகர்கள் இந்நிறுவனத்தின் கப்பல்களிலேயே தம் பொருட்களை அனுப்பினர். இதனால் கப்பலோட்டிய தமிழன் என்று மக்கள் வ.உ.சியை அழைத்தனர்.

வெள்ளையரின் கப்பல்களுக்கு வருவாய் குறையாலாயிற்று. வெள்ளையரின் கப்பல் கம்பெனி போட்டிக்காக கப்பல் கட்டணத்தை குறைத்தது. சுதேசிக் கப்பல் கம்பெனியிலிருந்து வ.உ.சி விலகிவிட்டால் இவருக்கு பெருந்தொகை தருவதாக வெள்ளையர் ஆசை காட்டினர். ஆனால் அதற்கெல்லாம் வ.உ.சி இணங்கவில்லை.

ஆங்கிலேயரும் சுதேசி கப்பல் கம்பெனியை நசுக்க முயன்றனர். இப்படிப் பல விதமாக கொடுக்கப்பட்ட தொல்லைகளாலும் சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சியை தடுக்க இயலவில்லை.

தூத்துக்குடியில் வெள்ளையருக்குச் சொந்தமான கோரல் நூற்பாலை என்ற தொழிற்சாலை இருந்தது. அங்கு தொழிலாளர்களுக்கு ஊதியம் மிகக் குறைவு. பன்னிரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக உழைக்க வேண்டும். ஏதேனும் தவறு செய்தால் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.

தொழிலாளர்களின் அவலநிலையைப் பார்த்து வ.உ.சி மிகவும் வருந்தினார். தொழிலாளர் உரிமைப் போராட்டத்திற்கு தலைமை ஏற்றார். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய வழிகாட்டினார். தம் மனைவியின் நகைகளை விற்றும் ஊர் மக்களிடம் பணமும் பொருளும் திரட்டியும் தொழிலாளர் குடும்பங்களுக்கு இவர் உதவினார்.

இறுதியில் தொழிலாளர் உரிமைப் போராட்டம் வெற்றி பெற்றது. வ.உ.சியை அடக்கிட வெள்ளையர் ஆங்கில அரசின் உதவியை நாடினர். இவர் மீது அதிகாரிகள் அடுக்கடுக்காக பல வழக்குகள் தொடர்ந்தனர். அவையாவும் தோல்வி கண்டன.

1908ல் விபின் சந்திரபால் விடுதலை நாளன்று திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றங்கரையில் நடந்த மாபெருங் கூட்டத்தில் விடுதலை முழக்கம் செய்தமைக்காக இவர் மீது வழக்கு போடப்பட்டது. இது நாடு முழுவதும் பெருங்கொதிப்பை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை அறிந்த திருநெல்வேலி மாவட்ட மக்கள் கொதித்தெழுந்து அரசாங்க சொத்துக்களை சேதப்படுத்தினர். உயர்நீதி மன்ற மேல் முறையீட்டில் இரட்டை ஆயுள் கடுஞ்சிறைவாசம், ஆறாண்டு கடுஞ்சிறைவாசமாக குறைக்கப்பட்டது. சிறையில் இவர் பல துன்பங்களுக்கு ஆளானார்.

கோயம்புத்தூர் சிறையில் இவர் செக்கிழுத்து நலிந்தார். அங்கு ஓர் சிறை அதிகாரி இவரை கொடுமையாக நடத்தியது கண்டு மனங்கொதித்த சிறைக் கைதிகள் கலகம் செய்தனர். இதன் விளைவாக சிறை சீர்திருத்தக் குழு அமைக்கப்பட்டது. கைதிகளின் இன்னல்கள் ஓரளவு குறைந்தன.

வ.உ.சி சிறையில் இருந்தபோது சுதேசிக் கப்பல் நிறுவனம் மூழ்கிப்போனது. அவரில்லாமல் மற்றவர்களால் கப்பல் நிறுவனத்தை நடத்த இயலவில்லை. அவர்கள் கப்பலை விற்றுவிட்டனர். ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இங்கிலாந்தில் அரியணை ஏறியதை ஒட்டி சிறைத் தண்டனைக் காலம் குறைக்கப்ட்டு 1912 டிசம்பரில் விடுதலை பெற்றார்.

சிறையில் இருந்து போது அவர் பல அரிய நூல்களை எழுதினார். விடுதலைக்குப் பிறகு வறுமையில் வாடினார். வழக்குரைஞர் தொழில் நடத்துவதற்கான விருதை ஏற்கனவே அரசாங்கம் இவரிடமிருந்து பறித்துக் கொண்டது. அதனால் இவரால் வழக்குரைஞர் தொழில் நடத்த இயலவில்லை.

சென்னையில் சிறிது காலம் மண்ணெண்ணெய், அரிசி வியாபாரம் செய்தார். பின் உயர் நீதி மன்ற நீதிபதியாக இருந்த வாலஸ் என்பவரின் உதவியால் வழக்குரைஞர் தொழிலை நடத்துவதற்கான விருது மீண்டும் இவருக்கு கிடைத்தது. இக்காலத்தில் திலகர் இவருக்கு மாதந்தோறும் பொருளுதவி செய்து வந்தார்.

வ.உ.சி சிறந்த தமிழ் புலவராகவும் கவிஞராகவும் விளங்கினார். தம் சுய சரிதையைக் கவிதை வடிவில் எழுதினார். பல உரைநடை நூல்களையும் எழுதினார். திருக்குறள், சிவஞானபோதம் போன்ற நூல்களுக்கு உரை எழுதினார். தொல்காப்பியம், இளம்பூரணார் உரையை பதிப்பித்தார்.

வ.உ.சி சமூக சீர்திருத்தத்தில் ஆர்வம் காட்டினார். தீண்டாமை ஒழிப்புக்குப் பாடுபட்டார். அரிசனங்களுக்குத் தம் வீட்டிலேயே ஆதரவு அளித்தார். விதவை மணம், கலப்பு மணம் சிலவற்றையும் இவர் நடத்தி வைத்தார். தீவிர விடுதலைப் போராட்ட வீரராகவும், தமிழ்த் தொண்டராகவும், சீர்திருத்தவாதியாகவும் விளங்கிய வ.உ.சி 1936ம் ஆண்டு நவம்பர்18ம் நாள் மறைந்தார்.

கோயம்புத்தூர் மத்திய சிறையில் வ.உ.சி இழுத்த செக்கு சென்னை காந்தி மண்டபத்தில் நினைவுச் சின்னமாகப் பாதுகாக்கப்படுகிறது. தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.