கம்பு அடை சத்தான பராம்பரியமான உணவு ஆகும். இதனை எளிதாகவும், சுவையாகவும் செய்யலாம். எல்லோராலும் இது விரும்பி உண்ணப்படும்.
அரிசி மாவில் தயார் செய்யப்படும் இட்லி, தோசைக்கு மாற்றாக இதனைத் தயார் செய்து உண்ணலாம்.
பள்ளி சென்று வீடு திரும்பும் சிறுவர்களுக்கு இதனை மாலை நேர சிற்றுண்டியாகச் செய்தும் கொடுக்கலாம். இனி சுவையான கம்பு அடை செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கம்பு மாவு – 1 கப் (200 கிராம்)
உப்பு – தேவையான அளவு
கொத்த மல்லி இலை – ஒரு கொத்து
தண்ணீர் – 1 1/2 டம்ளர் (300 மில்லி லிட்டர்)
நல்ல எண்ணெய் – அடை சுடுவதற்கு தேவையான அளவு
தாளிக்க
நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்
கடலை பருப்பு – 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1 எண்ணம் (பெரியது)
கறிவேப்பிலை – 3 கீற்று
சின்ன வெங்காயம் – 10 எண்ணம்
செய்முறை
1 கப் கம்பு மாவுடன் தேவையான உப்பு, 1 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை அலசி துண்டுகளாக வெட்டவும்.
கொத்த மல்லி இலையை அலசி பொடியாக வெட்டிக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளிதம் செய்யவும்.
அதனுடன் கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து வதக்கவும்.
பருப்புக்கள் சிவந்ததும் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
ஒரு நிமிடம் கழித்து அதனுடன் சதுரமாக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் ஓரளவு வதங்கியதும் அதனை கரைத்து வைத்துள்ள கம்பு மாவுடன் சேர்த்து ஒருசேரக் கலக்கவும்.
பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையைச் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும், மாவில் சிறிதளவை எடுத்து தோசை போல் ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விடவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
ஒருபுறம் நன்கு சிவந்து வெந்ததும் திருப்பிப் போட்டு வேக விடவும்.
மறுபுறம் நன்கு வெந்ததும் எடுத்து விடவும். சுவையான கம்பு அடை தயார்.
இதனுடன் சாம்பார், தேங்காய் சட்னி, தக்காளிச் சட்னி சேர்த்து உண்ணலாம். அடை சூடாக இருக்கும் போது ஏதும் தொட்டுக் கொள்ளாமல் அப்படியே உண்ணலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் கம்பு மாவில் அதிகப்படியான தண்ணீர் சேர்த்து ரவா தோசை போல் ஊற்றலாம்.
அடை நன்கு வெந்ததும் திருப்பவும். இல்லையென்றால் அடை பிய்ந்து விடும்.