கம்பு இடியாப்பம் செய்வது எப்படி?

கம்பு இடியாப்பம் சத்தான ஆரோக்கியமான உணவு ஆகும். கம்பு சிறுதானிய வகைகளுள் ஒன்று. இன்றைய காலத்தில் சிறுதானியங்களை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும். கம்பில் அடை, தோசை, லட்டு, குழிபணியாரம், கூழ் உள்ளிட்ட உணவுகளை செய்து உண்ணலாம்.

அதே நேரத்தில் கம்பில் இடியாப்பம் செய்வது, எண்ணெய் இல்லாத ஆரோக்கியமான உணவாகும். இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம். இனி சுவையான கம்பு இடியாப்பம் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.


தேவையான பொருட்கள்

கம்பு மாவு – 1 கப்

தண்ணீர் – 1/2 கப்

கல் உப்பு – தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்

செய்முறை

வாணலியை அடுப்பில் வைத்து சூடேற்றவும்.

வாணலி சூடேறியதும் கம்பு மாவை அதில் போட்டு 5 நிமிடங்கள் வாசனை வரும்வரை கைவிடாமல் வறுக்கவும்.

அடுப்பினை மிதமான தீயில் வைக்கவும்.

வறுத்த கம்பு மாவை நன்கு ஆற விடவும்.

கம்பு மாவினை வறுக்கும் போது

தேவையான கல் உப்பினை 1/2 கப் தண்ணீரில் சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதிக்கும் போது

தண்ணீர் கொதித்ததும் இறக்கி வறுத்து ஆறிய கம்பு மாவில் சிறிது சிறிதாகச் சேர்த்து பிசையவும். அதாவது கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.

மாவை திரட்டியதும்

மாவை திரட்டியதன் இறுதியில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சேர்த்து ஒன்றாகத் திரட்டவும்.

எண்ணெய் சேர்த்ததும்
ஒருசேர திரட்டியதும்

திரட்டிய மாவில் தேவையான அளவு மாவை எடுத்து இடியாப்ப அச்சில் போட்டு இடியாப்பங்களாக பிழியவும்.

அச்சில் சேர்த்ததும்
இடியாப்பங்களாக பிழிந்ததும்

பிழிந்த இடியாப்பங்களை இட்டிப் பானையில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

இடியாப்பங்களை வேக வைத்ததும்

சுவையான கம்பு இடியாப்பம் தயார்.

இந்த இடியாப்பத்தை தேங்காய் பால், தேங்காய் பூ, சாம்பார், வெள்ளை குருமா ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் கம்பினை முதலில் வறுத்துப் பின் அதனை அரைத்து மாவாக்கி இடியாப்பம் தயார் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் கடுகு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், உளுந்தம் பருப்பு சேர்த்து தாளித்து அதனுடன் கம்பு இடியாப்பம் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கார இடியாப்பம் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

One Reply to “கம்பு இடியாப்பம் செய்வது எப்படி?”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.