கம்பு இனிப்பு பணியாரம் சிறுதானிய வகையான கம்பு தானியத்தில் இருந்து தயார் செய்யப்படும் சிறந்த உணவாகும்.
கம்பு சத்துமிகுந்ததும், ஆரோக்கியம் தரும் தானியமாகும். எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
கம்பு சிறுதானியத்தைக் கொண்டு கூழ், தோசை உள்ளிட்ட உணவு வகைகள் வழக்கமாக செய்யப்படுகின்றன.
கம்பு பணியாரம் வித்தியாசமான சிற்றுண்டியாகும். இதனை குழந்தைகள் பள்ளியில் இடைவேளை நேரத்தில் உண்ணக் கொடுத்து அனுப்பலாம்.
தேவையான பொருட்கள்
கம்பு – 400 கிராம் (¼ பிடி)
உளுந்தம் பருப்பு – 1 குழிக்கரண்டி
வெந்தயம் – 2 ஸ்பூன்
கருப்பட்டி – 300 கிராம்
ஏலக்காய் – 2 அல்லது 3 எண்ணம்
நல்ல எண்ணெய் – சிறிதளவு
செய்முறை
கம்பு, உளுந்தம் பருப்பு மற்றும் வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து தண்ணீரில் நான்கு மணிநேரம் ஊற வைக்கவும்.
கருப்பட்டியை சிறு சிறு துண்டுகளாக நொறுக்கிக் கொள்ளவும்.
ஏலக்காயை ஒன்றிரண்டாக நசுக்கிக் கொள்ளவும்.
நான்கு மணிநேரம் ஊறிய பின்பு ஆட்டு உரலில் இட்டு ஆட்டவும்.
மாவானது பாதி ஆட்டிய நிலையில் சிறுதுண்டுகளாக்கிய கருப்பட்டியை சேர்த்து ஆட்டவும்.
கருப்பட்டியை சேர்த்து ஓரிரு நிமிடங்களில் நசுக்கிய ஏலக்காயைச் சேர்க்கவும்.
கம்பு மாவினை இட்லிப் பதத்தில் ஆட்டி எடுக்கவும்.
சுமார் நான்கு அல்லது ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும்.
கம்பு குழிப்பணியாரத்திற்கான மாவு தயார்.
குழிப்பணியாரக் கல்லினை அடுப்பில் வைக்கவும்.
கல் சூடு ஏறியதும் குழிகளில் சிறிது எண்ணெய் தடவவும்.
பின் பணியாரக் குழியின் முக்கால் பாகத்திற்கு மாவினை ஊற்றவும்.
அடுப்பினை மிதமான தீயில் வைக்கவும்.
பணியாரத்தின் ஓரங்களில் வெந்த பின் குச்சியைக் கொண்டு திருப்பி விடவும்.
பின்புறம் வெந்தபின் பணியாரங்களை எடுத்து விடவும்.
சுவையான கம்பு இனிப்பு பணியாரம் தயார். இதனை எல்லோரும் விரும்பி உண்பர்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் கருப்பட்டியில் சிறிது தண்ணீரைச் சேர்த்து அடுப்பில் வைக்கவும். பின் கருப்பட்டி முழுவதும் கரைந்ததும் அதனை வடிகட்டி மாவில் சேர்த்தும் பணியாரம் தயார் செய்யலாம்.
விருப்பமுள்ளவர்கள் தேவையான தேங்காய் துருவலை கம்பு பணியார மாவில் சேர்த்தும் பணியாரம் செய்யலாம்.
மறுமொழி இடவும்