விருதுநகர் மருத்துவக் கல்லூரி கலையரங்கில் இரண்டு நாட்கள் (08.12.2023 – 09.12.2023) இனிதே நடந்தேறியது கரிசல் இலக்கியத் திருவிழா 2023.
விழாவில் எழுத்தாளர் பெருமாள் முருகன் மற்றும் பல இலக்கிய ஆளுமைகளை அருகில் இருந்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
கரிசல் இலக்கியங்களின் பிதாமகன்கள் கி.ராஜநாராயணன் மற்றும் கு. அழகிரிசாமி ஆகியோரின் எழுத்துகளால் வடிவமைக்கப்பட்ட படத்தொகுப்பு நம்மை வரவேற்றது.
அதன் அருகில் கரிசல் இலக்கியத்தின் அன்றைய மற்றும் இன்றைய எழுத்தாளர்களர்கள் 50 பேரின் வாழ்க்கைக் குறிப்பு அடங்கிய புகைப்படக் கண்காட்சி இருந்தது.
மற்றும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் மாணவ மாணவியருக்கும் பயனுள்ள, தொடர்ச்சியான கருத்தரங்க நிகழ்வுகள் என பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்து அசத்தி விட்டது விருதுநகர் மாவட்ட நிர்வாகம்.
பாராட்டுகள்!
துவக்க விழாவில் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேதகு ஜெயசீலன் அவர்களை, “இவர் 1330 திருக்குறள் பாக்களையும் மனப்பாடமாக சொல்லும் திறன் கொண்ட, தன்னிடம் ‘தமிழில் சிறையிலக்கியம்’ எனும் தலைப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்ற மாண்பு மிகுந்த ஆராய்ச்சி மாணவர்” என அறிமுகம் செய்தார்.
பின்னர் கரிசல் இலக்கியம் எவ்வாறு ஒரே ஊரைச் சார்ந்த (இடைச்செவல் எனும் கிராமம்) இரு எழுத்தாழுமைகளான கி.இரா மற்றும் கு.அ ஆகியோரால் ஒரு இயக்கமாக வளர்க்கப்பட்டது என்பதனை அருமையாக எடுத்துரைத்தார்.
இந்த சமயத்தில் கி.ரா வின் “பூவை” எனும் கதையின் பெயர் காரணத்தை அவர் கூறிய விதம் அருமையாக இருந்தது.
‘வாழ்வை அனாதையாகத் தொடங்கிய அபலைப் பெண் முதல் முதலாக திருமணத்தன்று தலைவாரி பூச்சூடி அலங்காரம் செய்து கொண்டபடியால் பூவின் நறுமணம் ஒவ்வாது மணமேடையில் மயங்கி விழுந்ததுதான் அந்தக் கதை’ என அவர் உரைத்த விதம் அனைவரையும் கவர்ந்தது.
அனைத்து கரிசல் இலக்கிய எழுத்தாளர்களையும் பாராட்டி, தமது பகுதியின் கொங்கு இலக்கியத்திற்கும் இங்குள்ள கரிசல் இலக்கியத்திற்குமான தொடர்பினை ஒப்பீடு செய்து இலக்கிய விழாவிற்கு நல்ல துவக்கத்தினைத் தந்தார்.
சென்னையின் பெருமழை காரணமாக நேரில் வர இயலவில்லையெனினும் காணொளி வாயிலாக கரிசல் விழாவிற்கு வாழ்த்துரை தந்தார் எஸ்.இரா அவர்கள்.
கரிசல் இலக்கியத்தில் கி.ராவின் “நிலைநிறுத்தல்” எனும் கதையில் காட்டிய “மாசானம்” எனும் பாத்திரத்தின் மகத்துவத்தை பகிர்ந்து கொண்டார்.
‘மழை வரும் வரை தான் சாப்பிடப் போவதில்லை’ என வைராக்கியமாய் விரதமிருந்து வரண்டு கிடந்த வானம் பார்த்த கரிசல் பூமிக்கு மழையை வருவித்த மாசானத்தின் மாண்பினை அப்போது அவர் விளக்கினார்.
‘இவர் போன்ற ஈரம் மிக்க மனிதர்கள் இருப்பதால்தான் வானம் பொய்க்காமல் பொழிகிறது’ எனக்கூறி விழாவிற்கு வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார் மண்ணின் மைந்தர் எஸ்.ரா அவர்கள்.
அடுத்து அடுத்து கரிசல் ஆளுமைகளின் கருத்துரை, கலந்துரையாடல் மற்றும் நேர்காணல் என இரு நாட்களாக நடந்த கரிசல் திருவிழாவின் நிறைவு விழாவில் நடத்தப்பட்ட வேள்பாரி நாடகம் அனைவரையும் கவர்ந்தது.
எழுத்தாளர் சு.வெ எழுதிய “வீரயுக நாயகன் வேள்பாரி” நாவலின் சிறு பாகத்தினை இயக்குநர் திரு. சந்திரமோகனின் “சிவப்பு யானை” நாடகக் குழுவினர் நாடகமாக நடித்துக் காட்டினர்.
அவர்கள் பாரியின் பறம்பு மலையில் நடைபெறும் கொற்றவைத் திருவிழாவினை காட்சிப்படுத்திய விதம், தேவ வாக்கு விலங்கினை பாரி காப்பாற்றி வந்த விதம் மேலும் அச்சமூட்டும் நாகரின மக்களின் கதை சொன்ன விதம் என அனைத்தும் பார்வையாளர்கள் அனைவரையும் சுமார் ஒரு மணி நேரம் கட்டிப் போட்டு வைத்திருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
விழாவின் அனைத்து அம்சங்களும் அருமை. பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்த மாவட்ட நிர்வாகத்துக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.
முனைவர் பொ.சாமி
வேதியியல் இணைப் பேராசிரியர்
வி.இ.நா. செந்திக்குமார நாடார் கல்லூரி
விருதுநகர் – 626 001
கைபேசி: 9443613294