கருகிய வேட்டி – மங்கம்மாள் பாட்டி

தனம் உட்பட கடலை எடுக்க வந்தவர்கள் எல்லோருக்கும் மங்கம்மாள் பாட்டியை மிகவும் பிடித்து விட்டது.

மங்கம்மாள் பாட்டி எல்லோருக்கும் முன்னதாகவே சாப்பிட்டு முடித்தாள்.

“என்ன பாட்டி, வேகமா கம்மங் கஞ்சியைக் குடிச்சிட்டியா?” என்று கேட்டாள் மல்லி.

“ஆமா” என்றபடி புன்னகைத்தாள் பாட்டி.

“பாட்டி கல்யாணம் ஆகி அம்மையப்புரம் வந்தப்ப அதுக்கு வயசு பத்து. இப்ப பாட்டியோட பேரன் பேத்திக்கெல்லாம் கல்யாணம் ஆகி புள்ளகுட்டிங்க இருக்கு தெரியுமா?” என்றான் மாடசாமி.

“ஆமா, அறியாத வயசுல கல்யாணம் பண்ணி வச்சுட்டாக. அதனால எங்க வீட்டுகாரரு பட்டபாடு கொஞ்சம் நஞ்சமல்ல. அவரு நல்ல மனுஷன். நான் தெரியாம எதைப் பண்ணினாலும் மாமனார், மாமியார் கிட்ட மாட்டிவிடாமே நான் செஞ்ச தப்பை கோவப்படாம திருத்திக்கச் சொல்லுவாக.”

“பாட்டி நீ செஞ்ச சாகசங்கள்ல ஒன்னப் பத்தி இப்ப எடுத்துவிடு. மீதியையெல்லாம் அப்புறம் ஒன்னு ஒன்னாச் சொல்லு.” என்றான் மாடசாமி.

“சரிடா. இரு சொல்லுறேன்.” சிரித்தபடி பேச ஆரம்பித்தாள் பாட்டி.

“அப்ப எனக்கு கல்யாணம் செஞ்சு ஆறு மாதம்தான் ஆயிருந்தது. அந்த காலத்துல இப்ப இருக்கிற மாதிரி விதவிதமாக நிறைய துணிமணி கிடையாது.

இன்னிக்கு சின்ன புள்ளைக்குக்கூட எத்தனை மாடல் மாடலா சட்டை, டவுசர், முழுக்கால் டவுசர் எல்லாம் இருக்கு.

அன்னைக்கு எங்கேயும் வெளிய போனா, வந்தா உடுத்துறதுக்கு எங்க மாமனாருக்கு ஒரு வெள்ளை வேட்டியும் சட்டையும், எங்க வீட்காரருக்கு ஒரு வெள்ளை வேட்டியும் சட்டையும் தான் இருந்துச்சு.

வீட்ல இருக்குறப்ப எங்க வீட்டுகாரரும், மாமனாரும் கோவணம்தான் கட்டுவாங்க.

எனக்கும், மாமியாருக்கும் வெளியூருக்குப் போன கட்டுறதுக்கு ஆளுக்கு ஒவ்வொரு சேலையும், வீட்ல கட்ட ஆளுக்கு ரெண்டு ரெண்டு சேலையும் இருந்துச்சு.

அது மழை காலம். மறுநாள் எங்க வீட்டுக்காரரு வெளியூர் போக வேண்டி இருந்துச்சு.

முதல்நாள் சாயுங்காலம் என் மாமியார் எங்க‌ காரை வீட்ல இருக்குற‌ டிரங்குப் பெட்டியில இருந்து என் வீட்டுக்காரரு வேட்டிய எடுத்திட்டு வரச் சொன்னாக.

எனக்கு ஆச்சர்யமா போச்சு. ஏன்னா எங்க மாமியார் டிரங்குப் பெட்டிய என்னை தொடக்கூட விடமாட்டாக.

எங்க அம்மா வீட்ல டிரெங்குப் பெட்டியெல்லாம் கிடையாது. நாங்க நல்ல துணிமணிகள மடிச்சு பொட்டனமாத்தான் கட்டி வச்சிருப்போம்.

அந்தக் காலத்துல டிரெங்கு பெட்டி ஓரளவு வசதியானவுக வீட்லதான் இருக்கும். இப்ப எல்லோர் வீட்டுலயும் இருக்கும் பீரோவ‌விட அந்தக்காலத்துல டிரங்கு பெட்டிக்கு மவுசு அதிகம்.

எங்க மாமியார் டிரெங்குப் பெட்டிய அப்பப்ப திறந்து மூடுறத நான் பார்த்திருக்கேன் அவ்வளவுதான். இப்ப என்னை திறந்து வேட்டிய எடுக்கச் சொல்லியதும் எனக்கு ஆர்வம் தொத்திக்கிச்சு.

நானும் ஆர்வக்கோளாறுல போயி டிரங்குப் பெட்டிய திறந்து மேலே இருந்த எங்க வீட்டுகாரரு வேட்டிய எடுத்தேன். தும்பைப்பூ நிறத்துல வெள்ளைவெளேருன்னு வேட்டி இருந்திச்சு.

அதை அப்படியே எடுத்துக்கிட்டு காரை வீட்ல இருந்து மாமியார் இருந்த கூரைவீட்டிற்கு முத்தவெளியைக் கடந்து ஓடி வந்தேன்.

எதிர்பாராமல் முத்தவெளியில் கிடந்த கல் தட்டி கீழே விழுந்தேன். மழையால் உண்டான சகதியில் நான் கொண்டு வந்த வேட்டி விழுந்து சேறானது.

கோவத்துல எங்க மாமியார் என்ன சத்தம் போட்டாக. அப்ப அங்க வந்த என் வீட்காரரு அவுக அம்மாவ சரிக்கட்டி ‘வேட்டிய துவைச்சு காயவச்சு காலம்பற போட்டுகலாம்முனு’ சொன்னாக.

எங்க மாமியாரு ‘நீயே வேட்டிய துவை. இவகிட்ட கொடுத்திடாதே. இப்ப சகதிக்குள்ள போட்ட மாதிரி ஏதாவது எடக்கு மடக்கு பண்ணிபுடுவான்னு’ கன்டிசன் போட்டுட்டாக.

என் வீட்டுக்காரரும் நல்ல சுத்தமாக துவைச்சி பிழிச்சி எங்கிட்ட குடுத்து இத காய வைச்சிடு. காலையில ஊருக்கு போறப்ப கட்டிக்கிறேன்னு சொன்னாக.

அப்ப எனக்கு ‘இந்த வேட்டிய ஒருபொட்டு ஈரம் இல்லாம நல்லா காய வைச்சுக் குடுத்து எப்படியாவது நல்ல பேரு எடுக்கனும்முன்னு’ ஒரு எண்ணம் தோனுச்சு.

அவல் தயாரிக்க நெல்லை ஒரு நாள் முழுசா தண்ணீல ஊற வைச்சு, அதுக்கப்புறம் நெல்லை பெட்டியில போட்டு தண்ணிய ஒட்ட வடிகட்டி, ஈரம் போக வடிகட்டிய நெல்லை உடைஞ்ச மண்பானை ஓடுல போட்டு வறுக்குறத நான் பார்த்திருக்கேன். அது மாதிரி செஞ்சா என்ன? அப்படின்னு யோசிச்சேன்.

மாமியார் வெளியே போயிருந்த சமயம் மண்பானை ஓட்ல போட்டு வேட்டிய வறுத்தேன். கருகிய வாசனை வந்தது.

வேகமா அடுப்படிக்கு வந்த என் வீட்டுகாரரு அடுப்பைப் பார்த்ததும் ‘என்ன செஞ்சுக்கிட்டு இருக்க? வேட்டி பாழாயிரும். சீக்கிரம் வேட்டிய வெளியே எடு’ என்றார்.

வேட்டிய வெளியே எடுத்தேன். கை சுட்டது. சூடு தாங்காமல் கீழ வேட்டிய போட்டேன். என் வீட்டுக்காரரு எடுத்து விரிச்சாரு. வேட்டி அங்கங்கே பொசுங்கிப் போய் இருந்தது.

எனக்கு என்ன செய்யன்னு தெரியல. பயத்தில ‘மலங்க மலங்க’ விழித்தேன்.

என்னைப் பார்த்ததும் ‘அம்மாவ நான் சரிசெஞ்சிக்கிறேன். நீ இப்ப நடந்த விசயத்த மட்டும் வெளிய சொல்லிறாத. வேட்டிய கொடியில போட்டாலே காஞ்சிடும். எதுக்கு ஓட்ல போட்டு வறுத்த?’ அப்படின்னு கேட்டாக.

‘இல்ல, சீக்கிரம் காய வைக்கத்தான் அப்படிச் செஞ்சேன். என்ன மன்னிச்சிடுங்க’ அப்படினுட்டு அழுதிட்டேன்.

மறுநாள் காலையில என் மாமனார் வேட்டிய எடுத்து என் வீட்டுகாரர் கட்டிக்கிட்டார்.

அவங்க அம்மாட்ட ‘சகதிக் கறை போகல. அதான் அப்பா வேட்டிய கட்டிக்கிட்டேன்.’ சொல்லி சமாளிச்சிட்டாரு.

சாயந்தரம் வரயில புது வேட்டிய வாங்கி டிரங்குல வைச்சிட்டாரு.’ என்று மங்கம்மாள் பாட்டி முடித்தாள்.

அவள் கூறியதைக் கேட்டதும் எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

‘மதியம் சாப்பிடுறப்போ ஒன்றைக்காரு பத்திச் சொல்றேன்னு’ என்று கூறி பாட்டி தப்புக் கடலை எடுக்கத் தயார் ஆனாள்.

( பாட்டி கதை தொடரும்)

வ.முனீஸ்வரன்

One Reply to “கருகிய வேட்டி – மங்கம்மாள் பாட்டி”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.