கருணைகொள் கொரோனா

சீனதேசத்து வானவளியிலே

சீக்குப் பரப்பியைச் சிதறியதாரோ?

ஊகான் மாகாண உயிர்வளிதனிலே

உயிர்க் கொல்லியை உதறியதாரோ?

 

வேகமாக வளர்ந்து விட்டோம்

விஞ்ஞான அறிவினில் என்ற

மோகத்தில் நாங்களெல்லாம்

மூழ்கித் திளைத்திருந்தோம்!

 

காற்றினில் நோய் பரப்பி

நூற்றுக்கணக்கில் உயிர் குடிக்கும்

கொரோனாவே உன்முன்னால்

கர்வத்தை உடைத்தெறிந்தோம்!

 

நாசிக் காற்றில்

நச்சைக் கலக்கும்முன்

யோசித்துப் பார்த்தாயா

ஒற்றை நிமிடம்?

 

முந்நீர்சூழு் பூமிக்கே

முகக்கவசம் தைப்பதற்கு

மண்ணில் இல்லையம்மா

மலிவுவிலை கடையும்!

 

கருவில் இருப்பதுமுதல்

கல்லறைக்கு இருப்பதுவரை

நரபலி கேட்கிறாயே

நல்லதா உனக்கு?

 

மாதக் கணக்காக

மரணம் உண்கிறாயே!

மானிடகுலத்தோடு அப்படி

என்னதான் பிணக்கு?

 

அஃறிணையின் கருப்பையான

அமேசான் எரிந்தபோது

அமைதி காத்தற்கான

அகிம்சை நிந்தனையா?

 

ஆஸ்திரேலிய காட்டுத்தீயில்

கங்காருஇனம் கருகியபோது

கண்திறந்தும் வாய்ப் பொத்தியதற்கு

கண்டன தண்டனையா?

 

புரிகிறது எனக்குப்

புரிகிறது உன்புலம்பல்கள்!

எனக்குப் புரிகிறது;

மனதில் அம்பாய்த் தைக்கிறது!

 

பிரிவினை எதற்கு உயிர்களில்

எனும்உன் சரிநிகர்

சாசனம் காதில் விழுகிறது!

சரியாய்ப் புரிகிறது!

 

உலகின் நுரையீரல்

உலையில் கொதித்தபோது

கிளைக்கூடு எறிந்துபோன

கிளியின் கதறல் கேட்டதா?

 

முட்டை யுடைத்து வருமுன்னே

மொத்த வாழ்வும் முடிந்துபோன

தட்டான் குஞ்சுக் கூட்டங்களின்

தவிப்புக் குரல் கேட்டதா?

 

நல்லா வாழலாமென

நள்ளிரவில் கன‌வு கண்ட

உள்ளான் குருவிகளின்

ஒப்பாரியைக் கேட்கவில்லை!

 

தொங்கும் கூட்டினிலே

தூக்கத்திலேயே எரிந்துபோன

தூக்காணாங்குருவி கூட்டங்களை

துக்கம் விசாரிக்க யாருமில்ல!

 

கடினம்தான் கடினம்தான்

நமது காதுகேட்பிகளைத் தாண்டி

அவற்றின் கதறலொளி

கேட்பது கடினம்தான்!

 

துரித உணவின் வாசம் தாண்டி அவற்றின்

தேகம் கருகும் வாசம்

தேடி வந்து நாசி

நுழைவது கடினம்தான்!

 

மகரந்தம் சேராமலே

மரணித்த மலர்கள்!

கதிரவன் தீண்டாமலே

கருகிய முகைகள்!

 

புகலிடம் தேடித்தேடி

புலம்பிய புலிகள்!

எலும்பும் மீதியின்றி

எறிந்துபோன குயில்கள்!

 

இவைகளின் சாபம்தான்

இன்றைய ஆபத்து!

கல்மண் அனைத்திற்கும்

காழ்ப்புணர்ச்சி பொதுச்சொத்து!

 

அமேசான் அழிந்தற்கு

அறிவித்தோமா அவசரநிலை?

ஆஸ்திரேலியா கருகியதற்கு

கண்டறிந்தோமா கண்ணாடிவலை?

 

அஃறிணைக்கு ஒன்றென்றால்

அடுத்த நொடியே மறக்கிறோம்!

ஆறறிவிற்கு ஒன்றென்றால்

ஆத்தாடி குதிக்கிறோம்!

 

பாம்பால் பரவியதென

படித்தவர்கள் சொல்கிறார்கள்!

வௌவாலால்தான் வந்ததென

வல்லுனர்கள் சொல்லுகிறார்கள்!

 

ஒன்றைமட்டும் ஒழுங்காய்

இன்றுமுதல் புரிந்துகொள்!

என்றும் அழியா வரியாக

இதய ஏட்டில் எழுதிக்கொள்!

 

மானுடன் வாழவேண்டுமெனிலும்

அஃறிணை வேண்டும்!

மானுடன் சாகவேண்டுமெனிலும்

அஃறிணை வேண்டும்!

 

நளிர்தரும் நிலா

நட்சத்திரம் மேகம்

அனைத்தும் இருந்தால்தான்

ஆகாயம் அழகு!

 

நிற்பதுவும் நடப்பதுவும்

பறப்பதுவும் இருந்தால்தான்

நிற்காது பூமியென

நீநெஞ்சில் எழுது!

 

உயிர்களில் என்ன

சின்ன உயிர் பெரிய உயிர்?

மயிர்களில் என்ன

நீள மயிர் குட்டை மயிர்?

 

கொரோனாவின் தாண்டவத்திற்கு

கைபிசைந்து நிற்கும் மானிடமே!

கழுத்து நெரிக்க அணிந்திக்கும் உன்

கர்வ மாலைகளை அறுத்தெறி!

 

அதுஅது அதன்கையால்

எண் சாண் அளவெனும்

அவ்வையின் அறிவுரையை

அவசியமாய்ப் படித்தறி!

 

சாட்சிக்காரன் காலைவிட

சண்டைக்காரன் காலில்விழலாம்

அதனால்தான் கரோனோவே

வீழ்ந்துவிட்டோம் உன்காலடியில்!

 

மங்கிப்போன உள்ளம் பெருக்க

மற்றொருவாய்ப்பு தரவேண்டும்!

கண்டிப்பாகக் கரோனோவே இந்தக்

கருணை மனுவைப் பெற வேண்டும்!

 

நீண்டதூரப் பயணத்திற்கு

நீர் தேவையெனும் ஞானத்தை

யாரோ ஒருவர் நீட்டும் பாணம்

ஓங்கி அறைக்க உணர்கிறோம்!

 

தண்டனையின் வீரியம்

புரிந்திடும் போதுதான்

மன்னிப்பெனும் வார்த்தையின்

மகத்துவம் அறிகிறோம்!

 

நினக்கும் எமக்கும்

வித்தியாசம் வேண்டும்

நிகழ்த்திய தவறுகளை

நிழலாக மறந்திடு!

 

நிர்பயா வழக்கைபோல

நீண்டு கொண்டே போகாமல்

சொற்ப உயிர்களைச்

சுவைத்ததோடு அடங்கிடு!

– விமுகா

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.