கருணைக்கிழங்கு தோல் சட்னி உடல்நலத்தைப் பேணுவதோடு சுவைமிக்கதும் ஆகும்.
நாம் வீட்டில் பொதுவாக கருணைக்கிழங்கினை பயன்படுத்தும்போது அதன் தோலினை தனியே பிரித்தெடுத்து கழிவாக்கி விடுவோம்.
அவ்வாறு கழிவாக்காமல் அதனை சுவையான சட்னியாகச் செய்யலாம்.
இனி கருணைக்கிழங்கு தோலினைக் கொண்டு சட்னி தயார் செய்யும் முறை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பதப்படுத்திய கருணைக்கிழங்கு தோல் – ஒரு கைபிடி
மிளகாய் வத்தல் – 2 எண்ணம்
வெள்ளைப் பூண்டு – 2 பற்கள்
இஞ்சி – பாதி சுண்டு விரல் அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
தாளிக்க
கடுகு – ½ ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கீற்று
நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்
செய்முறை
கருணைக்கிழங்கு தோலினை பதப்படுத்தும் முறை
கருணைக்கிழங்கினை அவித்து தோலினையும், கிழங்கினையும் தனித்தனியே பிரித்தெடுக்கவும்.
பிரித்தெடுத்த தோலினை நன்கு அலசி வெயிலில் சுருளக் காய வைக்கவும்.
காயவைத்த தோலினை டப்பாக்களில் காற்றுப்புகாமல் எடுத்து வைத்துக் கொள்ளவும். தேவையானபோது இத்தோலினை எடுத்து உபயோகித்துக் கொள்ளலாம்.
வெள்ளைப் பூண்டினை தோலுரித்து சுத்தம் செய்து கொள்ளவும்.
இஞ்சினை தோல் நீக்கி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை கழுவி உருவிக் கொள்ளவும்.
மிளகாய் வத்தலை காம்பு நீக்கி வைக்கவும்.
முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கருணைக்கிழங்கு தோலினைப் போட்டு பொரித்துக் கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தில் நல்ல எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, உருவிய கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதனுடன் தோலுரித்த வெள்ளைப்பூண்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி, காம்பு நீக்கிய மிளகாய் வத்தல் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
மிக்ஸியில் பொரித்த கருணைக்கிழங்கு தோல், வெள்ளைப்பூண்டு, இஞ்சிக் கலவை, ஊற வைத்த புளி, தேவையான உப்பு ஆகியவை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
சுவையான கருணைக்கிழங்கு தோல் சட்னி தயார்.
இதனை இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம். வயிற்றுப் பிரச்சினைகள், மூல நோய்கள் போன்றவற்றிற்கு இச்சட்னி சிறந்ததாகும்.
–ஜான்சிராணி வேலாயுதம்