கருணை – கவிதை

மரப்பாச்சியோடு

விளையாடிக் கொண்டிருந்தவள்

வருத்தம் தெரிவிக்க

குனிந்து

கால்பட்டு சுருண்டு விட்ட

எறும்பிடத்தில்

கரிசனத்தோடு ” சாரி ” யென்றாள்

தமிழ் மறந்து

கான்வெட்டில் படிக்கும்

என் பேத்தி…

எரிக்கும்

வெப்பத்தில் நின்று

உம்

வீட்டிற்குப் போ வீட்டிற்குப் போ

என்று

வெக்கையில் ஊர்ந்து போகும்

எறும்புகளை

விரைந்து போகச் சொல்லி

வெப்பத்தைச் சபிக்கும்

பேத்தியின் கருணைக்கு

குடைப் பிடிக்க வேண்டியிருக்கிறது

நான்…

இப்படித்தான்

தாமதமாய் சமைப்பாள்

பாட்டியென்று

என்னை

சற்று அமைதிப் படுத்தி

கொஞ்சம்

பொறுத்துக்கோ தாத்தா

இதோ

சமைத்துப் பரிமாறுகிறேன்

என்றவள்

செப்பு பாத்திரங்களை

எடுத்து வைத்த வேகத்தில்

சமைத்ததாய்

வெறும் தட்டில் கொஞ்சம்

மண் பரிமாறி கிள்ளிய இலை நறுக்கிக்

கொடுத்த

அந்த அன்பால்

பசியாறினேன் நான்…

கா.அமீர்ஜான்

கா.அமீர்ஜான்
திருநின்றவூர்
7904072432

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: