கருப்பட்டி பணியாரம் செய்வது எப்படி?

இயற்கைப் பொருளான பதனீரிலிருந்து தயார் செய்யப்படும் கருப்பட்டியைக் கொண்டு பணியாரம் தயார் செய்யலாம். இது சுவை மிகுந்ததோடு ஆரோக்கியமானதும் ஆகும்.

சுவையான கருப்பட்டி பணியாரம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 1 கிலோகிராம்

கருப்பட்டி – ½ கிலோகிராம்

ஏலக்காய் – 5 எண்ணம்

எண்ணெய் – பொரித்தெடுக்கத் தேவையான அளவு

 

செய்முறை

முதலில் பச்சரிசியை முப்பது நிமிடம் நேரம் ஊற வைக்கவும். பின் தண்ணீரை வடித்து காய்ந்த துணியில் அரிசியை பரப்பி உலர விடவும். இடிக்கும் பதத்தில் அரிசியை எடுத்து மிசினில் கொடுத்து நைசாக இடித்துக் கொள்ளவும். பின் சலிப்பானில் இட்டு சலித்துக் கொள்ளவும்.

கருப்பட்டியை ஒன்றிரண்டாத் தட்டிக் கொள்ளவும். பாத்திரத்தில் ஒன்றிரண்டாக தட்டிய கருப்பட்டியைப் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் சிம்மில் வைக்கவும். கருப்பட்டி முழுவதும் கரைந்து கரைசலானவுடன் உடன் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். பின் அதனை வடிகட்டிக் கொள்ளவும்.

கருப்பட்டிக் கரைசலை சிறிது சிறிதாக இடித்து சலித்த அரிசி மாவில் சேர்த்துக் கிளறவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவை இட்லி மாவுப் பதத்தில் தயார் செய்யவும். ஏலக்காயை ஒன்றிரண்டாக தட்டி மாவுடன் சேர்க்கவும். இதுவே பணியாரம் சுடுவதற்கு ஏற்ற பதமாகும்.

வாணலியை அடுப்பில் வைத்து பொரித்தெடுக்கத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் ஒரு குழிக்கரண்டி மாவினை எடுத்து ஊற்றவும். ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டவும். பிரவுன் கலர் வந்ததும் எடுத்து விடவும். சுவையான கருப்பட்டி பணியாரம் தயார். இதை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்துக் கொள்ளவும். இதனை இரு வாரங்கள் வரை உபயோகிக்கலாம்.

 

குறிப்பு

கருப்பட்டிக்கு பதிலாக சீனி சேர்த்தும் பணியாரம் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்