கருப்பர் அழைப்பு

கருப்பர் அழைப்பு என்பது எளிய தமிழில் காவல் தெய்வமான கருப்பசாமியைப் வணங்கிப் பாடும் இனிய‌ பாடல்.

அன்போடு அழைத்தால் கருப்பர் உங்கள் துயர் நீக்க ஓடோடி வருவார்.

கருப்பர் அழைப்பு

கருப்பா கருப்பா கருப்பய்யா

கவலையைத் தீர்ப்பாய் கருப்பய்யா

கருப்பா கருப்பா கருப்பய்யா

கவலையைத் தீர்ப்பாய் கருப்பய்யா

 

கருப்பா உன்னை அழைக்கின்றேன்

காவியம் பாடித் துதிக்கின்றேன்

கண்ணின் மணியை அழைக்கின்றேன்

காலமும் உன்னைத் துதிக்கின்றேன்                                 (கருப்பா)

 

கோட்டைக் கருப்பரை அழைக்கின்றேன்

கொடுமைகள் அழிய துதிக்கின்றேன்

வேட்டைசெல்கையில் அழைக்கின்றேன்

வெற்றியைத் தந்திட துதிக்கின்றேன்                              (கருப்பா)

 

சங்கிலிக் கருப்பரை அழைக்கின்றேன்

சங்கடம் தீர்த்திட துதிக்கின்றேன்

சந்ததி தழைக்க அழைக்கின்றேன்

சரணம் பாடித் துதிக்கின்றேன்                                              (கருப்பா)

 

காளி யம்மனை அழைக்கின்றேன்

கவிதைகள் பாடித் துதிக்கின்றேன்

கரங்கள் கூப்பி அழைக்கின்றேன்

கவலைகள் தீர்த்திட துதிக்கின்றேன்                                (கருப்பா)

 

சின்னக் கருப்பரை அழைக்கின்றேன்

சிறுமைகள் தீர துதிக்கின்றேன்

சிங்காரக் கருப்பரை அழைக்கின்றேன்

சிறப்புகளைத் தர துதிக்கின்றேன்                                     (கருப்பா)

 

முத்துக் கருப்பரை அழைக்கின்றேன்

முத்தமிழ் பாடி துதிக்கின்றேனன்

முப்பிலி கொடுத்து அழைக்கின்றேன்

முறையாய் உன்னைத் துதிக்கின்றேன்                        (கருப்பா)

 

அன்பால் உன்னை அழைக்கின்றேன்

அமைதியைத் தந்திட துதிக்கின்றேன்

மனதால் உன்னை அழைக்கின்றேன்

மங்களங்கள் தர துதிக்கின்றேன்                                   (கருப்பா)

 

 கருப்பர் வாரார்

வாராரய்யா வாராரு

கருப்பரிங்கே வாராரு

வாராரய்யா வாராரு

கருப்பரிங்கே வாராரு

 

அள்ளி முடிச்ச கொண்டையப்பா

அழகு-மீசை துள்ளுதப்பா

வல்ல வேட்டிப் பட்டுடனே

வாரார் ஐயா ராசாப்போலே                        (வாராரய்யா வாராரு…)

 

ஆளுயரம் அரிவாளாம்

அதுக்கேத்த கம்பீரமாம்

காலிலே முள்ளுச் செருப்பாம்

கருப்பனுக்கே தனிச்சிறப்பாம்                 (வாராரய்யா வாராரு…)

 

வீச்சரிவாள் கையிலுண்டு

வேகமான குதிரையுண்டு

சுற்றிவரும் பகையழிக்கச்

சுக்குமாந் தடியுமுண்டு                                 (வாராரய்யா வாராரு…)

 

இடுப்பிலே சலங்கையுண்டு

இடிமுழக்கச் சிரிப்புமுண்டு

வாக்கிலே வலிமையுண்டு

வற்றாத கருணையுண்டு                             (வாராரய்யா வாராரு…)

 

கையிலே சவுக்குமுண்டு

கனகமணிச் சலங்கையுண்டு

பாற்கடலில் பள்ளிகொண்ட

பரந்தாமன் நாமமுண்டு                           (வாராரய்யா வாராரு…)

 

சந்தனமுண்டு ஜவ்வாதுண்டு

சாம்பிராணி வாசமுண்டு

சம்பங்கி ரோஜாமுல்லை

மணக்குதப்பா இங்கே இப்போ           (வாராரய்யா வாராரு…)

 

சங்கிலிக் கருப்பனே

சங்கிலிக் கருப்பனே சாம்பிராணி வாசனே

சகமாளும் என் ஐயனே

அழகான கொண்டையும் அகண்ட பெருநெற்றியும்

அதிரூப மான வடிவம்

மதி போன்ற முகமும்

மாலைகள் அணிமார்பும்

மலர்ந்த உன் பார்வை யழகும்

துடுக்கான மீசையும் எடுப்பான தோள்களும்

துடிக்கின்ற வாளின் ஒளியும்

கருப்புநிறக் கச்சையும் காலில் சலங்கையும்

கருணை பொழிகின்ற திறமும்

கண்ணனே மாயனே கார்முக வண்ணனே

கண்டவர் மெய் சிலிர்க்கும்

ஊதாரியாகி பல ஊரெல்லாம் சுற்றியும்

உன்னை நான் மறக்கவில்லை

 

கையெலாம் நோகவே கடுமையாய் பணிசெய்தும்

கவலைவிட் டகல வில்லை

நாடெல்லாம் சுற்றி நான் மாடாக உழைத்துமே

நன்மையது சேர வில்லை

நெஞ்சார உன்னை நான்நேசித்து வாழ்கிறேன்

நின் கருணை கிட்டவில்லை

குலதெய்வ மென்றுனைக் கொண்டாடி மகிழ்ந்தாலும்

குறைகளது மறைய வில்லை

பொல்லாத ஆசையால் புரியாத கவலையால்

பேதை நான் வாடு கின்றேன்

எக்காலமும் உன்னை ஏற்றியே தொழுகின்ற

ஏழைக் கிரங்கி அருள்வாய்

கோடானு கோடிபிழை செய்யினும் நீ என்னை

கொண்டாதரிக்க வேணும்

 

வறுமையதில் வாடாமல் வஞ்சமனம் இல்லாமல்

வாழவழி சொல்ல வேணும்

அன்புக்கு என்றுமெனை அடிபணிய வைத்து நீ

ஆட்கொண்டு அருள வேணும்

அதிகாரம் கண்டு நான் அஞ்சாமல் வாழ்ந்து

அருங்கழல் சேர வேணும்

பிள்ளை நான் உந்தனது பாதார விந்தமை

பிரியமுடன் வணங்க வேணும்

எனது குலம் முழுவதும் உனதடிமை ஆனபின்

இரங்காதிருக் கலாமோ

 

கவலையைச் சொல்லுமென் கண்ணீரைப் பார்த்து

நீ கல்லா யிருக் கலாமோ

காத்தருளும் தெய்வமுன் கருணையில்லா விடின்

கதி என்ன ஆகு மய்யா

தஞ்சமென்று உனை நம்பி வந்தவர் தமக்

கெல்லாம் தயை புரிய வேணுமையா

கருப்பா என்றுனைக் கரங்கூப்பி அழைத்

திட்டால் காக்க வர வேணுமய்யா!

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.