அன்றைய தினம் கல்லூரி ஒன்றில் ’அறிவியல் மாநாடு’ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஒரு அறிவியல் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்டிருந்த அம்மாநாட்டில் உரையாற்றுவதற்காக ஆசிரியர் வேதிவாசனும் அழைக்கப்பட்டிருந்தார்.
சரியாக காலை 8.00 மணிக்கு மாநாடு இனிதே தொடங்கிற்று. தொடக்க விழாவில், சிறப்பு விருந்தினர் மற்றும் அறிவியல் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் விழாவை குறித்தும், சமகால அறிவியில் வளர்ச்சியின் போக்கு குறித்தும் பேசினர்.
தொடக்கவிழா முடிந்து காலை 9.45 முதல் 10.45 வரை வேதிவாசனின் சொற்பொழிவு என அறிவிக்கப்பட்டிருந்தது.
உரையின் தலைப்பு ‘அறிவியலும் வாழ்வியலும்’ என்றிருந்ததால் மாநாட்டிற்கு வருகை தந்திருந்த பெரும்பாலோனோர் ஆர்வமுடன் அவரது உரைக்காக காத்திருந்தனர்.
விழா அட்டவணைப்படி, வேதிவாசனின் உரை தொடங்கிற்று. சபையில் குழுமியிருந்த மாநாட்டு பங்கேற்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மத்தியில் தனது உரையை முதலில் நிதானமாக தொடங்கினார்.
ஒரு சில அறிவியல் தத்துவங்களையும் அது தொடர்பான தொழிற்நுட்பங்களையும் எடுத்துரைத்தார். ஏறத்தாழ அனைவருக்கும் புரியும் வகையில் அவரது விளக்கம் அமைந்தது.
பின்னர் வாழ்கையில் கைகொள்ள வேண்டிய நல்லியல்புகளையும், தத்துவங்களையும் கூறினார். ஒருகட்டத்தில் அவர் விவரித்த அறிவியலும், வாழ்வியலும் வெவ்வேறு புள்ளியில் நிற்பதாக தோன்றிற்று.
ஆனால், கனப்பொழுதில் அவ்விரண்டு புள்ளிகளையும் ஒன்றிணைத்துக் காட்டிய வேதிவாசனின் பேச்சாற்றல் அனைவரையும் கவர்ந்தது என்றே சொல்லலாம்.
புதுவித கோணத்தில் வேதிவாசனின் அன்றைய உரை இருந்ததால், பலரும் அவரை நேரில் வாழ்த்துவதற்கும், அவருடன் உரையாடுவதற்கும் விரும்பினர்.
இருப்பினும், உரை முடிந்து சில மணித்துளிகளில் அங்கிருந்து புறப்பட்டு விட்டார் வேதிவாசன். காரணம், அது முழு ஆண்டு தேர்வுகள் நடைபெறவிருக்கும் காலம்.
அவர், தனது மாணவர்களுக்கு போதுமான தேர்வு பயிற்சி அளிக்க வேண்டியிருந்தது. ஆகையால் அன்று அரைநாள் விடுப்பு மட்டுமே எடுத்திருந்தார்.
எனவே தாமதமின்றி அங்கிருந்து புறப்பட்டு பள்ளிக்கு பயணப்பட்டார். பேருந்து பயணம் சுமார் ஒருமணி நேரம் இருக்கும். விரைந்து நடந்து பள்ளிக்குள் நுழைந்தவர், நேரே தலைமையாசிரியர் அறையில் இருந்த பதிவேட்டில் கையொப்பம் இடுவதற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது “மெல்ல மெல்ல, ஏன் அவசரம்?” என்ற குரல், கணிதநேசனிடம் இருந்து வந்தது. அவருக்கு மறுமொழி சொற்களால் தராமல் தன்கையை மட்டும் அசைத்து காட்டிவிட்டு விரைந்தார் வேதிவாசன்.
நண்பகல் 12.00 முதல் 1.00 மணி வரை மதிய உணவு இடைவேளைதான். வகுப்பு இல்லை என்றாலும், அரைநாள் விடுப்பு என்றால் பள்ளி விதிப்படி 12.30 மணிக்கு அவர் கையொப்பம் இட்டாக வேண்டும்.
யாரும் அவரை வலிந்து கேட்காவிட்டாலும், விதிகளை முறையாக கடைபிடிப்பது வேதிவாசனின் வழக்கமாக இருந்தது. அப்பொழுதோ மணி 12.20 ஆகியிருந்தது. எனவேதான் கையொப்பம் இடுவதில் அவசரம் காட்டினார் வேதிவாசன்.
12.30-க்குள் ஆசிரியர் பதிவேட்டில் கையொப்பம் இட்டவர் தங்களது அலுவலக அறைக்கு வந்தார். உள்ளே நுழைந்த வரை “வாங்க வாங்க, இங்க மின்விசிறி கீழே உட்காருங்க” என்றார் கணிதநேசன்.
உச்சி வெயிலில் நடந்து வந்ததற்கான அத்துணை அறிகுறிகளும் வேதிவாசனின் முகத்தில் ஊற்றிக் கொண்டிருந்தது வியர்வையாக!
கருப்புக் கண்ணாடி
நிதானமாக உள்ளே நுழைந்தவர், கணிதநேசனை பார்த்தவுடன் சிரித்து விட்டார்! சிரிப்பிற்கு காரணம் கணிதநேசன் அணிந்திருந்த கருப்புக் கண்ணாடி (Sun glass) தான்.
சிரிப்பை மறைத்து கொண்டு, “என்ன கணி, கண்ணுல பிரச்சைனையா? நேற்று நல்லாதானே இருந்தீங்க” என கேட்டார் வேதிவாசன்.
“கண்ணுக்கு ஒன்றும் பிரச்சனையில்ல வேதி, வெயில் காலமாயிடுச்சே அதான் இந்த கண்ணாடியை அணிந்திருக்கேன்” என்றார் கணிதநேசன்.
வேதிவாசனின் சொற்களுக்கு பதிலளித்தாலும், அவர் சொன்ன விதம் சற்று கிண்டல் செய்யும் தொணியில் இருந்தது. அதனையும் உணர்ந்த கணிதநேசன், “ஏன், எனக்கு கண்ணாடி பொருத்தமா இல்லையா?” எனக் கேட்டார்.
அச்சூழலில் சிரித்தது தவறு என்றுணர்ந்தார் வேதிவாசன். “மன்னிச்சிடுங்க கணி, கண்ணாடி நல்லா இருக்கா?” என கேட்டார்.
“நமக்குள்ள ஏன் மன்னிப்பெல்லாம் வேதி?” என நட்பின் உணர்வை வெளிப்படுத்திய கணிதநேசன், “கண்ணாடி நல்லாதான் இருக்கு, வெயிலின் தாக்கம் சுத்தமா தெரியலபா!” எனச் சொன்னார்.
“இம்ம்…, இதுக்கு அக்கண்ணாடியில இருக்கும் வேதிசேர்மங்களுக்குதான் நன்றி சொல்லணும்” என்றார் வேதிவாசன்.
“நிச்சயமா! ஆனா என்ன வேதிப்பொருட்கள் இந்த கண்ணாடியில இருக்கு?” என வினவினார் கணிதநேசன்.
“பொதுவா இரண்டு வகையான கண்ணாடி இருக்கு. ஒன்று பாலிகார்பனேட் (Polycarbonate) அல்லது பாலி அலைல்-டை-கிளைகால் கார்பனேட் (Polyallyldigylcol carbonate) நெகிழியால் ஆனது. மற்றொன்று கண்ணாடியால் ஆனது என பதிலளித்தார்” வேதிவாசன்.
“ஓ.. ஓ … இன்னொரு கேள்வி, வெயிலின் தாக்கத்தை இக்கண்ணாடி எப்படி கட்டுப்படுத்து? அதோடு நெகிழி கண்ணாடிகளும் எப்படி கண்ணாடி மாதிரி காட்சியளிக்குது?² என தனது ஐயத்தை எழுப்பினார் கணிதநேசன்.
“நல்ல கேள்விகள் கணி. இந்த கண்ணாடியில வெள்ளி குளோரைடு இருக்கு. இது சூரிய ஒளியில் இருக்கும் புறஊதா கதிரை உறிஞ்சிக்கிட்டு வெள்ளி உலோகமா மாறிடுது.
அத்தோடு சிலிக்கன், இரும்பு, மாங்கனீசு, மற்றும் டைட்டானியம் போன்ற தனிமங்களின் ஆக்சைடுகளும் கண்ணாடியில இருக்கு. இவை புறஊதாகதிர் ஊடுருவலை குறைக்கும் தன்மை கொண்டது.
ஆக பாதிப்பை ஏற்படுத்தாத கண்ணுறு ஒளி மட்டும் நம்முடைய கண்களை வந்தடையுது. அதனால நம்ம கண்ணுக்கும் குளிர்ச்சியா இருக்கு” என விளக்கினார் வேதிவாசன்.
மேலும் தொடர்ந்தவர், “வெள்ளி குளோரைடிற்கு பதிலா நாப்தோ பைரான் (napthopyran) எனும் கரிமச் சேர்மமும் கண்ணாடியில பயன்படுத்தப்படுது.
அது புறஊதா கதிர்களை உறிஞ்சிக்கிட்டு அதன் (மூலக்கூறு வாய்ப்பாடு ஒன்றாயினும் வடிவத்தால் வெவ்வேறானவை) மாற்றியச் (isomers) சேர்மங்களை விளைபொருளா தருது.
இந்தசேர்மங்கள் நிறமுடையது. இதனால் சில கண்ணாடிகள் பல நிறங்களில் காட்சி தரும்” என்று விளக்கினார் வேதிவாசன்.
“கருப்புக் கண்ணாடி பத்தி நல்ல தகவல்களை தந்தீங்க வேதி, சரி இன்னைக்கு மாநாடு எப்படி இருந்தது?” என கணிதநேசன் கேட்க, “சிறப்பு தான்” என கூறினார் வேதிவாசன்.
“சரிங்க சாப்பிடுவோமா?” என கணிதநேசன் கேட்க, கைகடிகாரத்தை பார்த்தார் வேதிவாசன்.
கடிகார பெருமுள் 1.00-யை நெருங்கிக் கொண்டிருந்தது. “இருக்கட்டும் கணி, இப்போ வகுப்பு இருக்கு. வந்து சாப்பிடுறேன்” என்று சொல்லிவிட்டு வகுப்பிற்கு புறப்பட்டார் வேதிவாசன்.
முனைவர்.ஆர்.சுரேஷ்
சென்னை.
அலைபேசி: 9941091461
மறுமொழி இடவும்