ஐஸ்கிரீம் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாக்கில் நீரினை வரவழைக்கும். கருப்புநிற கார்பன் ஐஸ்கிரீம் தெரியுமா உங்களுக்கு?. கார்பன் ஐஸ்கிரீமைப் பற்றித் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
ஐஸ்கிரீம் பால் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஐஸ்கிரீம் வென்னிலா, ஸ்ட்ராபெர்ரி, சாக்லேட், மாங்கனி, திராட்சை என பல பல சுவைகளுடன் மஞ்சள், நீலம், பழுப்பு, ஆரஞ்சு, பச்சை என பல வண்ணங்களிலும் கிடைக்கிறது. இப்போது இவ்வரிசையில் கருப்பு நிற ஐஸ்கிரீமும் சேர்ந்திருக்கிறது.
பொதுவாகவே நாம் உண்ணும் உணவு கருப்பு நிறத்தில் இருப்பதில்லை. அப்படி இருக்கையில் நமக்கு கருப்பு நிற ஐஸ்கிரீம் சற்று ஆச்சர்யத்தை தரவே செய்கிறது.
சரி அண்மைக் காலமாக பிரபலடைந்து வரும் இக்கருப்பு நிற ஐஸ்கிரீமில் சேர்க்கப்படும் பொருள் என்ன? இதனால் ஏதேனும் நன்மை உண்டா?. வாருங்கள் இவற்றிற்கான விடைகளைக் காண்போம்.
கார்பன் ஐஸ்கிரீம் தயார் செய்யும் முறை
கருப்பு நிற ஐஸ்கிரீம் தயாரிக்கும் போது, கருமை நிறத்தை கொடுப்பதற்கென கருமை நிறமுடைய கரி எனப்படும் பிரத்தியோகக் கார்பன் (activated carbon ) சேர்க்கப்படுகிறது.
அதிக வெப்பநிலையில் தேங்காய் ஓட்டினை எரிப்பதன் மூலம் இப்பிரத்தியோகக் கார்பன் தயார் செய்யப்படுகிறது.
பின்பு நீராவியை பயன்படுத்தி எண்ணற்ற துளை அமைப்புகள் (porous structure) இக்கார்பனில் உண்டாக்கப்படுகிறது.
இத்தகைய கார்பன் அதீத புறப்பரப்பினை (Surface area) கொண்டதாக இருக்கிறது.
கார்பன் ஐஸ்கிரீமின் விளைவுகள்
கார்பன் ஐஸ்கிரீமில் உள்ள கார்பனின் அதீத புறப்பரப்பின் காரணமாக, பலவகையான சேர்மங்கள் கவரப்படுகின்றன. இத்தன்மையினால் இது மருத்துவத் துறையில் நச்சு நீக்கியாக (detoxifier) பயன்படுத்தப்படுகிறது.
அதாவது உடலில் இருக்கும் நச்சுக்கள் மற்றும் தேவையற்ற வேதிப்பொருட்களை இக்கார்பன் கவர்ந்து வெளிக் கொணர்ந்து விடுகிறது.
மேலும், உடல் எடை மற்றும் கொழுப்பினைக் குறைத்தல், பற்களில் ஏற்படும் கறையினை நீக்கி பற்களை வெண்மையாக்குதல் என பல மருத்துவ குணங்களும் இக்கார்பனுக்கு இருக்கிறது.
ஆகவே ஐஸ்கிரீமில் சேர்கக்ப்படும் கார்பனால் கருப்பு நிறம் கிடைப்பதோடு மருத்துவ பயன்களும் உள்ளன.
அதே நேரத்தில் கார்பன் ஐஸ்கிரீமிற்கு எதிரான கருத்தும் முன் வைக்கப்படுகிறது. அதாவது அதீத புறப்பரப்பு கொண்ட இக்கார்பன் நச்சுப்பொருட்களை மட்டுமில்லாமல் உடலிற்கு தேவையான சத்துப்பொருட்களையும் கவர்ந்து வெளித் தள்ளும் நிலை உண்டாக்கும் என்கின்றனர் ஒரு சாரார்.
மேலும் ஐஸ்கிரீமில் இருக்கும் கால்சியம், பொட்டாசியம், வைட்டமின்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உடலில் சேராமல் இது கவர்ந்து இழுத்து வெளிக் கொணரலாம் என்ற ஐயமும் எழுப்பப்படுகிறது.
ஒரு வேளை இக்கார்பனின் அளவு அதிகரிக்கும் போது அதாவது தொடர்ந்து கார்பன் ஐஸ்கிரீமை உண்பதால் ஊட்டச்சத்து குறைபாடும் உண்டாகலாம் என்கின்றனர் இத்துறை வல்லுநனர்கள்.
எனவே இதனை அளவோடு உண்டால் பாதிப்புகள் ஏதும் இல்லை என்பது இவர்களின் கருத்தாகும். அளவோடு கருப்புநிற கார்பன் ஐஸ்கிரீமை உண்போம்; வளமான வாழ்வு வாழ்வோம்.
– முனைவர்.ஆர்.சுரேஷ்
ஆராய்ச்சியாளர்
பகுப்பாய்வு மற்றும் கனிம வேதியியல் துறை
கன்செப்ஷன் பல்கலைக்கழகம், சிலி
WhatsApp +91 9941633807
மறுமொழி இடவும்