கருப்பு உளுந்து புட்டு ஆரோக்கியமான, அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டிய சிற்றுண்டி ஆகும். இதனை குழந்தைகளுக்கு இடைவேளை உணவாக செய்து கொடுக்கலாம்.
கருப்பு உளுந்து எலும்புக்கு வலு சேர்க்கும். ஆதலால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.
கருப்பு உளுந்தினைக் கொண்டு லட்டு, பாயசம், வடை, கஞ்சி, சாதம் உள்ளிட்ட உணவுகளைச் செய்யலாம். இனி சுவையான கருப்பு உளுந்து புட்டு செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து பயறு 2 கப் (தோராயமாக 200 கிராம்)
பச்சரிசி மாவு 2 கப்
தேங்காய் துருவல் 2 கப்
நாட்டுச் சர்க்கரை 2 கப்
உப்பு சிறிதளவு
ஏலக்காய் 3 எண்ணம்
கருப்பு உளுந்து புட்டு செய்முறை
கருப்பு உளுந்து மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை வெறும் வாணலியில் போட்டு வறுத்துக் கொள்ளவும்.
கருப்பு உளுந்து பயறு கருப்பாக இருப்பதால் வறுபட்டது தெரியாது. உளுந்தம் பயறின் வறுக்கும் வாசனை வறுவதோடு, ஏலக்காய் சூட்டில் வெடிக்கும். அப்போது அடுப்பில் இருந்து உளுந்தம் பயறினை இறக்கி விடவும்.
கருப்பு உளுந்து பயறு மற்றும் ஏலக்காய் ஆறியதும் அதனை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தில் அரைத்த கருப்பு உளுந்து பயறு மாவுடன் பச்சரிசி மாவினைச் சேர்க்கவும்.
அத்துடன் தேங்காய் துருவல் சேர்க்கவும். அதனுடன் நாட்டுச் சர்க்கரை, சிறிதளவு உப்பு சேர்க்கவும்.
எல்லாவற்றையும் ஒன்றாக ஒருசேர கலக்கவும்.
பின்னர் இக்கலவையை மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்து பாத்திரத்தில் கொட்டிக் கொள்ளவும்.
அரை டம்ளர் அளவு தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
கொதி நீரை சிறிது சிறிதாக மாவில் சேர்த்துக் கிளறவும். எல்லா மாவிலும் தண்ணீர் படும்படி நன்கு கிளறவும். மாவு பிடித்தால் பிடிக்கவும், உதிர்த்தால் உதிரும்படி இருக்கும் பக்குவத்தில் இருக்க வேண்டும்.
சிறிய கிண்ணம், டம்ளர், குழிக்கரண்டி ஏதேனும் ஒன்றில் மாவினை அடைத்து அச்சு வைக்கவும். இவ்வாறாக எல்லா மாவினையும் அச்சு வைக்கவும்.
இட்லி பாத்திரத்தில் மாவு அச்சுக்களை வைத்து 7 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
சுவையான கருப்பு உளுந்து புட்டு தயார்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் மாவினை அச்சு வைப்பதற்குப் பதிலாக, மாவினை உதிர்த்தும் ஆவியில் வேக வைத்துக் கொள்ளலாம்.
விருப்பமுள்ளவர்கள் நாட்டுச் சர்க்கரைக்குப் பதிலாக, வெள்ளைச் சர்க்கரை அல்லது கருப்பட்டி அல்லது மண்டை வெல்லத்தைச் சேர்த்து புட்டு தயார் செய்யலாம்.
விருப்பமுள்ளவர்கள் பச்சரிசி மாவிற்குப் பதிலாக, புழுங்கல் அரிசி மாவினைச் சேர்த்து புட்டு தயார் செய்யலாம்.
மறுமொழி இடவும்