கருப்பு உளுந்து லட்டு உடலுக்கும் எலும்புக்கும் வலுவினை உண்டாக்கும் சத்தான உணவு ஆகும். இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உண்ணலாம்.
இரும்புச் சத்து, கால்சியம் சத்து, ஜிங்க் சத்து உள்ளிட்ட உடல் வளர்ச்சிக்கு அவசியமான சத்துக்களை இது உள்ளடக்கியுள்ளது. எனவே வளரும் குழந்தைகளுக்கு இதனை கட்டாயம் செய்து கொடுக்க வேண்டும்.
உளுந்தும், கருப்பட்டியும் சேர்த்து செய்யப்படுவதால் இது பெண்களின் கருப்பையை வலுவடையச் செய்கிறது. ஆதலால் எல்லா வயதில் இருக்கும் பெண்களும் இதனை அடிக்கடி உண்ணலாம்.
இனி எளிய முறையில் சுவையான கருப்பு உளுந்து லட்டு செய்யும் முறை பற்றிப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து பயறு – 1 கப்
பொரிகடலை – 1 கப்
கருப்பட்டி – 1 கப் (நன்கு தூளாக்கியது)
நெய் – ¾ கப்
ஏலக்காய் தூள் – ½ ஸ்பூன்
முந்திரிப் பருப்பு – 10 எண்ணம்
கிஸ்மிஸ் – 10 எண்ணம்
செய்முறை
உளுந்தம் பயறினை சுத்தம் செய்து வெறும் வாணலியில் போட்டு நன்கு வாசனை வரும் வரை வறுத்து ஆற விடவும். லேசாக வறுத்தால் பயறு வறுபடாது. அதிக நேரம் வறுத்தால் பயறு தீய்ந்து விடும். ஆதலால் கவனமாக வாசனை வரும் வரை வறுக்கவும்.
பொரிகடலை வெறும் வாணலியில் போட்டு பொறு பொறுவென வரும் வரை வறுத்து ஆற விடவும். அதாவது பொரிகடலையின் நிறம் லேசாக மாற ஆரம்பித்ததும் வாணலியிலிருந்து எடுத்து விடவும்.
கருப்பட்டியை நன்கு தூளாக நொறுக்கி அளந்து கொள்ளவும்.
ஆறிய உளுந்தம் பயறை மிக்ஸியில் நன்கு பொடியாக்கிக் கொள்ளவும்.
அதே போல் ஆறிய பொரிகடலையை நன்கு தூளாக்கிக் கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தில் அரைத்த பொருட்களை போட்டு ஏலக்காய் தூளைச் சேர்க்கவும்.
அதனுடன் தூளாக்கிய கருப்பட்டியைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின்னர் கலந்த பொருட்களை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து உருகியதும் அதில் கிஸ்மிஸ், முந்திரி பருப்பு சேர்த்து வெந்ததும் மாவுக் கலவையில் கொட்டி கரண்டியால் ஒருசேர கிளறி விடவும்.
மாவிலிருந்து சிறிதளவை எடுத்து உருண்டைகளாக அழுத்திப் பிடிக்கவும்.
இவ்வாறு எல்லா மாவினையும் லட்டுகளாகப் பிடிக்கவும்.
சுவையான கருப்பு உளுந்து லட்டு தயார்.
இதனை ஒரு மாதம் வரை வைத்திருந்து உண்ணலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் கருப்பட்டிக்குப் பதிலாக மண்டை வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து லட்டு தயார் செய்யலாம்.
விருப்பமுள்ளவர்கள் நெய்யின் அளவினை ¾ பங்கிற்குப் பதிலாக ½ பங்காகக் குறைத்தும் லட்டு தயார் செய்யலாம்.
இரண்டு நாட்களில் லட்டினை காலி செய்வதாக இருந்தால் கருப்பட்டியை பாகாக்கி, இரண்டு ஸ்பூன் நெய் மட்டும் சேர்த்து லட்டு தயார் செய்யலாம்.
விருப்பமுள்ளவர்கள் முழு உளுந்தம் பயறுக்குப் பதிலாக உடைத்து தோல் நீக்காத உளுந்தம் பயறினைப் பயன்படுத்தலாம்.
மறுமொழி இடவும்