வடுவூர் என்ற ஊரில் கந்தன் என்றொருவன் வாழ்ந்து வந்தான். அவன் பெரிய பணக்காரனாகவும், மகா கருமியாகவும் இருந்தான். அவன் தன்னுடைய சொத்துகளை எல்லாம் பாதுகாக்க எண்ணினான்.
எனவே தன்னுடைய சொத்துக்களை எல்லாம் விற்று பணமாக்கினான். அந்த பணத்திற்கு எல்லாம் தங்கக் கட்டிகளை வாங்கினான்.
தங்கக் கட்டிகளை யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பது எப்படி? என்று எண்ணிய அவனுக்கு திடீரென ஒரு எண்ணம் உதித்தது.
அதாவது ஊருக்கு வெளியில் இருக்கும் மலை அடிவாரத்தில் ஒரு பெரிய பள்ளத்தைத் தோண்டி அதைப் புதைத்து வைப்பது என்பதுதான் அது.
மறுநாள் இரவில் யாரும் தெரியாமல் மலை அடிவாரத்தை அடைந்த கருமி கந்தன் தன்னுடைய திட்டப்படி பெரிய பள்ளத்தைத் தோண்டி அதில் தங்கக் கட்டிகளைப் போட்டு புதைத்து வைத்தான்.
பின்னர் தினமும் யாரும் அறியாத வண்ணம் அந்த இடத்திற்குச் சென்று பார்த்து திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
ஒருநாள் கருமி கந்தன் வழக்கம் போல மலையடிவாரத்திற்கு வந்து தங்கக் கட்டிகளைப் புதைத்த இடத்தை நோட்டம் விட்டிக் கொண்டிருந்தான்.
கந்தனின் நடவடிக்கைகளை அவ்வழியே சென்ற வழிப்போக்கன் ஒருவன் கவனித்தான். அவனுக்கு கந்தனின் நடவடிக்கைகள் சந்தேகத்தை வரவழைத்தது.
ஆதலால் வழிப்போக்கன் கருமி கந்தன் அவ்விடத்தைவிட்டு சென்ற பின்பு கந்தன் நோட்டம் விட்ட இடத்தைத் தோண்டினான். தங்கக் கட்டிகள் இருப்பதைக் கண்டு எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஓடி விட்டான்.
இதனை ஏதும் அறியாத கருமி கந்தன் தங்கக் கட்டிகள் புதைத்த இடத்திற்குச் சென்றான். அவ்விடம் தோண்டப்பட்டு தங்கக் கட்டிகள் எடுக்கப்பட்டிருந்ததைக் கண்டான். கண்ணீர் விட்டு கதறினான்.
அவ்வழியே சென்ற பெரியவர் ஒருவர் கருமி கந்தனிடம் அழுவதற்கான காரணத்தைக் கேட்டார். கருமி கந்தன் நடந்தவைகளைக் கூறினான்.
அதனைக் கேட்ட பெரியவர் “சரி, போகட்டும் விட்டுத் தள்ளு. தங்கக் கட்டிகள் இருந்த இடத்தில் ஒரு பெரிய கல்லைப் புதைத்து வை. புதைத்த இடத்தில் தங்கக் கட்டிகள் இருப்பதாக எண்ணிக் கொள். வழக்கம் போல் நீ வந்து இந்த இடத்தைப் பார்வை இடு. உன்னுடைய மனக்கவலை தீர்ந்து விடும்.” என்று கூறினார்.
கருமி புதைத்த பணம் – கதை சொல்லும் கருத்து
பணத்தின் பெருமையே அதனை நல்ல வழியில் செலவிட்டு நல்ல பயனைப் பெறுவதே ஆகும்.
அவ்வாறு செய்யாத பட்சத்தில் பணம் என்பதும், ஒரு பயனும் இல்லாது தெருவில் கிடக்கும் கல்லும் ஒன்றுதான் என்பதை கருமி புதைத்த பணம் என்ற கதையிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
மறுமொழி இடவும்