கருவாட்டுக் குழம்பு செய்வது எப்படி?

கருவாட்டுக் குழம்பு என்பது கிராமத்து மக்கள் பலர் விரும்பி உண்ணும் அசைவ உணவு ஆகும்.

மீனை உப்பிட்டு பதப்படுத்தி கருவாடு தயாரிக்கப்படுவதால் இதனைப் பயன்படும் போது நன்கு கழுவி உபயோகிக்க வேண்டும்.

இனி எளிய முறையில் சுவையான கருவாட்டுக் குழம்பு செய்முறை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கருவாட்டுக் குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்
கருவாட்டுக் குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்

நெத்திலிக் கருவாடு – 25 கிராம்

சின்ன வெங்காயம் – 200 கிராம்

வெள்ளைப்பூடு – 50 கிராம்

தக்காளி – 100 கிராம்

பச்சை மிளகாய் – 2 எண்ணம்

புளி – ஒரு நெல்லிக்காய் அளவு

நல்ல எண்ணெய் – 50 கிராம்

உப்பு – தேவையான அளவு

 

மசால்

தேங்காய் – ¼ மூடி

மல்லித்தூள் – 4 ஸ்பூன்

சீரகத்தூள் – 2 ஸ்பூன்

மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்

 

செய்முறை

சின்ன வெங்காயத்தை சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை காம்பு நீக்கி நேராகக் கீறிக் கொள்ளவும்.

புளியை தேவையான அளவு நீரில் ஊற வைத்துக் கொள்ளவும். வெள்ளைப் பூண்டை தோலுரித்துக் கொள்ளவும். கருவாட்டை சுத்தம் செய்து கொள்ளவும்.

தேங்காய்த்துருவல், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், ஊறவைத்துள்ள புளி, புளித்தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து மசால் தயார் செய்து கொள்ளவும்.

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெயை ஊற்றி வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம், வெள்ளைப்பூண்டு சேர்த்து வதக்கும்போது
வெங்காயம், வெள்ளைப்பூண்டு சேர்த்து வதக்கும்போது

 

வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் பாதி வெந்த நிலையில் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் தயார் செய்துள்ள மசால் கலவையைச் சேர்க்கவும்.

மசாலை ஊற்றியவுடன்
மசாலை ஊற்றியவுடன்

 

இக்கலவையுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். மசால் கொதித்தவுடன் சுத்தம் செய்துள்ள கருவாட்டைச் சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைக்கவும்.

கருவாட்டைப் போடும்போது
கருவாட்டைப் போடும்போது

 

குழம்பில் எண்ணெய் பிரிந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். சுவையான கருவாட்டுக் குழம்பு தயார். இதனை சாதத்துடன் சேர்த்து உண்ண சுவையாக இருக்கும்.

சுவையான கருவாட்டுக் குழம்பு
சுவையான கருவாட்டுக் குழம்பு

 

குறிப்பு: கருவாட்டு குழம்பினை இரும்பு வாணலியில் செய்தால் சுவையாக இருக்கும்.

ஒரு துண்டு சீலா மீன் கருவாட்டினை மேற்கண்ட குழம்பில் சேர்த்து செய்தால் குழம்பு வாசனையுடன் சுவையும் மிகும்.

கருவாட்டுக் குழம்பிற்கு ஒருப்பூடு என்னும் வெள்ளைப் பூண்டினைச் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

ஜான்சிராணி வேலாயுதம்