கரைந்து போகின்றது காலம்…

சின்ன வயசுல அம்மா மடியில் படுத்தபடி….
பூமழை தூவி வசந்தங்களை தங்கச்சிக்கு
MGR வாழ்த்துவதை ரசித்த நினைவு
அவ்வப்போது வந்து போகும்…

அடுத்த நிலையில் 2 வயது தம்பியை
நான் பார்த்துக் கொள்ள
அம்மா மதிய காட்சி ( மேட்னி)
பார்க்கச் செல்ல
5 பைசா சன்மானம் பெற்றதும்
இன்றும் பசுமையான நினைவுகளாக…

பள்ளி கல்வி முடிந்ததும்
மேல் நிலை கல்வி காலம்
தினசரி இரண்டாம் ஆட்டம்
இரவு காட்சி விடுதி நண்பர்களுடன்
இப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கின்றன
அதன் எச்சங்கள்…

நூற்பாலை பணி
நாள் ஊதியம் ஐந்து ரூபாய் என்றாலும்
வார விடுமுறை செவ்வாய் மட்டும்
கண்டிப்பாக இரண்டு திரைப்படங்களில்
காலம் விரைந்து மறுநாள் வேகமாக வந்து விடும்…

மணமான புதிதில் மனைவியுடன் சில படங்கள்….
குழந்தைகள் மனைவி என குடும்பத்தடன்
ஒன்றிரண்டு என தேய்ந்து போன
திரையரங்க பந்தம் இப்போது
எங்கோ தொலைந்து போனது…

தேடவும் மனமில்லை
தொடரவும் இயலவில்லை எனினும்
இப்போது கைபேசியில் பாடல்கள்
பார்த்தும் கேட்டும்
தொ(ல்)லைக்காட்சியில் நகைச்சுவை
காட்சிகளுடன் கரைந்து போகின்றது காலம்…

இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942

இராசபாளையம் முருகேசன் அவர்களின் படைப்புகள்