விருந்தாளிகள் வர வேண்டி
கூரை மேல் நின்று கரையாதே
காக்கையே,
இங்கு எனக்கே அடுத்த
இரண்டு வேளை உணவில்லை
எங்கள் பென்ஸ்
டிசம்பர் மாத வெள்ளத்தில் காசி
அண்ணன் காயிலாங் கடையில் உள்ள
பழைய பிரிட்ஜ் தெர்மாகோல் தான்
எங்கள் பேட்டையின் பென்ஸ்
தீபாவளி
காலை முதல் மாலை வரை
நாங்கள் வெடித்த பட்டாசு குப்பையை
பொறுக்கிய அண்ணனுக்கு இன்று
தீபாவளி இல்லை
பரமபிதா
காவாய் நாற்றத்தில்
கருவாடு வாசத்தில்
எங்கள் ஜனக் கூட்டத்தில்
உங்கள் பரமபிதா தங்க மாட்டாரானால் – என்
உள்ளத்திலும் அவர் ஒருபோதும்
தங்க மாட்டார்
சேரி இளவரசர்கள்
வானத்தில் எந்த வண்ண
ராக்கெட் வெடிக்கப் போகிறது
என்றபடி அண்ணாந்து பார்த்து
பந்தயம் கட்டும் சேரி இளவரசர்கள்
க.சஞ்ஜெய்
சென்னை
கைபேசி: 7904308768
மறுமொழி இடவும்