கர்மா எப்படி செயல்படுகிறது?

நான் ஏன் இப்படி இருக்கிறேன்?

அவன் என்னை விட நன்றாக இருக்கின்றானே? என்னை விட நன்றாக வாழ்கின்றானே?

நான் நல்லது செய்தும் இப்படி நாயாய், பேயாய் அவதிப்படுகிறேனே?

நான் முயற்சி செய்தும் எல்லாம் தள்ளிப்போகிறது. அவனுக்கு அதிர்ஷ்டம் வாசலில் வந்து நிற்கிறது.

இப்படிப்பட்ட புலம்பல்களை நாம் தினமும் கேட்கிறோம்.

ஆனால் இதற்கு என்ன காரணம் என்பதை யாராலும் சொல்ல முடியாது. என்னதான் பரம்பரை காரணம் என்றாலும்கூட, திடமான விளக்கத்தை யாராலும் தரமுடியாது.

ஆனால் நம்முடைய சமயச்சான்றோர்கள் இதற்கு ஒரே ஒரு காரணத்தைத்தான் சொல்லுகிறார்கள். அதுதான் கர்மா. அது ஒவ்வொரு உயிர்களின் பிறப்பிலும் தொடர்ந்து வந்து வேலை செய்கின்றது.

இரண்டு நாய்கள் உள்ளன.

ஒன்று சொறி சிரங்குகளுடன், ஒருவேளை உணவுக்கு படாதபட்டு தெருவில் அலைகிறது; கல்லடிபடுகிறது.

இன்னொரு நாய் விலையுயர்ந்த பிஸ்கட்டுகளை சாப்பிட்டுக் காரில் எஜமானரின் மடியில் அமர்ந்து போகிறது. அதற்கு என்ன காரணம்?

ஓர் உயிர் செய்யும் செயல்களின் வினைத்தொகுதியே கர்மாவாக உருவெடுக்கிறது. அந்தச் செயல்களின் தொடர்ச்சியே நல்வினை, தீவினை என்ற இருவேறு நிலைகளில் அந்த உயிரை மட்டுமே தொடரும் கர்மாவின் பலன்களாகும்.

ஓர் உயிர் ஒரு செயலைச் செய்யும்போது அது கர்மாவாகிறது. ஒருசெயல் முடிந்த பின்புதான் அது கர்மாவிற்கான கர்மப்பலன்களாக உருவாகிறது.

ஓர் உயிர் எந்த செயல்களையுமே செய்யாமல், ஜடநிலையில் எந்த இயக்கமும் இன்றி இருக்கும்பொழுது, அந்த உயிருக்கு எந்தவிதமான கர்மாவும் இல்லை. கர்ம பலன்களும் இல்லை.

இதைப் புரிந்தவர்கள் தவயோகிகள். தங்கள் செயல்களை தாங்களே கட்டுப்படுத்தும் ஆற்றல் அவர்களுக்கு தவவலிமையால் ஏற்படுகிறது. அதனால் அவர்களை எந்த தர்மபந்தங்களும் தொடர்வதில்லை.

கர்மா என்பது தமிழில் ‘வினை’ அல்லது ‘வினைத்தொகுதி’ என்று பேசப்படுகிறது. அது எப்படி வேலை செய்யும் என்பதைப் புரிந்து கொள்ள இந்தக் கதை.

முன்னொரு காலத்தில் பத்மநாபர் என்ற பெயருடைய ஒரு செல்வந்தர் தன் மனைவியோடு வாழ்ந்து வந்தார். அவரும் அவருடைய மனைவியும் மிகவும் உயர்ந்த குணமுடையவர்கள். அவர்கள் சுற்றுப்புறத்தில் வாழும் துறவிகளுக்கும் தவசிகளுக்கும் தினமும் உணவளித்து பசியாற்றி வந்தனர்.

ஒருநாள் பத்மநாபரும் அவருடைய மனைவியும் வழக்கம்போல் உணவளித்துக் கொண்டிருந்தனர். அப்போது சற்று தூரத்தில் ஒரு வயதான துறவி பசியோடும் தாகத்தேடும் வருவதை பத்மநாபரின் மனைவி கண்டார்.

அந்த துறவி வெகுதூரத்தில் இருந்து மிகவும் களைப்போடும் பசியோடும் வருவதை அவள் அறிந்தாள். கோடைகாலம் என்பதால் சுட்டெரிக்கும் வெப்பம் மற்றும் நீர்ப்பற்றாக்குறையால் அந்த துறவி மிகவும் பலவீனமாகக் காணப்பட்டார்.

உடனே பத்மநாபரின் மனைவி ஒருபாத்திரத்தில் உணவையும் ஒருகோப்பையில் பசும்பாலையும் நிரப்பி அந்த துறவியிடம் விரைந்து சென்றார்.

“துறவிரே, நீங்கள் மிகவும் களைப்பாகவும் பசியொடும் காணப்படுகிறீர்கள். உங்களுக்காக நான் உணவு கொண்டு வந்திருக்கிறேன். அதோ அங்கே ஒருகுளம் உள்ளது. அங்கு சென்று உங்கள் கைகால்களை கழுவிக் கொள்ளலாம்” என அந்த துறவியாரிடம் பத்மநாபரின் மனைவி கூறினார்.

உணவு உண்பதற்கு முன் கண்டிப்பாக கைகால்களைக் கழுவ வேண்டியது ஆசாரமாகும்.

துறவியாரும் அந்த குளத்தருகே சென்று உணவை ஒரு ஆலமரத்தடியில் வைத்துவிட்டு கைகால்களைக் கழுவச் சென்றார்.

அப்போது அம்மரத்தின் மேல் ஒருகழுகு ஒரு கடும் விஷம் கொண்ட நாகத்தை வேட்டையாடிக் கொண்டு வந்து அம்மரத்தில் அமர்ந்து கொத்தித் தின்று கொண்டிருந்தது.

எதிர்பாராத விதமாக, அந்த நரகத்தின் வாயில் இருந்து கசிந்த கடும் விஷம் அத்துறவி வைத்துச் சென்ற பாலில் விழுந்து கலந்தது.

அந்த துறவியும் கைகால்களை நன்கு கழுவிய பின் மரத்தடிக்கு வந்து அந்த ஆகாரங்களையும் பாலையும் உண்ண ஆரம்பித்தார்.

அவர் இல்லாத வேளையில் அங்கு நிகழ்ந்த சம்பவத்தை அவர் அறியவில்லை. உடனே, அவரின் வயிற்றில் கடுமையான எரிச்சலும் தாங்கமுடியாத வலியும் ஏற்பட்டது.

அவர் உண்ட உணவில் நஞ்சு கலந்திருக்கலாம் என்பதை அவர் உடனே யூகித்தார். பத்மநாபரின் இல்லத்திற்கு விரைந்து சென்று “உதவி உதவி” என அலறினார்.

துறவியின் குரலைக் கேட்டு வெளியில் ஓடிவந்த பத்மநாபரின் மனைவி துறவியின் மேனியெல்லாம் நிறம் மாறியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள்.

தாம் அளித்த உணவை உண்ட பின்னர் தான் துறவி இந்நிலைக்கு ஆளாக்கினார் என்பதை துறவியிடம் இருந்து அறிந்து திடுக்கிட்டார்.

உடனே விஷமுறிவு மருத்துவரை அழைத்து வந்தார். ஆனால், மருத்துவர் சிகிச்சையைத் தொடங்கும் முன்னரே அத்துறவி மடிந்தார்.

இதை அறிந்த பத்மநாபர் மிகவும் மனம் நொந்து போனார். துறவியைக் கொலை செய்த மகாபாதகத்தை எண்ணி வருந்தினார். எந்தவொரு பாவமும் செய்யாவிடினும் அவரின் மனைவி மிகவும் மனம் உடைந்து போனாள்.

பாதகத்தை ஏற்றுக் கொண்டு கணவனைப் பிரிந்து வனவாசம் சென்றாள். அறிந்தோ அறியாமலோ செய்த பாவத்தின் பரிகாரமாக அவர் சந்நியாசத்தை எடுத்துக் கொண்டார்.

யமலோகத்தில் பாவ புண்ணியக் கணக்குகளை எழுதும் சித்ரகுப்தன் குழம்பினார். துறவியைக் கொன்ற பாவத்தை யார் கணக்கில் எழுதுவது என வியந்தார். அதை எமதர்மனிடம் வினவினார்.

“பிரபுவே! பாம்பின் விஷம் கலந்த பாலைப் பருகி கொலையுண்ட துறவியின் பாவத்தை யார் கணக்கில் எழுதுவது?

கண்டிப்பாக அந்தப் பாம்பு பாவியல்ல.

கழுகின் பிடியில் சிக்கி இரையாகிக் கொண்டிருந்த அப்பாம்பின் மீது எந்தவொரு குற்றமில்லை.

அந்த கழுகின் மீதும் எந்தவொரு பாதகமும் இல்லை.

ஐந்தறிவு ஜீவனாகிய அது தன்னுடைய பசிக்காக இரையை வேட்டையாடித் தின்றது.

புசித்தவருக்கு உணவளித்து உயர்வான புண்ணிய செயல்களைச் செய்த பத்மநாபரோ, அவருடைய மனைவியோகூட இந்த பாதகத்திருக்குப் பொறுப்பல்ல.

பிறகு யாருடைய கணக்கில் தான் இருந்த மகாபாதகத்தை எழுதுவது? தாங்களே அறிவிக்க வேண்டுகிறேன்” என சித்திரகுப்தன் எமனிடம் கேட்டான்.

சித்திர குப்தன் கூறியது போலவே அந்த நாகமோ, கழுகோ அல்லது பத்மநாபர் தம்பதியினரோ, இந்த பாதகத்திற்குப் பொறுப்பல்ல.

மாறாக, நடந்த உண்மை சம்பவத்தை அறியாமல், யாரெல்லாம் மற்றவர்கள் மீது வீண்பழி சுமத்தி சாடுகிறார்களோ, அவர்களுக்கே அந்த பாதகம் போய் சேரும் என எமதர்மன் விளக்கம் தந்தார்.

ஒருவர் தவறு செய்தார் என எந்தவொரு உறுதியான ஆதாரமும் இல்லாத பட்சத்தில் அவரை பாவி என சாடுவது, அப்படி சாடுபவர்க்கே தீய கர்ம வினையை ஏற்படுத்தும்.

அது எத்தகைய பாவத்துக்காக நாம் அவரை சாடுகிறோமோ, அதைப் பொறுத்தே நமக்கும் அந்த தீவினை ஏற்படும். இதையே இக்கதையின் மூலம் புராணம் எடுத்துரைக்கின்றது.