கறவைகள் பின்சென்று கானகம் சேர்ந்து உண்போம் என்ற இப்பாடல், பன்னிரு ஆழ்வார்களில் பெண் ஆழ்வாரான ஆண்டாள் அருளிய, திருப்பாவையின் இருபத்து எட்டாவது பாசுரம் ஆகும்.
திருப்பாவை பாடல் 28
கறவைகள் பின்சென்று கானகம் சேர்ந்து உண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையலோர் எம்பாவாய்
விளக்கம்
எந்தக் குறையும் இன்றி நிறைவின் வடிவான கோவிந்தனே!
நாங்கள் கறவை மாடுகளை மேய்ச்சலுக்காக காடுகளுக்கு ஓட்டிச்சென்று அங்கேயே உணவு உட்கொள்ளும் பழக்கத்தைக் கொண்டவர்கள்!
எங்களுக்கு எவ்விதமான கேள்வி ஞானமும் இல்லை.
ஆனால் பரம்பொருளான உன் அருளைப் பெறும் மகத்தான புண்ணியம் ஒன்று எங்களைச் சேர்ந்திருக்கிறது.
மாடு மேய்க்கும் எங்களது ஆயர்குலத்தில் உன்னைப் பிள்ளையாகப் பெற்று, எங்களில் ஒருவனாகக் கலந்து பழகும் பெரும் பேறு எங்களுடையது!
எங்களுக்கு அறிவில்லா விடில் என்ன? உன்னிடம் நிறையவே நிறைந்து இருக்கிறது. அது எங்களைக் காத்தருளும்!
உன்னோடு எங்களுக்கு உள்ள தொடர்பை என்றென்றும் நீக்கவே முடியாது!
நாங்கள் அதிகம் அறிவில்லாத மக்கள். அதன் காரணமாக உன் பெருமை அறியாது சிறுமை (ஒருமை) பெயர்களால் உன்னை அழைத்திருந்தாலும், அவற்றை எல்லாம் பொறுத்து அருளி எங்களுக்கு நீ நோன்பின் பலனைத் தரவேண்டும்!
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!