என் பெயர் நாகராஜ். நான் பொதுவாகவே எல்லோரிடமும் சகஜமாக பழகி விடுவேன். அதனாலே என்னவோ எனக்கு நண்பர்கள் வட்டாரம் அதிகம்.
அப்படி பழகியவரில் ஒருவர் தான் வேலுச்சாமி. 60 வயது இருக்கும். என்னிடம் மிகவும் நட்பாக பழகுவார். அதே நேரத்தில் எனக்கு உரிமையுடன் சில புத்திமதிகளையும் கூறுவார்.
அலுவலகத்தில் வேலை பார்க்கும் நாங்கள் அனைவரும்
ஒரு குடும்பத்து உறுப்பினர் போல பழகுவோம்; பேசுவோம்.
வேலுச்சாமி எங்கள் அலுவலகத்தில் ஆபீஸ் பாயாக தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவரை எல்லோரும் ரொம்ப சிக்கென பேர்வழி, கஞ்சன், ஒரு டீ கூட தன் காசில் சாப்பிட மாட்டார் என்பார்கள் .
அவர்களுக்கு என்ன தெரியும்! அவரிடம் நெருங்கி பழகிய விதத்தில் நான் சொல்கிறேன். வேலுச்சாமி ரொம்பவும் நல்ல மனிதர். பாவம் அவருடைய சூழ்நிலை அப்படி.
‘வாங்கும் சம்பளத்தில் ஒரு காசு கூட செலவு பண்ண கூடாது’
என்பது அவர் வீட்டுக்காரம்மாவின் கட்டளை.
நான் ஏதேனும் பணம் காசு கொடுத்தால் வாங்க மாட்டார்
இதனாலே அவரை டீ வேளையில் அழைத்துச் சென்று டீ வாங்கிக் கொடுப்பேன். வாங்கிக் கொள்வார்.
எங்களுக்கு கிடைக்கும் அந்த சிறிது நேரத்தில் மனம் விட்டு பேசுவோம். அவரும் தன் மனதில் உள்ள ஆதங்கங்களை என்னிடம் சொல்வார்.
அவர் அடிக்கடி சொல்லும் வாசகம் இது. ‘வேலையில இருக்கும் போதே உயிர் போயிடனும் தம்பி. வெறும் சதைக்கு ஆசைப்பட்டு கல்யாணத்த பண்ணிக்கிட்டு வாழறோம். இது ஒரு வாழ்க்கையா?’
‘அவர் எவ்வளவு மனசு வேதனை பட்டிருந்தால் இந்த வார்த்தை வெளியே வரும்’ என்று நானும் யோசித்ததுண்டு.
அப்படி மனசு வெசனப்பட்டு பேசிப்புட்டு போனவர் தான், இன்றோடு ஒரு வாரம் ஆகிறது. அவர் வேலைக்கு வரவே இல்லை.
எனக்கு ஒரே யோசனையாக இருந்தது. அலுவலக வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு சாயங்காலம் அவர் வீட்டை தேடிட்டு போனேன்.
வேலுச்சாமி வாசலில் கயிற்று கட்டிலில் படுத்திருந்தார். நான் வண்டியை நிறுத்திவிட்டு அருகே சென்றேன் .
வேலுச்சாமி என்னை கண்டதும் “அட வாங்க தம்பி!” என்று சொல்லிவிட்டு எழ முயற்சித்து தோற்றுப் போனார்.
அவரால் எழ முடியவில்லை. உடல்நிலை மிகவும் மெலிந்து காணப்பட்டார். கட்டிலில் கொஞ்சம் நகர்ந்து எனக்கு உட்கார இடம் கொடுத்தார்.
“எனக்கு உடம்புக்கு முடியல தம்பி, அதனாலதான் ஆபீசுக்கு வர முடியல. ஆனா எனக்கு நம்பிக்கை இருந்தது. நீங்க என்னைய பாக்க வருவீங்கன்னு” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுது அவர் கண்களில் கண்ணீர் வழிந்து தலையணையை நனைத்தது.
அவர் கரங்களை நான் பற்றிக் கொண்டேன். “உங்களுக்கு ஒன்னும் ஆய்டாது. உடம்பு சீக்கிரத்தில் குணமாயிடும். கவலைப்படாதீங்க சரியா?”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல தம்பி கட்டையில போற உயிர் எப்ப போனா என்ன? நான் உங்களை தான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன்.”
“ஏன் ஐயா? உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் எனக்கு ஆபீசுக்கு கால் பண்ணி இருக்கலாமே! பணம் காசு ஏதாவது தேவைப்படுதா?”
“பிணமாக போகப் போறவனுக்கு பணம் எதுக்கு? அதெல்லாம் வேணாம் தம்பி. எனக்கு உங்களால ஒரு காரியம் ஆகணும்.”
“சொல்லுங்கய்யா நான் என்ன செய்யணும்?”
வேலுச்சாமி தான் படுத்து இருந்த தலையணை உரைக்குள் கையை விட்டு ஏதோ தடவ, கையில் பட்டதை வெளியே எடுத்தார்.
வேலுச்சாமி கையில் ஒரு பழங்காலத்து நகை ஒன்று இருந்தது. கையில் எடுத்து அதை திரும்பத் திரும்ப பார்த்த அவர் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது.
“..ம்…ம் .ம் …. என் பேச்சி அம்மா. பேச்சி நீ இன்னும் இருக்கியா? இல்லையா …” என்று சொல்லிக் கொண்டே ….ஓ ….என்று அழுதார்.
அந்த நகையை என்னிடம் தந்தர, நான் அதை கையில் வாங்கி பார்த்தேன்.
அது உரு குலைந்து, பளபளப்பு இல்லாமல், ஒளி மங்கியும் அதில் பாதிக்கப்பட்ட கற்கள் உதிர்ந்தும் மங்கிய நிலையில் காணப்பட்டது,
“ஐயா… ஏன் இதை என்னிடம் கொடுக்கறீங்க? உங்க உறவினர்கள்ல நம்பிக்கையானவங்களப் பார்த்து கொடுக்கலாம்ல …”
“அவர்களிடம் இதைக் கொடுத்தால் உருக்கி போட்டுக் கொள்வார்கள். உங்களைவிட நம்பிக்கையான ஆள் கிடையாது. உங்களை பற்றி தெரியும் தம்பி” என்று சொல்லிவிட்டு அவரைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
“எனக்கு நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள கிராமம் தான். 40 வருஷத்துக்கு முன்னால எனக்கும் பேச்சிக்கும் கல்யாணம் ஆச்சு. அப்போ எனக்கு விடலை பருவம். நல்லது கெட்டது தெரியாத வயசு.
காதல்னா என்ன? உண்மையான அன்புனா என்ன என்பது எதுவுமே தெரியாது. அழகுதான் காதல் என்று நினைத்து இருந்தேன்.
நான் அவளுடன் ஒரு வாரம்தான் வாழ்க்கை நடத்தினேன். என்னிடம் அவள் அன்போடும் அரவணைப்போடும் தான் இருந்தாள்.
எனக்குத்தான் அவளை பிடிக்கவில்லை. அவளிடம் உள்ள நகைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு யாரிடமும் சொல்லாமல் ஊரைவிட்டே வந்து விட்டேன். அதில் ஒன்றுதான் இந்த நகை.
இங்கே வந்து வேறு கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது பேச்சியின் அருமை. இப்போ அவள் என்னுடன் இருந்திருந்தால் இப்படி என்னை திட்டவும் மாட்டாள். அடிக்கவும் மாட்டாள்.
என் அருகே உட்கார்ந்து தலையை கோதி விட்டுக் கொண்டு ஆறுதல் சொல்லிக் கொண்டுதான் இருந்திருப்பாள். தனியே விட்டு சென்றிருக்க மாட்டாள்.
பேச்சி …பேச்சி…” என்று மறுபடியும் தேம்ப ஆரம்பித்து சிறிது நேரம் அழுதுவிட்டு, அவளிடம் இதை எப்படியாவது சேர்த்து விடுங்கள்” என்று சொன்னார்.
“அதுக்கப்புறம் நீங்க அவங்கள தொடர்பு கொள்ளவே இல்லையா?”
“இல்லை தம்பி. என்னுடைய சுயமரியாதை என்னைய தடுத்துருச்சு. என்னைய மன்னிச்சிட சொல்லுங்க.”
அவர் சொன்ன அடையாளங்களையும் முகவரியையும் வைத்துக் கொண்டு பேச்சியைத் தேடி நான் புறப்பட்டேன்.
அன்று இரவே வேலுச்சாமி இறந்து விட்டதாக செய்தி கிடைத்தது.
‘அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று நான் வேண்டிக் கொண்டு புறப்பட்டேன்.
‘பளபள’ என்று பொழுது விடிய, அவர் சொன்ன ஊருக்கு வந்து இறங்கி எதிர்ப்பட்டவர்களை விசாரிக்க, ஆத்தங்கரை ஓரத்தில் மண் பாதையை காட்டினார்கள்.
நடந்தேன், ஊர் வந்தது. ஊர்க்காரர்களிடம் விசாரித்தேன்.
வேலுச்சாமி பேச்சியை விட்டுப் போனதுக்கு அப்புறம் குடும்பமே சிதைந்து போனதாகவும், அந்த ஏக்கத்திலேயே வேலுச்சாமியின் அப்பா அம்மா இறந்து விட்டதாகவும், பேச்சி என்ற கிழவி மட்டும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு குடிசையில் வாழ்ந்து வருவதாகவும் சொன்னார்கள்.
ஊரார் கூறிய அடையாளங்களைக் கேட்டுக் கொண்டு பேச்சியின் வீட்டை அடைந்தேன். வீட்டு வாசலில் மூங்கில் தட்டி சாத்தி இருந்தது.
வீட்டுக்குள் குரல் கொடுத்தேன். பதில் ஏதும் வரவில்லை. வீட்டினுள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு அருகில் இருந்த வயல்வெளிகளை நோட்டமிட்டேன்.
வயலில் ஆடுகள் மேய்த்துக் கொண்டு வரப்பின் ஓரத்தில் ஒரு வயதான பாட்டி உட்கார்ந்து இருப்பது தெரிந்தது.
அருகில் சென்று “பேச்சி… பேச்சி…” என்று கூப்பிட்டேன்.
ஒரு சலனமும் இல்லாமல் இருக்கவே இன்னும் கொஞ்சம் நெருங்கி சென்றேன்.
அண்ணாந்து என்னை பார்த்த பேச்சி “யாரு தம்பி? ஓ! ஏ பி பணம் கொடுக்க வந்திருக்கீங்களா?”
‘இல்லை’ என்று நான் தலை அசைத்தேன்.
“அப்புறம் எதுக்கு என்னைய இம்புட்டு தொலவு தேடிட்டு வந்து இருக்கீங்க?”
“இல்லை பாட்டி” என்று நான் விஷயத்தை சொன்ன போது, பாட்டிக்கு காதில் எதுவும் விழவில்லை என்பது எனக்கு புரிந்தது.
‘ஓ! இதுதான் அவருக்கு பிடிக்காமல் போனதற்கு காரணமாக இருக்குமோ?’ என்று நான் நினைத்துக் கொண்டு என் கையில் இருந்த பொருளை அவரிடம் காட்டினேன்.
அதை வாங்கி பார்த்து விட்டு கண்ணில் ஒத்திக் கொண்ட பாட்டி, பரக்க எழுந்து என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தன் குடிசைக்கு வந்து திண்ணையின் மேல் உட்கார சொல்லிவிட்டு உள்ளே சென்று ஒரு லோட்டாவில் தண்ணீர் அள்ளிக் கொண்டு வந்து கொடுக்க, குடித்துவிட்டு கீழே வைத்தேன்.
பாட்டியும் என் அருகே உட்கார்ந்து கொண்டு, “ஆமா ராசா
அவக எப்படி இருக்காக? நல்லா இருக்காகளா? இத இத்தனை வருஷமா எப்படி பாதுகாத்து வச்சிருக்காக பாத்தியலா!
என் ராசாவுக்கு என் மேலே கொள்ளப் பிரியம். என் ராசா இறங்கி நடந்தா அப்படியே சீமத்துரை மாதிரி இருப்பாரு.
…ம் … இந்த சிறுக்கி மகளுக்கு உன் கூட வாழ கொடுத்து வைக்கல ராசா” என்று சொல்லி வாயை பொத்திக் கொண்டு அழுதாள். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.
பாட்டியின் அழுகையை நிறுத்த தெரியவில்லை எனக்கு.
அதன் பிறகு நான் பேச ஆரம்பித்தேன்.
“ஏன் பாட்டி அவருதான் போய் இத்தனை வருஷம் ஆச்சு? வேறு ஒரு கல்யாணமும் பண்ணிக்கிட்டாரு. நீங்க …….” என்று இழுத்தேன்.
“ஆ ….அவங்க ஆம்பளைங்க. எத்தன கல்யாணம் வேணுனாலும் செஞ்சுக்கலாம். நாங்க பொம்பளைங்க. ஒருத்தனுக்கு ஒருத்தி தான் கடைசி வரைக்கும். நெனச்சுட்டே காலத்தை தள்ளிடுவோம். இந்த உசுர அவருக்காகதான் கையில புடிச்சு வச்சிருக்கேன்னு என்று சொல்லிப்புடுங்கோ” என்று சொன்னார் பாட்டி.
‘அந்தக் காலத்தில் இப்படி ஒரு காதலா?’ என்று நினைத்து அசந்து போனேன்.
இந்த நவீன காலத்தில் தொட்டதுக்கெல்லாம் டைவர்ஸ் கேட்டு புடிக்கலை என்று கோர்ட்டின் வாசலில் தவம் கிடக்கும் எத்தனையோ காதல் ஜோடிகளை நான் பார்த்து இருக்கிறேன்.
இந்த 40 வருடங்களாக தன் மனைவி மேல் உள்ள காதலை நகையின் வடிவில் பாதுகாத்து வந்த வேலுச்சாமியும், ’40 வருடமாக தன் கணவர் வருவார்’ என்ற நம்பிக்கையில் தன் காதலை பத்திரமாக பேணி பாதுகாத்து பூட்டி வைத்திருந்த பேச்சியும் இந்த ஜென்மத்தில் ஒன்று கூட முடியாது என்று தெரிந்திருந்த எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
வேலுச்சாமி இறந்து விட்ட செய்தியை கூட பேச்சியிடம் சொல்லாமல் அப்படியே அங்கிருந்து நகர்ந்தேன்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!