கற்றுக் கறவை கணங்கள் பலகறந்து என்ற பாடல் ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவையின் பதினொன்றாவது பாசுரம் ஆகும்.
கூட்டு வழிபாடு உடலுக்கும், உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி அளிக்கும். ஆதலால் கூட்டு வழிபாட்டில் பங்கு கொள்ள தோழியை அழைப்பதாக, உலக மக்களை ஆண்டாள் வலியுறுத்துகிறார் என்பதை இப்பாசுரம் விளக்குகிறது.
திருப்பாவை பாடல் 11
கற்றுக் கறவை கணங்கள் பலகறந்து
செற்றார் திறல்அழியச் சென்று செருச்செய்யும்
குற்றம்ஒன்றும் இல்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றர வல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாம் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி, நீ
எற்றுக்குறங்கும் பொருளேலோர் எம்பாவாய்
விளக்கம்
இளமையான கன்றுகளை உடைய பசுக்கூட்டங்களில் பாலைக் கறப்பதில் ஈடுபாடு கொண்டவர்கள்.
தமக்கு பகைவர்கள் தோன்றிவிட்டால் அவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று போர் புரிந்து அழிக்கும் ஆற்றலைக் கொண்ட குற்றமற்ற போர்வீரர்களைக் கொண்டவர்கள்.
இப்பண்புகளைக் கொண்ட ஆயர்குலத்தில் தோன்றி வந்த பொற்கொடி போன்றவளே!
புற்றிலே உள்ள நாகத்தின் படம் போன்ற மறைவிடத்தையும், காட்டில் உலவும் மயில் போன்ற சாயலையும் உடைய பெண்ணே எழுந்து வா.
உன்னுடைய வீட்டின் முற்றத்தில் நம்முடைய தோழியர் எல்லாம் ஆயர்பாடி சிறுமியர்கள் போல் ஒன்றுகூடி மேகத்தின் வண்ணத்தினை உடைய கண்ணனைப் பலபெயர்களில் போற்றி பாடி மகிழ்கின்றோம்.
நீயோ, எந்த அசைவும் இல்லாமல் இருக்கின்றாய். வாய்திறந்து பேசவும் மாட்டேன் என்கின்றாய்.
அப்படி என்ன பெருஞ்சோம்பல் உனக்கு? அர்த்தமற்ற இந்த உறக்கத்தினால் என்ன பலன் கிடைக்கப் போகிறது என்பதை நாங்கள் அறியோம்.
மறுமொழி இடவும்