அனந்தபுரி விரைவு ரயில் வண்டியில் இரவு பத்து மணிக்கு எல்லா இருக்கைகளும் படுக்கைகளாகி இருந்தன.
ஸ்வேதா தனது இருக்கை எண் ஏழில் அமர்ந்து அதே ரயிலில் மூன்று பெட்டிகள் தள்ளி அமர்ந்திருக்கும் தோழி தாமிராவிடம் அலைபேசி வழியாக பேசிக் கொண்டிருந்தாள்.
வாசலருகே அவன் ஸ்வேதாவை வெறித்தபடி நின்றிருந்தான்.
கரிய நிறம், கலைந்த கேசம், ஒரு திருடனுக்குரிய எல்லா தகுதிகளும் அவனிடமிருந்தன.
அலைபேசியின் பேச்சுகளுக்கிடையே தன்னை வெறித்துப் பார்க்கும் அவனை கவனித்தாள் ஸ்வேதா.
தனது கழுத்தில் கிடக்கும் ஒன்றைச்சங்கிலியை பறித்து விட்டு இறங்கி ஓட தயாராக இருப்பதுபோல் இருந்தது அவனது முகபாவனை.
“தாமிரா, இங்க ஒருத்தன் என்னையே உத்து பார்த்துகிட்டு நிக்கறான். அனேகமா திருடனாத்தான் இருப்பான். நீ டி.டி.ஆர்கிட்ட சொல்லி போலீசோட வா!” எதிரில் தாமிரா பேச்சை துண்டித்து செயலில் இறங்கினாள்.
அவன் அவளை நெருங்கினான்.
ஸ்வேதா எல்லா தெய்வங்களையும் வேண்டியபடி ‘டி.டி.ஆரும், போலீசும், தோழியும் வருகிறார்களா?’ என்று எட்டி பார்த்தாள்.
“ரொம்ப நேரமா பேசிகிட்டு இருந்தீங்க. எனக்கு வெயிட்டிங் லிஸ்ட்; பெர்த் கன்பார்ம் ஆகல. ஐஞ்சு நிமிஷம் உங்க சீட்டு ஓரத்துல இருந்து சாப்பிடட்டுமா?”
“ம், சாப்பிடுங்க!” சட்டென்று எழுந்து இடம் கொடுத்து எதிரில் நடக்க ஆரம்பித்தாள் ஸ்வேதா, வரும் டி.டி.ஆரையும் போலீசையும் தோழியையும் வேண்டாமென்று தடுக்க.
எம்.மனோஜ் குமார்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!