கலியுகம் குறும்படம் விமர்சனம்

கலியுகம் குறும்படம், ‘திறமை உள்ளவன் காலத்தால் நசுக்கப்படுவான். போலிகள் அனைத்துப் பயனையும் அனுபவிப்பார்கள்’ எனும் உலகியலை விளக்குகிறது.

இக்கால கட்டத்தில் சமூகத்தில், மனிதனின் நடத்தை, எல்லை மீறிய ஒழுங்கீனங்களை நிகழ்த்துவதை இயல்பாய் உணர முடிகின்றது.

காரணம், ‘நான் மட்டும் நலமாக இருந்தால் போதும்‘ என்ற சிறுமைத் தன்மையே ஆகும்

’பிறரின் வாழ்க்கைக்காகத் தாம் வாழ்வது’ என்ற அற வாழ்வையெல்லாம் குழி தோண்டிப் புதைத்து இருக்கிறது கலிகாலம்.

எப்படியாயினும், யாராயினும் சரி, ’எனது மேன்மை ஒன்றே என் கவனம்’ என்பது இன்று வேதவாக்காக ஒவ்வொருவருக்குள்ளும் பதிந்து விட்டிருக்கிறது.

இயந்திரத்தனமான பாசம், அடிமாட்டுக்கு விலை பேசும் வியாபாரம், ஈவு இரக்கம் இல்லா நேசம், சந்தர்ப்பம் தன்னில் அடித்துப் பிடுங்கும் அரக்கத்தனம், பிறர் திறமையைத் திருடிப் பிழைத்தல் என மனிதர்களின் அழுகிப்போன குணங்கள் குறித்த கதை பேசுகிறது இக்குறும்படம்.

கோடிக்கணக்கான அறநூல்களும், அறக்கருத்துக்களும் தோன்றிய புண்ணியபூமி இதுவானாலும், கலியுக மனிதர்களின் உலகம் புதிதாக உருவாகி இருக்கிறது.

இதில், வாழ்வின் அர்த்தங்கள் மாறியிருக்கின்றன. அவரவருக்கென்று அதிசயம் ஒன்றை நிகழ்த்துகின்றனர் இக்கலியுகத்தில் என்பதை அழகுற விளக்குகிறது இக்குறும்படம்.

குறும்படத்தின் கதை

போலிப் புகைப்படக் கலைஞர் ஒருவர், பிச்சைக்காரனாக ஒருவரை நடிக்க வைத்துப் பல புகைப்படங்களை எடுக்கிறார்.

புகைப்படங்களை ஒரு மாபெரும் விருதுப் போட்டிக்காக அவர் எடுக்கிறார். அப்போது திருடன் ஒருவன் கேமராவைத் திருடிக் கொண்டு ஓடி விடுகிறான்.

திருட்டுப் பொருட்களை வாங்கி விற்கும் ஒரு கடைக்காரரிடம் திருடன் கேமராவை விற்கச் செல்லுகிறான்.

அடிமாட்டு விலைக்குக் கேட்டதனால், தனக்குப் பயன்படும் என விற்காமல் செல்லுகிறான் திருடன்.

புகைப்படக் கலையில் மிகுந்த ஆசையுடைய திருடன், அந்தக் கேமராவில் தன் திறமையால் கலை நுட்பத்துடன் பல்வேறு புகைப்படங்களை எடுக்கிறான்.

எதார்த்தமாகக் கேமராவைத் தவறவிட்ட போலிக் கலைஞன் இவனைப் பார்த்து விரட்டிச் செல்கிறான்.

திருடன் கத்தியைக் காட்டக் ”கேமராவை நீ எடுத்துக்கொள். எனக்கு மெமரி கார்டை மட்டும் தா” என்கிறான். திருடன் அதைத் தந்து விடுகிறான்.

அதை வீட்டில் சென்று பார்க்கும் பொழுது, திருடன் எடுத்த புகைப்படங்கள் மிக நேர்த்தியாகவும், அற்புதமானவையாகவும் இருக்கின்றன. அதில் ஒன்றை விருதுப் போட்டிக்கு அனுப்புகிறான் போலிக்கலைஞன்.

திருடனின் தம்பி, கல்லூரிக்குப் பணம் கட்ட வேண்டும் எனக் கேட்க, கேமராவை மீண்டும் திருட்டுப்பொருள் விற்கும் கடைக்காரனிடம் கொடுத்துப் பணம் பெற்றுத் தம்பியிடம் கொடுக்கிறான்.

கேமராவை விற்க மனமில்லை என்றாலும், தன் தம்பிக்காக விற்கிறான். ஆனால் தம்பியோ அப்பணத்தைக் கொண்டு போய் சீட்டாடித் தோற்கிறான்.

தனக்காக வாழாமல், தம்பிக்காகத் திருடும் திருடன், கடற்கரையில் போலீஸாரால் கைது செய்யப்படுகிறான்.

புகைப்பட விருது போட்டியில், திருடன் எடுத்த புகைப்படத்தை போலிக் கலைஞன் அனுப்பியதால் வெற்றி பெறுகிறான்.

விருதும் பணமும் பெறுகிறான் போலி கலைஞன். ஆனால், கையில் விலங்குடன் திருடன் நிற்கிறான்.

இதோடு படம் முடிகிறது. ஆனால் மனம் நெருடுகிறது.

கலியுகம் குறும்படம் சிறப்புகள்

கதை கூறிய முறை பிற குறும்படங்களைக் காட்டிலும் மிக நேர்த்தியாக இருக்கிறது. ஓர் ஒழுங்குடன் பார்வையாளரை இக்கதை சென்றடைகிறது.

கதையின் உள்ளாக, மனிதர்களின் பேராசைகளை விரித்துக் கூற விளையாமல், இனம் மட்டும் காட்டிச் செல்லும் திறமை திரைக்கதைக்கு உரியதாக இருக்கிறது.

இயற்கையாக ஒன்றைப் படம் பிடிக்க வேண்டியவன், போலியாக ஒருவனை நடிக்க வைத்துப் புகைப்படம் எடுக்கிறான். உண்மைத் தன்மையற்றது அது.

கேமராவை வாங்கும் கடைக்காரனின் பேராசை.

அண்ணனை ஏமாற்றும் தம்பி.

காசுக்காகப் பிச்சைக்காரனாக நடிக்கும் ஒருவன்.

பிறர் எடுத்த படத்தைத் தம் படமாகக் காட்டி விருது வாங்கும் போலி கலைஞன்.

என மனிதர்களின் மாறான தன்மையைப் புரிய வைக்கும் திரைக்கதையின் தன்மை வெளிப்பாடு மிகத் திறமை வாய்ந்ததாகும்.

புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்த‌தால், வறுமை வாட்டி எடுத்தாலும், திருடன் கேமராவை விற்க மனம் இல்லாமல், அதில் ரசித்து ரசித்துப் புகைப்படங்களை எடுக்கும் காட்சிகள் சொல்ல முடியாத உணர்வுப் பெருக்காக அமைந்திருக்கின்றன.

தம்பிக்காகக் கேமராவை விற்று விட்டு வரும் பொழுது, திரும்பி ஒரு ஏக்கத்துடன் கேமராவைப் பார்க்கும் காட்சி, அடடா!!! ஈட்டி வைத்துக் குத்துகிறது மனதை.

‘வறுமையில் எதன் மேலும் பற்று வைக்கப் பாக்கியம் இல்லை’ என்பது தானே உலகியல் வழக்கு. அதை அப்படியே இக்காட்சியில் பொருத்திப் பார்க்கலாம்.

தம்பி எனும் கதாபாத்திரம் கொடூரமான கதாபாத்திரம். தன் அண்ணன் ஆசைப்படுகிற கேமராவை விற்றுத் தருகிறான் என்பதைத் தெரிந்திருந்தும் அதை வாங்கிச் சீட்டாடித் தோற்கிறான். என்ன மனநிலை உடைய உடன்பிறப்புகள் பாருங்கள்.

இங்கு ஒரு நேர்த்தியை இயக்குனர் செய்துள்ளார். தம்பிக் கதாபாத்திரத்தைக் காட்டாமலேயே காட்சி எடுத்திருப்பார். இதன் மூலம் இங்கு எதையோ சொல்ல விழைந்திருக்கிறார் இயக்குனர்.

கேமராவிற்குப் பணம் வாங்கும் பொழுதும், அந்தப் பணத்தில் 420 என்று எழுதப்பட்டிருக்கும். சீட்டாடும் போதும் அதில் வைக்கும் பணத்தில் 420 என்று பணத்தில் எழுதப்பட்டிருக்கும். குற்ற எண் இதைக் கட்சியினூடாகப் புகுத்தி இருப்பது நுணுக்கமான திறனாகும்.

‘திறமை இருக்கும் ஒருவன் ஜெயிக்க முடியாது. போலிகளும் கெட்டவர்களும் எப்படியாயினும் ஜெயிப்பர். அவர்களுக்குத் தான் இவ்வுலகம்’ என்பதை இன்னும் எத்தனை காலம் தான் பொறுப்பது என்ற வேதனையைக் குறும்படக் குழு சமூகத்தைப் பார்த்துக் கேட்கிறது.

திருடனாக நடித்த நடிகர் உணர்வுகளைக் கொட்டியிருக்கிறார். அற்புதமான வெளிப்பாடு. நடிப்புத்திறன் அதிகமாக அவரிடத்தில் இருக்கிறது.

இசையும் சில இடங்களில் அழகாகக் கதை சொல்லுகிறது. சோகம், ஆசை, விரக்தி, திண்டாட்டம் இவற்றிற்கெல்லாம் ஒலி வடிவம் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர்.

இக்குறும்படத்தின் மிகப்பெரும் பங்கு வசனமாகும். அற்புதமான வசனச் செறிவு. இரத்தினச் சுருக்கமாக, நறுக்கென்று வசனங்கள் கையாளப்பட்டுள்ளன.

இலைமறை காயாகக் கதை கூறியும், கதை புரிவது வசனத்தின் பெரு வெற்றியாகும்.

ரயில்வே ஸ்டேஷன் காட்சியும், விரட்டிச் செல்லும் காட்சிகளும் கேமரா கண்களுக்கு அருமையான தீனி ஆகும்.

2017 இல் வெளிவந்த இக்குறும்படம் பல்வேறு விருதுகளை எல்லாம் பெற்றிருக்கின்றது. அதற்குத் தகுதியான குறும்படம் தான் இது.

படக்குழு

எழுத்தாளர் – இயக்குனர்: ஸ்ரீராம் கே.ஜே.எஸ்

ஒளிப்பதிவாளர்: சாய் முனீஷ்

இசை இயக்குனர்: அமர் கீத்

எடிட்டர்: விக்னேஷ் குமார் & டி சுசீந்திரன்

உதவி இயக்குனர் – குஹான் குணசேகரன்

நடிப்பு: ராஜூ கண்ணா, அம்பிரிஷ் பிரசாத், பாலாஜி, பார்த்தசாரதி, கோபி, மகேஷ் பாலன்.

பட விமர்சனம் ஒன்று

‘சிறந்த படமாக்கல்; கதையின் ஓட்டம் நன்றாக இருக்கிறது; மேலும் நல்ல புகைப்படக்கலை’ என்று .. இவ்வாறு கூறுகிறது.

கலியுகம் குறும்படம் பாருங்கள்

(குறும்படம் விரியும்)

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@admin

2 Replies to “கலியுகம் குறும்படம் விமர்சனம்”

  1. என் நேற்றைய இரவை உறக்கமில்லாமல் இந்தக் கலியுகம் நீட்டிக்கச் செய்தது.
    நான் எப்போதும் கேட்கும் கேள்விதான்.
    சந்திரன் ஐயாவிற்கு எங்கிருந்து கிடைக்கின்றன இதுபோன்ற தீப்பொறிகள்?
    அவர் தீ வைத்து விட்டு அமைதியாகி விடுகிறார்.
    நான் அல்லவா எரிந்து போகிறேன்?

    ஏதேதோ சிந்தனைகள்…
    கடந்து வந்த பாதைகள்…
    கலியுகம் கற்றுத் தந்த பாடங்கள்…
    எல்லாவற்றையும் இந்த படத்துடன் பொருத்திப் பார்க்கிறேன்.

    படம் பார்த்து என்னுடைய புரிதலை நானே யோசிக்கும் முன்பு, அல்லது யாருக்காவது தெரிவிக்கும் முன்பு, சந்திரன் ஐயாவின் விமர்சனம் என்னை தடுக்கிறது.
    அவரின் கண் வழியே, மனம் வழியே, மொழி வழியே நான் உணர்ந்து அதில் கரைந்து, எனதென்று தனியே எதுவும் விமர்சிக்க முடியாமல் போகிறது.

    இரண்டு முறை இந்தப் படத்தை பார்த்த பின்பும் இந்தப் படத்தைப் பற்றி மேற்கொண்டு யோசிக்க முடியவில்லை. சந்திரன் அய்யா எல்லாவற்றையும் கவர் செய்து விடுகிறார்.
    ஆனால் இந்தப் படத்தைப் பார்த்து விட்டு கிளை கிளையாய் வேறு நினைவுகளில், ஓர் ஆழ்ந்த துக்கத்தில், இயலாமையில் மனது ததும்புகிறது.

    கடவுள் என்ற ஒரு சக்தி இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை; ஆனால் இருந்தால் நன்றாக இருக்குமே என்று கமலஹாசன் சொல்வது போல் எனக்கும் தோன்றுகிறது.

    ஐயாவுக்கும் இனிது பதிப்பகத்தாருக்கும் நன்றி; வாழ்த்துக்கள்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.