கலிய நாயனார் – தம் உதிரத்தால் விளக்கு எரிக்க முற்பட்டவர்

கலிய நாயனார் தான் செய்துவந்த விளக்கெரிக்கும் தொண்டிற்கு தேவையான எண்ணெய் வாங்க இயலாததால் தம்முடைய உதிரத்தால் விளக்கு எரிக்க முற்பட்ட வணிகர்.

பண்டைய தொண்டை நாட்டில் இருந்த சிறந்த தலங்களுள் ஒன்று திருவொற்றியூர். கடலின் அருகே அமைந்த இந்த நெய்தல் நிலத் திருத்தலத்தில் உதித்தவர் கலியனார்.

பிறப்பிலேயே செல்வந்தரான அவர் தம்முடைய குலத்தொழிலான எண்ணெய் ஆட்டி விற்கும் வியாபாரத்தில் சிறந்து விளங்கி பெரும் செல்வந்தராக விளங்கினார்.

அவருக்கு சிவனாரிடத்தில் இயல்பிலேயே பேரன்பு ஏற்பட்டது. ஆதலால் அவர் திருவொற்றியூர் திருக்கோவிலில் விளக்கு எரிக்கும் தொண்டினை இடைவிடாது செய்து வந்தார்.

அவர் இத்தொண்டினை நேரடியாகவோ அல்லது அவரின் பணியாட்களின் உதவியாலோ செய்து வந்தார்.

கலிய நாயனார் திருத்தொண்டின் சிறப்பினை உலகுக்கு எடுத்துக்காட்ட இறைவனார் திருவுள்ளம் கொண்டார்.

இறைவனார் திருவிளையாடல் புரியத் தொடங்கினார். இறைவனின் திருவிளையாடலால் கலிய நாயனாரின் செல்வவளம் குறையத் தொடங்கியது. எனினும் கலிய நாயனார் விளக்கு எரிக்கும் தொண்டினை இடைவிடாது மனம் கோணாமல் செய்து வந்தார்.

நாட்கள் நகர்ந்தன. சொந்தமாக எண்ணெய் ஆட்டி விற்கும் தொழிலில் சுணக்கம் ஏற்படவே கலியனார், மற்றவர்களிடம் எண்ணெய் வாங்கி விற்று அதில் வரும் லாபத்தில் விளக்கு எரிக்கும் தொண்டினைத் தொடர்ந்தார்.

சிலநாட்களில் அதிலும் லாபம் வராது போகவே, எண்ணெய் ஆட்டும் செக்கிற்கு கூலி வேலைக்குச் சென்று அதில் வரும் வருமானத்தால் விளக்கு எரிக்கும் திருத்தொண்டினைச் செய்து வந்தார்.

சிறிது நாட்கள் கழித்து கூலி வேலையும் கிடைக்கவில்லை. எனினும் அவர் மனம் தளராது தம்மிடமிருந்த வீடு உள்ளிட்ட சொத்துக்களை விற்று விளக்கு எரிக்கும் திருத்தொண்டினைத் தொடர்ந்தார்.

க‌லிய நாயனாரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முழுவதும் கரைந்து விடவே, விளக்கு எரிக்க எண்ணெய் வாங்கப் பணம் இல்லாமல் தம்முடைய மனைவியாருடன் திருவொற்றியூர் கோவிலை அடைந்தார்.

‘இறைவனே, விளக்கு எரிக்க என்னிடம் எண்ணெய் இல்லை. விளக்கு எரிக்கும் திருத்தொண்டு தொய்வடைய நேர்ந்தால் நான் உயிருடன் இருக்க மாட்டேன்.’ என்று மனதிற்குள் உருகினார்.

பின்னர் கத்தியால் தம்முடைய கழுத்தினை அறுத்து தம்முடைய உதிரத்தால் விளக்கினை நிரப்ப முயன்றார்.

தம்முடைய அடியாரை மேலும் சோதிக்க விரும்பாத இறைவனார் அம்மையப்பராக இடப வாகனத்தில் கலிய நாயனாருக்கு காட்சியளித்தார்.

கலிய நாயனாரும் அவருடைய மனைவியும் நிலத்தில் வீழ்ந்து வணங்கி எழுந்து இறைவனைத் துதித்தனர். இறைவனார் கலிய நாயனாருக்கும் அவருடைய மனைவியாருக்கும் நீங்காத பேரின்பமான வீடு பேற்றினை வழங்கினார்.

கலிய நாயனார் குருபூஜை ஆடி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

விளக்கு எரிக்கும் திருத்தொண்டிற்காக தன்னுடைய உதிரத்தை கொடுத்த கலிய நாயனாரை சுந்தரர் திருத்தொண்டத் தொகையில்கலியனுக்கும் அடியேன்‘ என்று போற்றுகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.